ஜனங்கள் : அவனை இப்படி இழுத்துக் கொண்டு வாருங்கள்; இப்படி இழுத்து வாருங்கள், துஷ்ட ராஜனுக்குத் தகுந்த மைத்துனன்; உதையுங்கள்; கொல்லுங்கள், குத்துங்கள்.
(ஜனங்கள் வீரசேனனைக் கட்டி இழுத்து வருகிறார்கள்)
வீர : ஐயோ! ஐயோ! நாயை அடிப்பதைப் போல அடிக்கிறார்களே! கொல்லுகிறார்களே! என்ன செய்வேன்? யாரிடத்தில் உதவிக்குப் போவேன்? விரோதிகள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டார்களே! ஒன்றும் தோன்றவில்லையே! அதோ மாதவராயர் இருக்கிறார்! அவரை வேண்டிக் கொள்கிறேன். (அவர்காலில் விழுந்து) ஐயா! என்னை நீரே காப்பாற்ற வேண்டும். இவர்கள் என்னைக் கொல்லுகிறார்கள்.
ஜனங்கள் : ஸ்வாமி! அவனை இப்பால் உதைத்துத் தள்ளுங்கள். துஷ்டனை ஒழித்து விடுகிறோம்.
வீர : ஒ மாதவராயரே! இந்தச் சமயத்தில் எனக்கு உம்மைத் தவிர யாவரும் துணை இல்லை. காப்பாற்ற வேண்டும்! அபயம்!
மாத :வீரசேனா பயப்படாதே! நீ என்னை விரோதியாக மதிக்கிறாய். நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை.
சசி : இந்தக் கொலைப் பாதகனை அப்பால் இழுத்துக் கொண்டு போங்கள். ஸ்வாமி! இந்தப் பரம பாதகனை ஏன் காப்பாற்ற வேண்டும் - ஜனங்களே! இவனைக் கட்டி யானைக் காலில் உருட்டி விடுங்கள். இல்லாவிட்டால் வாளால் இவன் தேகத்தை இரண்டாய்ப் பிளவுங்கள். இவன் உயிருடன் இருந்தால், எத்தனையோ ஏழை ஜனங்களை வயிறெரியச் செய்வான்.
மாத : பொறுங்கள்! பொறுங்கள்! நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள்.
வீர : நற்குணமே நிறைந்த உத்தமரே! உம்மையே அடைக்கலமாய் நம்பி வந்தேன். என் உயிரைக் காப்பாற்றும். இனி உமக்கு நான் யாதொரு தீங்கும் நினைப்பதே இல்லை.