வைக்கேன். மோகன். இங்க வாடா. என் மருமகளே நீயும் இவனும் இப்படித்தான் தோராயமா இருப்பீங்கன்னு உங்களுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்...”
பிள்ளையார், இப்போது கொஞ்சம் தெளிவாகப் பேசினார்.
“நாங்களும் ஒன்ன படாதபாடு படுத்திட்டோம்... அப்புறம் டாக்டருக்கு படிக்கிற பையன் டேவிட் சொன்னப்புறம்தான் எனக்கே புரிஞ்சுது... நீ தனிப் பிறவியாம்... நீ போன வேகத்துலய சேலையக் கட்டிட்டு வந்திருந்தாக்கூட சேர்த்திருப்பேன். நீ எந்தத் திசையில போனேன்னுகூட தெரியாம போச்சே ஒரு லட்டர் போடக்கூடாதாடா? இவ்வளவு பணமும் ஏதுடா...”
“நான் ஒங்க ரத்தம்பா, கட்டுக்குத்தகைக்கு எடுக்கிற நிலத்து வெள்ளாமையில கால்படிகூட அதிகம் எடுக்காதவருக்குப் பிறந்தவன். ஒரு பைசாகூட தப்பான வழியில சம்பாதிக்கல. இப்போ டேவிட் எங்க இருக்கார். அந்த ஆம்பளப் பசங்க எப்படி இருக்காங்க...”
“டேவிட் ஆரம்பத்துல வந்தான்... என்னமோ இங்க யாரும் முகம் கொடுத்து பேசுறதில்ல. அந்தப் பயல்களும் ரெண்டு மூணு தடவை வந்தாங்க. அதோட சரி.”
“மலர் எப்படி இருக்காள் மோகனா...”
“எவனோ இழுத்துட்டுப் போயி அலக்கழிச்சு பிள்ளையும் வயிறுமா விட்டுட்டான். என்ஜினியர்னு நம்புனாள். புளியமரத்தைப் பிடிச்சேன்னாள். கடைசியல அதுல தூக்குப் போடாம ஓடி வந்துட்டாள்.”
சுயம்பு எழுந்தான். அக்காள் இருந்த அறையைப் பார்த்து நடந்தான். அந்த அறையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அந்த இடத்திலேயே பீரோ, தூசி படிந்து கிடந்தது. அக்காளின் படம் வாடிப் போன மாலையோடு தொங்கியது. அவன் தனித்திருக்க, அந்தக் கதவைச் சாத்தப் போனபோது, கோமளமும், மோகனாவும் கைகளைப் பிசைந்தபடி அங்கே வந்தார்கள். அவன் ஒருத்தருக்குப் பேசுவது இன்னொருத்தருக்கு அர்த்தம் புரியாததுபோல், பொதுப்படையாகச் சொன்னான்.
“கவலைப்படாதீங்க... நீங்க ரெண்டு பேரும் செய்த காரியங்களைப் பற்றி நான் யாருகிட்டயும் மூச்சு விட மாட்டேன். என் மனசுல கூட திருப்பி வரவழைச்சு யோசிக்க மாட்டேன்.