“ஏதோ இருக்காள்.”
“எப்படிக்கா என்னை அடையாளம் கண்டே...”
“நாங்க நெனச்சாக்கூட ஒன்ன மறக்க முடியாதுடி. நாங்கதான் ஒன்ன கடத்துனோம்னு போலீஸ்காரங்க எங்களப் படுத்தன பாடு... அடிச்ச அடி... அவனுவ வீட்டிலயும் ஒரு பொட்டை விழ. இப்போகூட பழைய கேஸ் இருக்குதுன்னு புதுப் போலீஸ்காரன் கூட கேப்பான். அவங்களே ஒன்ன அடிச்சுக் கொன்னுருப்பாங்களோன்னு எங்களுக்கும் பயம். அந்தப் பயத்தை பயந்துகிட்டே சொன்ன பிறகுதான் போலீஸ்காரன் எங்கள விட்டு வச்சான்.”
“ஒங்கள ரொம்ப சிரமப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடுங்க...”
“நீதான் எங்கள மன்னிக்கணும். ஒரு தடவ ஒன்ன டில்லியில் காருக்குள்ள பார்த்ததாய் பத்தாவது வகுப்புக் காரி பாத்திமா சொன்னாள். டில்லியில டி.வி.யிலயும் பார்த்ததா சொன்னாள். நான் நம்பலை.”
“அவள் எங்கே இருக்காள் குருவக்கா?...”
“அஞ்சு வருஷத்துக்கு முன்னால பம்பாய் போனாள். ஒன்ன மாதிரி நல்லா ஆனாளோ, இல்ல எங்களமாதிரி பீச்சு பீச்சா திரிஞ்சுட்டு அலையுறாளோ... அக்காளால இப்ப முடியலைடி... நம்மளுல ஒன்ன மாதிரி ஆயிரத்துல ஒன்றுதானே கரையேறுது... அந்த வகையில எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்படிச் சந்தோஷப் பட்டது, ஒரு தடவ எங்கம்மா இங்க வந்து என்ன பார்த்துவிட்டுப் போனபோதுதான் இப்போ என் மகள் வந்திருக்காள்.”
மேகலை, குருவக்காவின் தலையை நிமிர்த்தினாள். நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த தோழிகளைப் பார்க்காமலே, அவள் நெற்றியில் முத்தமிட்டாள். முகம் மேடுபள்ளமாகிவிட்டது. பழைய அழகு கலைந்து போனது. புருவங்களுக்குக் கீழே கருப்புத் திட்டுகள். அசத்தலான கண்கள் இருந்த இடத்தில், வெறும் குழிகள். முர்கே மாதா பழைய குருவக்கா எங்கே போனாள்... உடம்பைக் குலுக்காமலே பேசுவாளே... இப்போது அந்தப் பேச்சின் வேகம் தாங்காமல், உடம்பு தானாய் குலுங்குதே. அதே அந்த சிரட்டைப் பொட்டு முகம். எப்படி சில்லு