புதுப்பிக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு வேஷத்தையும் மாற்றிக் கொண்டான். கடலூரில் வாங்கிய, வேட்டி சட்டை. ஒருவேளை புடவையோடு போனால் நிராகரிக்கப்படுவோமோ என்ற பயத்தால் வாங்கிப் போட்டது. அதோடு, தன்னைத்தானே இப்போது புரிந்து கொண்டதால், அவனுக்கு அந்த வேட்டி சட்டையும் விகற்பமாகத் தெரியவில்லை. கொண்டைதான் ஒரு மாதிரி தெரிந்தது. பரவாயில்லை. அவன் தாத்தா வைத்திருந்த கொண்டைதான். அடிக்கடி முடியைக் கத்தரித்து, இதற்கென்றே வரும் ‘முடிக்காரனுக்கு’ அப்போதே ஒரு ரூபாய்க்கு விற்பாராம்.
சுயம்பு வீட்டை நெருங்க நெருங்க வேகப்பட்டான். இப்போது ஒவ்வொரு அடியும் ஒரு கிலோ மீட்டர் துாரமாகத் தோன்றியது. ஓடிப்பார்த்தான். அப்படியும் தூரம் குறையாதது போன்ற உளைச்சல். இன்னும் எவ்வளவு தூரம் என்பதுபோல் ஒரு குத்து மதிப்புப் போட்டான். இன்னும் அவ்வளவு தூரமா என்பதுபோல் ஓடி ஓடி நடந்தான். ஆனாலும் அந்த வேப்பமரத்தடிக்கு வந்தபோது, கால்கள் உடம்புக்கு நங்கூரமாயின. இப்படி துடித்த தான், இவ்வளவு நாளும், எப்படித்தான் இருந்தோம் என்று தன்னைத்தானே வியந்துகொண்டு நடந்தவன், இப்போது அந்த வேப்ப மரத்தடியில் நின்று தனது கேள்விக்கே விடை கண்டது போல் நிலைகுலைந்து வெந்து நின்றான். அந்த வீட்டை ஒன்றையே குறியாக வைத்து புதிய நாகரிகச் சுவடுகள் எதையும் கவனிக்காமல் நடந்தவன், திடீரென்று முடவனானான். அந்த வேப்பமரத்தைத் தோழமையோடு பார்த்தான். கிளைகள் அதிகமாக இல்லை. ஆங்காங்கே வெறும் குச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. அதன் தூர்கூடச் சொத்தை சொத்தையாய் தோன்றியது. பட்டைகள் தொட்ட உடனே கீழே விழுந்தன. ஆனாலும், அது அவனுக்கு ஒரு உயிர்தோழன் மாதிரி உறவாடுவது போலிருந்தது. காற்றில் அவன் தோளில் விழுந்த ஒரு வேப்பம்பழம் அவனைச் சாப்பிடுகிறாயா என்று கேட்டது போலிருந்தது. அவனும், அதைக் குசலம் விசாரிப்பது போல் அதன் அடிவாரத்தைச் செல்லமாகத் தட்டினான். தூரைக் கட்டிப்பிடித்து நின்றான்.
உடனடியாக, ஒரு நாய்ச் சத்தம். அவனைக் கடித்துக் காயப்படுத்த வந்த பெரிய நாய். அவனுக்கும் லேசாய் பயம் பிடித்தது. அந்த வேப்ப மரத்தில் ஏறலாமா என்றுகூட குதிகாலில் நின்றான். கைகளை மேல் நோக்கி எக்கினான். இதற்குள், வெள்ளையும் சொள்ளையுமான அந்த நாய் அவனைப் பார்த்து வாலை ஆட்டியது. முகத்தைக் குழைத்தது. அதன் வால் வயோதிகத்தில் தானாய் ஆடுவது போலிருந்தது. அவனைப் பொய்க்கடியாகவும் கடித்தது. பத்தாண்டுகளுக்கு முன் இருந்த அதே குட்டி நாய். அவன், அதைக் கண்டுபிடிக்கும் முன்பே அது கண்டுவிட்டது. வீட்டு வாசலை நோக்கி சிரமப்பட்டுக் குறைத்தது. வயோதிகம் அந்தக்