“இன்னும் கொஞ்ச நேரத்துல... அக்கா சாகப் போறேண்டா... நீ வருவே வருவேன்னு, ஒரு வருஷமா வழி பார்த்து காத்துக் கிடந்தேண்டா... ராத்திரியில் நாய் குலைக்கும் போதெல்லாம்... நீதான் வந்துட்டேன்னு, அக்கா பல தடவ ஓடோடி வந்து கதவத் திறந்தேண்டா... கண் நோகப் பார்த்தேண்டா... நீ வரலியேடா... இன்னைக்கு வராட்டால், நாளைக்கு வருவேன்னு இது வரைக்கும் பிடிச்சு வச்ச மூச்ச இன்னைக்கு ஒரேயடியாய் விடப் போறேண்டா... நானும் செத்து ஆவியாகி ஆகாயத்துல பறந்து உன்னைப் பார்க்க முடியுமான்னு யோசிக்கேண்டா... எனக்கு ஆவின்னு இருந்தால், அது ஒன்னத்தாண்டா சுத்தி வரும்.
“தம்பி... என் ராசாதி... ராசா... ஒன்ன விரட்டுன இந்த அக்காவ மன்னிச்சுடுடா... சத்தியமாச் சொல்றேண்டா... ஊரு ஒலகத்துல... நான் கலியாணம் நின்ன கவலையில தூக்கு போட்டு செத்ததாய் சொன்னாலும் சொல்லு வாங்க... எலும்பில்லா நாக்கு எப்படி வேணுமுன்னாலும் பேசட்டும். என் மனசு எனக்குத்தான் தெரியும்... என் உடன் பிறப்பே... ஒன்னப் பார்க்க முடியாத ஏக்கத்துல தாண்டா அக்கா சாகப்போறேன்... ஒன்ன நெனைச்ச நெஞ்சுக்கு எந்தக் கலியாணமும் கால்துாசிடா... இப்போ தூக்குக் கயிற எடுக்கப்போற இந்த சமயத்துலகூட நீ எப்பவாவது வருவேன்னு என் மனசுல பட்டால், இந்த உயிரு போகாதுடா... ஆனாலும் நீ வரமாட்டியே... அப்பாவ மாதிரி ஒனக்கும் வைராக்கியம் உண்டே... எப்பவாவது இந்தப் பக்கம் வந்தால்... இந்தத் தாளையே, நானா நினைச்சு வச்சுக்கடா... அக்கா போறேண்டா! ஒன்ன ஆவிரூபத்திலே தேடி வர்றேண்டா!”
சுயம்பு சூனியமானான். அப்படியே நிலைகுலைந்து கிடந்தான். அண்ணன் முதுகை உலுக்கியதும் அவனுக்கு லேசாய் உணர்வு, கண்ணீரால் நனையப்போன அந்தக் கடிதத்தை அண்ணனிடம் கொடுத்து அதை மடித்துத் தரும்படி சைகை செய்தான். அண்ணன் அந்தக் கடிதத்தை அவன் சொன்னபடியே மடித்து அவன் பைக்குள் போட்ட போது, சுயம்பு அந்தக் கையையும் பையையும் ஒரு சேரப் பிடித்தபடியே அண்ணனின் முழங்கையில், முகம் போட்டு தேய்த்தான்.
எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக விசும்பினார்கள். பிள்ளையார்தான் தட்டுத் தடுமாறி ‘என் தம்பிய கூப்பிடுங்க. சந்தோஷப்படுவான்...’ என்றார். ஆறுமுகப் பாண்டி, “நீ சேல வேணும்னாலும் கட்டிக்கடா. ஆனால். இனிமேல் நீ என்கூடத்தாண்டா இருக்கணும்...” என்றார்.