(Reading time: 49 - 98 minutes)

குறுநாவல் - கடைசி வரை கடமை – பூபதி கோவை

kadaisi varai

செப்டம்பர்-24

ஹுசைனிவாலா (இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லை) – பஞ்சாப். 

இரண்டடுக்கு இரும்பு முள்வேலி உலக வரைபடத்திலிருந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றது.

நேரம் நள்ளிரவு 12.45-ஐக் கடந்திருந்தது. கடும் பனிப்பொழிவின் காரணமாக, ஹுசைனிவாலா சர்வதேச எல்லை முழுவதும் ஒரு பனிப்பிரதேசம் போல காட்சியளித்திருந்தது. அந்தக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், துப்பாக்கியேந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் நாலாப்புறமும் ரோந்துப் பணியில் தீவிரம் காட்டியிருந்தனர். 

பதுங்குக் குழிகளில் ஏறி இறங்கியவாறே, தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தான் ஜாஃபர் காதிம் என்ற அந்த இருபத்தைந்து வயது இராணுவ இளைஞன். 

“ஜாஃபர்... ஜாஃபர்...” என்று மேலே இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பி மேலே பார்த்த ஜாஃபர் புன்னகைத்தான்.

மேலே அவன் நண்பன் வீர் பிரதாப்சிங் ஆர்யா, கையில் 9MM உயர் ரக ரைபிள் துப்பாக்கியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசு, அவனை ஒரு சீக்கிய இளைஞன் என்று இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியிருந்தது.

BSF பயிற்சி முகாமில் ஒன்றாகப் படித்து, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களாக பணியமர்த்தப்பட்டிருந்த அவர்கள் இருவரும், அந்த கனமான இராணுவ உடைக்குள் தங்களை கச்சிதமாகப் பொருத்தியிருந்தார்கள்.

“டேய் ஜாஃபர் … வா...! சீக்கிரம் போகலாம். ” என்றான் ஆர்யா.

“ ஆர்யா! ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. ” என்று பதுங்குக் குழியில் இருந்து கைகளை மேலே வைத்து ஏறுவதற்காக முயற்சித்தான் ஜாஃபர்.

அவன் கையைப் பிடித்து மேலே தூக்கிய ஆர்யா,

“ஜாஃபர்... நேரம் ரொம்பக் குறைவாக இருக்கு... நாம போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு. சீக்கிரம் வா...” என்று ஜாஃபரைத் தட்டிக் கொடுத்தவாறே அந்த இடம் முழுவதையும் கண்களால் அலசிக் கொண்டே முன்னேறியிருந்தான் ஆர்யா.

அந்த மயான அமைதியிலும், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களின் காலடிச் சத்தம் மட்டும் தனியாகத் தெரிந்தது. 

சற்று நேர இடைவெளியில், தண்ணீர் குடிக்கும் இடம் வந்தது. பாதுகாப்புப்படை வீரர்கள் ஒவ்வொருவராக அங்கு வருவதும் போவதுமாக இருந்தனர்.

அங்கு வந்த இளைப்பாறிய ஜாஃபர், ஆர்யாவைப் பார்த்து பேசத் தொடங்கினான்.

“ஆர்யா... ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு நெனெச்சேன். உங்களோட பாரம்பரிய தற்காப்புக் கலையைப் பற்றி நான் நெறையா கேள்விப் பட்டிருக்கேன். அதைப்பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.“

அவனைப் பார்த்து புன்னகைத்த ஆர்யா, 

“ஜாஃபர்... அந்த தற்காப்புக் கலையோட பெயர் “கட்கா”. சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலை. “

“அதில் அப்படியென்ன சிறப்பு இருக்கு ஆர்யா?” என்றான் ஜாஃபர்.

“ "கட்கா” – இது ஒரு ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற தற்காப்புக் கலை. எப்படிப்பட்ட அபாயக் கட்டத்தில் இருந்தாலும், நம்மை நாம் தற்காத்துக் கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான யுக்திகள் இந்தக் கலையில் இருக்கு ஜாஃபர்... " என்று முடித்தான் ஆர்யா..

“ஓஹோ! அப்படியா...?”

“ஆமாம் ஜாஃபர்... உன்னோட வலிமையை உனக்கே உணர்த்துவதுதான் இந்தக் “கட்கா” கலையோட சிறப்பு. எப்பேர்ப்பட்ட வீரானாக இருந்தாலும் அவனை எதிர்கொள்ள தேவையான மன வலிமையை நாம் வளர்த்துக்கொள்ள உதவும் தற்காப்புக் கலை தான் இது.”

“ஆர்யா...! கண்டிப்பாக நானும் அந்தக் கலையைக் கத்துக்கணும்னு ஆசைப் படறேன்.”

“ஹ்ம்ம்..! நிச்சயமாக ஜாஃபர்! ...”

சற்று வெதுவெதுப்பாக இருந்த தண்ணீரைக் குடித்திருந்த அவர்கள் இருவரும், ஒரு ஐந்து நிமிட ஓய்வுக்குப் பிறகு கிளம்பத் தயாராயிருந்தார்கள். மூடுபனியின் வீரியம் இன்னும் அதிகரித்திருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியபடி வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள் இருவரும். 

அடுத்த சில மணி நேரங்களில், சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ராவின் இராணுவ வாகனம் இவர்களைக் கடந்து சென்று முன்னே நின்றது. அதிலிருந்து இறங்கிய அவர், அங்கிருந்த இராணுவ வீரர்களை நோக்கி பேச ஆரம்பித்திருந்தார். அங்கு கூடியிருந்த அனைவர் மனதிலும் ஒரு வித ஆச்சர்யம் கலந்திருந்தது. உடனே, அவரை நோக்கி நெருங்கிய ஜாஃபரும் ஆர்யாவும்,

“ BSF – கான்ஸ்டபிள் வீர் பிரதாப்சிங் ஆர்யா ரிப்போர்ட்டிங் சார்...! “

“ BSF – கான்ஸ்டபிள் ஜாஃபர் காதிம் ரிப்போர்ட்டிங் சார்...! “

என்று சல்யூட் அடித்தவாறே நின்றார்கள்.

அவர்களின் சல்யூட்டை ஏற்றுக் கொண்ட சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ரா, அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்த கம்பீரமான தொனியில் பேச ஆரம்பித்தார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.