(Reading time: 49 - 98 minutes)

“இல்ல சார்.... இது சாதாரண மிரட்டல் மாதிரி தெரியலை சார். ஒரு செல்போன் TOWER இன்ஜினீயர், அவரோட போன்ல RECEIVE ஆன CROSS TALK CALL DETAILS-ஐ ரெக்கார்ட் பண்ணி கொண்டு வந்துருக்கார் சார்... விஷயம் கொஞ்சம் விபரீதமாகத்தான் சார் இருக்கு. ”

சற்றே முகம் மாறிய போலிஸ் இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா,

“ஓகே.. குர்தாஸ்... நான் கெளம்பிட்டேன்... நான் இன்னும் சரியா பதினைந்து நிமிடத்துல ஸ்டேஷன்ல இருப்பேன்... அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருங்க …” என்றவர் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்தார். போலிஸ் ஜீப் வேகமெடுத்திருந்தது.

செப்டம்பர்-25.

ஹுசைனிவாலா எல்லை.

அதிகாலை மூன்று மணி. கண்காணிப்பு கோபுரத்தின் மேல் அமர்ந்திருந்த அந்த இராணுவ வீரன், எல்லையின் ஒவ்வொரு நிகழ்வையும் தன் குறிப்பேடுகளில் உடனுக்குடன் பதிவு செய்து, கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தான். 

தலையில் மாட்டியிருந்த ஹெட்லைட்டின் வெளிச்சத்தால், எல்லையை ஒட்டிய பகுதிகளை பைனாகுலர் வழியாக பார்த்துக் கொண்டே முன்னேறியிருந்தான் ஜாஃபர். அவனை இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்திருந்த ஆர்யா, சந்தேகத்திற்கிடமான பகுதிகளை அலசி ஆராய்ந்து கொண்டே வந்து கொண்டிருந்தான். 

“ஆர்யா... இன்னிக்கு நியூஸ் பாத்தியா?” .

“ஹ்ம்ம்.. பார்த்தேன்... என்ன விஷயம் ஜாஃபர்…???”

“டெல்லி எக்ஸ்-ஆர்மி மேஜரோட பொண்ணு, அவங்க அப்பாவ பாகிஸ்தான் இராணுவம் கொல்லலை... போர் தான் கொன்னுடுச்சுன்னு வருத்தத்தோடு சொல்லிருக்கு...” என்றான் ஒருவித எரிச்சலோடு.

“ஆமாம் பார்த்தேன் ஜாஃபர்...! அந்தப் பொண்ண நெனைச்சா இன்னும் வேடிக்கையாத்தான் இருக்கு. அவங்க அப்பா இந்த நாட்டுக்கு ஆற்றுன தியாகம் சொல்லில் அடங்காது.”

“அதைவிட இந்திய ராணுவம் நடத்திய “SURGICAL - STRIKE”-க்கு ஆதாரம் கேட்குறானுங்க ஆர்யா...! இதை யார்கிட்ட சொல்ல ஆர்யா?”

“விடு ஜாஃபர்... அரசியல்வாதிகள்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்??”

“அது எப்படி ஆர்யா..?? இங்க இத்தனை பேர் கடும் குளிரையும், சுட்டெரிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாம நாட்டுக்காக எல்லையில் பாடுபட்டு உயிர்த் தியாகம் பண்றாங்க... ஆனா அதைக் கொஞ்சம் கூட மதிக்காம, நாக்கில நரம்பில்லாம பேசுறாங்களேடா... இதுக்காகவாடா நாம இவ்வளவு கஷ்டப்படறோம்…???”

“ஜாஃபர்... விடு! நீ இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே..! எல்லாரும் ஒரே மாதிரி இருக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியாது. மாவீரன் பகத்சிங்கின் உடல் புதைக்கப்பட்ட மண்ணில் இப்ப நாம நின்னுட்டு இருக்கோம். அதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டு, பலனை எதிர்பாராது நாம் நம் கடமையை செய்வோம். எல்லோரும் நம்மைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு நாள், சீக்கிரம் வரும்... மனசை தளரவிடாதே.... ” என்ற ஆர்யா பைனாகுலர் வழியாக தன் பார்வையை செலுத்தியிருந்த அடுத்த கணம் ,

எதிர்முனையிலிருந்து பயங்கர சப்தத்துடனும், அசுர வேகத்துடன் வந்த ஒரு தோட்டா, ஜாஃபரின் வலது தோள்பட்டையை உரசிச் சென்றது. ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்ட இருவரும், ஓட ஆரம்பித்து பதுங்குக்குழிகளில் பொத்தென்று விழுந்தார்கள். இருவருக்கும் கை கால்களில் பலத்த அடி. 

வலியைப் பொறுத்துக் கொண்டு இருவரும் எழுந்து மேலே பார்த்த நொடி,

எதிர் முனையிலிருந்து பயங்கரவாதிகள் மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடியே முன்னேறி வந்துகொண்டிருந்தார்கள்.

சற்றும் எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த நமது இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் தங்கள் பங்கிற்கு பதில் தாக்குதலில் தீவிரம் காட்டியிருந்தனர். 

ஜாஃபரின் தோள்பட்டையில் இருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியிருந்தது. வேறு வழியின்றி தன் தலையில் கட்டியிருந்த முண்டாசை கழற்றியிருந்த ஆர்யா அவன் தோள்பட்டையில் இறுக்கமாகக் கட்டினான்.

இருபுறமும் கடுமையான துப்பாக்கிச் சண்டை. நாலாப்பக்கமும் தோட்டாக்கள் சிதறிய வண்ணம் இருந்தது. சற்று நேரத்தில் போர்க்களமாக மாறியிருந்த அந்த இடம், ஒரு கட்டத்தில் பயங்கரவாதிகளின் கைகள் ஓங்கி இருந்த சமயம்,

ஜாஃபரின் காதில் ஏதோ முணுமுணுத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்த ஆர்யா, தீவிரவாதிகளின் பார்வை தன் மேல் படும்படியாக, பந்தயக் குதிரைபோல் எதிர்திசையில் வேகமாக ஓட ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயங்கரவாதிகள், ஆர்யாவை நோக்கி தங்கள் தோட்டாக்களை செலுத்தியிருக்க, ஆர்யாவின் வேகம், தோட்டாக்களின் வேகத்தை விட பன்மடங்கு அதிகமிருந்தது. "கட்கா" கலையில் கற்ற மன உறுதி, அவனை விடாமுயற்சியுடன் ஓட வைத்தது. 

பயங்கரவாதிகளின் கவனம் சிதறியிருந்த சமயம், ஜாஃபரின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டா, அங்கிருந்த ஒருவனின் தலையை பதம் பார்த்திருந்தது. அடுத்த சில நொடிகளில், மற்ற இருவரையும் எல்லைப் பாதுகாப்புப் படை வீர்கள் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.