பிரியப் போன இடத்தில் மேகலை லேசாய் நின்றாள். அப்போது “ஒம்போதுகடா... எல்லாம் கில்ட் நகைடா” என்ற பேச்சு. அந்த ஏரியாவுக்கு முன்பு சம்பந்தப்படாதவர்கள் மாதிரியான நாகரிக உடைக்காரர்கள். லட்சுமி திட்டப் போனபோது சிரிப்பாய் சிரித்தவர்களை எரித்துப் பார்த்தபடியே, மேகலை, அவள் உள்ளங்கையை அழுத்தினாள்... லட்சுமியின் வாயை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் அது தான் ஸ்விட்ச் என்பதுபோல். மேகலை, நல்ல சாலை போடப்பட்ட அந்தப் பகுதியை நின்று கவனித்தாள். மளிகைக்கடை, இப்போது பல்பொருள் அங்காடியாய் மாறிவிட்டது. அதே கடைக்காரர்தான். உடையில் மாற்றமில்லை. ஆனால் தோரணையில் ஒரு துரைத்தனம். தொலைவில் தெரிந்த அப்போதைய பளிங்குக் கட்டிடம். இப்போது அக்கம் பக்கமும் கிளைவிட்டு ஒரு குட்டி நகரமாகத் தோன்றியது.
மேகலை, அந்தச் சேரியின் சேரிக்கான வளைவுப் பாதைக்குள் திரும்பினாள். உதட்டைச் சப்புக் கொட்டினாள். மாற்றம் ஏதுமிருந்தால், அது மோசமான மாற்றம். அதே குட்டை. அநேகமாக அப்போதைய தண்ணிர்தான். பல மடங்கு நாற்றம் கொசுக்களின் தொகையும் மக்கள் தொகையைப்போல் பெருகியிருந்தது. அதே எலிவளைப் பொந்துகள், அதே கோழிக்கதவுக் குடிசைகள், அதே தகர டப்பா சுவர்கள்.
சிறிது பின்வாங்கிய தோழிகளை இழுத்துப் பிடித்த படியே, மேகலை, ஊரில், வீட்டுக்குப் போன வேகத்தைப் போல் ஒரு வேகத்துடன் நடந்தாள். அங்கிருந்த எல்லா அலிகளும், கும்பல் கும்பலாய் ஓடி வந்தார்கள். மேகலை, முதலில், தெரிந்த மேட்டுக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள். புடவையின் உட்பக்கத்தை வெளிப்பக்கமாக்கி, ‘புதுச்சேலை’ கட்டிக்கொண்டிருந்த குருவக்கா, சிறிது அசந்து நின்றாள். பிறகு புடவை முனையை அப்படியே விட்டுவிட்டு “அடியே என் ராசாத்தி” என்று கட்டிப் பிடித்துக் கொண்டாள். அந்த அணைப்பின் சுகத்தோடு, மேகலை, அவள் தோளில் கிடந்தபோது, அவள் தோழிகள் கொசுக்கடித்த கால்களை ஒன்றோடொன்று தேய்த்தார்கள். நீலிமா தன்னை இம்சை செய்த கொசுக்களை டோலக்கை அடித்து அடித்துத் துரத்தப் போனாள்.
மேகலை, குருவக்காவின் தோளிலிருந்து விடுபட்டு லேசாய்க் கேட்டாள்.
“எங்கம்மா... எப்படி இருக்காள்?”