ஏழெட்டுப்பேர் அந்த மூட்டைகளுக்கும், கூடைகளுக்கும் இடையே விரவி நின்றார்கள். மணல்மேட்டில் கிடப்பவனைப் பார்த்ததும், "தூக்கித் தாங்கோ, தூக்கித் தாங்கோ” என்றார்கள். கீழே நின்ற பெண்கள் இளங்கோவை ரத்தம் சிந்தத் தூக்கி மேலே கொடுக்க, அங்கே நின்றவர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஒரு மூட்டையில் அவன் தலையை ஒருக்களித்து சாய்த்து உட்கார்ந்த நிலையில் வைத்தார்கள். அந்த டெம்போ வண்டியில் ருக்குமணியும் ஏறிக்கொண்டாள். அங்கே நின்ற பெண்ணும் "நானும் ஒத்தாசைக்கு வாரேன்க்கா" என்று சொல்லியபடியே ஏறிக்கொண்டாள்.
அந்த வேன், கருண்டு வளைந்து ஓடியது. அங்கேயிருந்தவர்கள் ஏதோ பெரிய காரியம் செய்துவிட்டோம் என்ற பெருமிதமில்லாமல் அவனைப் பார்த்தார்கள். வெயிலில் காய்ந்து உறைந்து போயிருந்த ரத்தத்துண்டுகளைக் கண்டார்கள். கத்தரிக்காய் காம்பு ஒன்று அவன் பிடரியில் குத்தியதைக் கண்ட ருக்குமணி ஒரு கையை பின்னால் கொண்டுபோய் அவன் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். வேறுவழியில், போகப் போன வேன் டிரைவரை அந்த இருக்கையின் பிடரியில் தட்டித்தட்டி திரும்ப வைத்துப் பேசினாள்.
"இந்தப் பிள்ளாண்டான் எனக்குத் தம்பி மாதிரி. பெரிய இடத்துப் பிள்ளை. கொஞ்சம் அப்பால இதோட வீடிருக்கு. அங்க போய் அவங்கக்கிட்ட சொல்லணும். அப்புறமா ஆகவேண்டியதப் பார்க்கலாம். அண்ணாத்தே ஒன்னத்தான், வண்டியத் திருப்பு.”
பூக்காரப்பெண்ணுக்கு உதவியாக வேனில் ஏறியவள் இப்போது மிரண்டாள்.
நல்ல வேளையோ, கெட்ட வேளையோ கடிகாரம் கட்டிய ஒரு லுங்கிக்காரன் ருக்குமணிக்குப் புத்தி சொன்னான்:
"முதல்ல, இந்தப் பையன ஆசுபத்திரியில சேர்த்துடணும். நாம லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் இவன் உயிரு போய்கிட்டிருக்கிறதா அர்த்தம். ஏதோவொரு ஆசுபத்திரியில சேர்த்துட்டு, அப்புறமா அவங்க வீட்டுல போய் சொல்லிடு. இப்ப வீட்டப் பார்த்துப் போனா அப்புறம் அந்தப் பையன் காட்டப் பார்த்துப் போக வேண்டியிருக்கும்."
வண்டி லேசாய் நின்றது, பிறகு கடிகாரக்காரன் சொன்னால் சரியாக இருக்கும் என்பதுபோல் அது வேறு பக்கமாய் திரும்பி ஓடியது. ருக்குமணியும் யோசித்தாள். ‘அந்த வீட்டிற்குப்