ஏழெட்டு போலீஸ்காரர்கள், அவர்கள் மத்தியில் இடுப்பில் துப்பாக்கி வைத்த இன்ஸ்பெக்டரோ சப் இன்ஸ்பெக்டரோ. எஞ்சியவர்கள் கையில், லத்திக் கம்புகள் ‘மிஞ்சின’. அவர்களின் கனமான பூட்ஸ் கால்கள் ஆங்காங்கே பள்ளங்களை ஏற்படுத்தின. துப்பாக்கி அதிகாரி, லத்திக்கம்பை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே குருவக்காவைப் பார்த்துக் கேட்டார்.
“இந்தப் பொட்டைங்கள எப்போடா இறக்குமதி செய்தே... இந்தத் தொழிலுக்கு ஆளு பத்தலையா?”
குருவக்காவும், பச்சையம்மாவும் பதறிப்போய் எழுந்தார்கள். “உட்காருங்க சார்... உட்காருங்க சார்...” என்று தங்களது நாற்காலிகளை அவர்கள் பக்கமாய் இழுத்துப் போட்டார்கள். துப்பாக்கிக்காரர் மேகலையை ஏற இறங்கப் பார்த்தார். அவள், தன்னையோ, தனது துப்பாக்கியையோ அங்கீகரிக்காததில் ஒரு ஏமாற்றம், கர்வபங்கம்.
“அந்தப் பொட்டப்பயல் எழுந்திருக்க மாட்டானோ! எதுவும் எக்ஸ்ட்ராவா மொளச்சிருக்கோ... டேய், பொட்டை! வாடா இங்கே!”
மேகலை, நிதானமாக எழுந்தாள். அவளைப் பிடித்திழுத்த டில்லிக்காரிகளை உதறித் தள்ளிவிட்டு, அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். இடுப்பில் கை வைத்த படியே ஒரு சந்தேகம் கேட்டாள்.
“நீங்க போலீஸ்தானே! இந்த காக்கி யூனிபாரம் உங்கதுதானே!”
துப்பாக்கிக்காரர் கோபத்தை அடக்கிக்கொண்டு, மேகலையைப் பேசவிட்டார். சரிந்து போகப்போன லத்திக் கம்புகளை கையமர்த்தினார்.
“எதுக்குக் கேட்டே முன்னால், போலீஸ்காரங்களை ‘உங்கள் நண்பன்’னு சொல்லுவாங்க... ஒரு குடிமகனையோ, மகளையோ ரெண்டுமே இல்லாமப்போன எங்களையோ மரியாதை போட்டு பேசணுமுன்னு சட்டம் சொல்லாமச் சொல்லுது. அதனால்தான் கேட்டேன்! நீங்க போலீஸ்காரங்களா தெரியலை; ஒருவேளை போலீஸ்ல இருந்து காக்கி யூனிபாரத்தை திருடுன பொறுக்கிப் பசங்களாய்...”