மனதை பலவந்தப்படுத்திக் கொண்டு, "ஏய், ஒன்னத்தான், பேசாம போயிக்கினே இரும்மே" என்றாள்.
ருக்குமணி வெடித்தாள் : "நான் என்ன எருமக்கடாவாடி ‘மே..'ங்கறே? இந்தப் பிள்ளாண்டானப்பத்தி ஒனக்குத் தெரியுமாடி? இதுக்கும் ஒரு சேரிப் பொண்ணுக்கும் தகராறு வந்து, அந்தப் பொண்ண, இது போலீசுல ஒப்படைச்சுது. போலீஸ்காரனுங்க என்னடான்னா அந்தப் பொண்ணுதான் என் குழந்தையக் கொன்னதா வழக்கு ஜோடிக்கப் போனாங்க. இது அநியாயம்னு தெரிஞ்ச இந்தப் பிள்ளாண்டான், பெரிய போலீஸ் ஆபீசருக்கிட்ட என்னையும், கட்டிக்கப்போற பொண்ணையும் கூட்டிக்கினுப் போயி, அந்தச் சேரிப் பொண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து. இன்னாப் பிரயோசனம்? கட்சீல, அந்த இன்ஸ்பெக்டர் சொன்னாப்புல அந்த ரத்தக்காட்டேரி - நன்றிகெட்ட நரி - அதான் அந்த சரோசாவோ, கிரோசாவோ, இந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சி, இப்படி அக்கிரமம் பண்ணிட்டாள் இந்த மவராசன் கொக்குக் கொத்தின நண்டு மாதிரி துடிக்குது. எப்படி இத அம்போன்னு விட்டுட்டுப் போக முடியும்?"
ருக்குமணி விம்மினாள். அங்கே நின்றவள், கைகளை நெறிப்பதையோ, இளங்கோவின் பக்கம் நெருங்கி அவனை மவுனமாகப் பார்ப்பதையோ, இவள் சரியாகக் கவனிக்க- வில்லை: இதற்குள் மீன்காரப் பெண்களும் அங்கே கூடிவிட்டார்கள். கூடைகளை இறக்கி வைத்துவிட்டு, அவற்றை காகங்கள் துழாவுவதையும் பற்றிக் கவலைப்படாமல், இளங்கோவின் பக்கம் போனார்கள். ஒருத்தி ஆலோசனை சொன்னாள் :
"உசிரு இழுத்துக்கிட்டுக் கெடக்குது. உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டுப் போனா பிழைச்சுக்கும். பாவம் இந்த பையனப் பார்த்தா அடாவடி மாதிரி தெரியல. இவன அடிச்சுப் போட்ட கம்மனாட்டிங்க மட்டும் என் கையில கெடச்சா மீன் முள்ளாலேயே அவங்கோ கண்ணக்குத்தி வெளியில இழுத்தப்பூடுவேனாக்கும். இப்போ காட்டி ஆசுபத்திரியில சேக்காக்காட்டி உசிரு பூடும்."
எல்லாப் பெண்களும் சேர்ந்து அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களையும், வாடகைக் கார்களையும் கையாட்டி, காலாட்டிப் பார்த்தார்கள். இறுதியில் ஒரு வேன் வந்து நின்றது. முன்னால் டிரைவர் இருக்கை கொண்ட கூண்டும், பின்னால் தார்பாய் மேல்வாக்கில் படர்ந்த ஒரு சின்ன வேன். அதற்குள் காய்கறிகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்தன.