(Reading time: 49 - 98 minutes)

“எத்தனையோ பிரச்சனைகள் இருந்தாலும், நாடுன்னு வரும்போது, அது எல்லாத்தையும் மறந்து, ஒரு இந்தியானாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நாங்க இருந்திட்டு இருக்கோம்... நாங்க இனிமேலும் அப்படித்தான்... ஆனா உன்ன மாதிரி, சில தேசவிரோதிகள் இதைப் பயன்படுத்தி, எங்களுக்குள்ள மதத்துவேசத்த உண்டு பண்றீங்க... அது இனிமேல் பலிக்காது... நாங்க முழிச்சுகிட்டோம்...” என்று உணர்ச்சிமிகப் பேசினான் ஜாஃபர்.

இதைக் கேட்ட அந்த கும்பலின் தலைவன் அகோரமாய் கத்தினான்.

“அப்படியானால், சாகத் தயாராக இரு...” 

அவனைப் பார்த்து பரிகாசமாய்ச் சிரித்த ஜாஃபர்,

“இந்த உயிர் என்றைக்காவது ஒருநாள், இந்த உடலை விட்டு பிரியத் தான் போகின்றது... சாகப் போறதைப் பத்தி நான் கவலைப் பட வில்லை. நான் இராணுவத்தில் சேர்ந்த முதல் நொடியே, என் உயிரை என்றைக்கோ இந்தியாவுக்கு அர்ப்பணித்து விட்டேன். 

வெறும் இருபத்தி மூன்று வயதில், இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டு, தூக்குக் கையிற்றை ஏற்ற பகத்சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்ட இந்த மண்ணில், சாவதை நினைத்து நான் பெருமைப் படுகிறேன்.

ஆனால்….” என்று பேச்சை நிறுத்திய ஜாஃபர் மீண்டும் தொடர்ந்தான்.

“தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக முளைத்திருக்கின்ற, உன் போன்ற புல்லுருவிகள் என் கண் முன் நின்றிருக்க, என் உயிர் என்னைவிட்டுப் பிரிவதை நான் ஒருகாலும் விரும்பவில்லை. உன்னைப் போன்ற தேசத் துரோகிகள் வேரறுக்கப்பட வேண்டும். எங்கள் கைகள் கட்டுண்டிருக்கின்றது... ஆனால் உனக்கான நேரம் வெகுசீக்கிரத்தில்... ” என்று நரம்புகள் முறுக்கேற திமிறினான்...

"இதோ... நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்..." என்ற அந்த கும்பலின் தலைவன், கத்தியை வாங்கி ஜாஃபரின் மார்பில் இரண்டு முறை பலமாக இறக்கியிருந்தான். ஜாஃபரின் மார்பில் இருந்து இரத்தம் பீறிட்டு கிளம்பியிருந்தது. 

அடுத்த கணம், யாரும் எதிர்பாராத சமயம், கண்ணிமைக்கும் நேரத்தில் வீறிட்டு எழுந்த ஆர்யா, தன் வலது கையால் பின்னால் நின்றிருந்தவனின் கழுத்தில் ஓங்கி அடித்தான். ஒரு வினாடி திக்கு முக்காடிப் போன அவன் மூர்ச்சையற்றுக் கீழே விழுந்தான். கட்கா கலையில் கை தேர்ந்த ஒருவன் அடித்த அடி போல் இருந்தது அந்த அடி. கத்தியோடு அவனை நோக்கி வந்த மற்ற இருவரையும், தன் முஷ்டியால் அவர்களின் அடி வயிற்றில் பலமாக குத்தினான். அது அவர்களின் உயிர்நாடியையே அசைத்து விடும் போல் இருந்தது. 

ஆர்யாவின் வேகத்தைப் பார்த்து வியந்த அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தன் பங்கிற்கு, கீழே விழுந்தவர்களை முன்னேறவிடாமல் பார்த்துக் கொண்டார். 

சற்றே சுதாரித்துக் கொண்டு ,கொஞ்ச தூரம் பின் வாங்கிய அந்த கும்பலின் தலைவன் துப்பாக்கியை எடுக்க முன்னேறினான். 

அடுத்தடுத்த விநாடிகளில் மின்னலைப் போல கிளம்பியிருந்த ஆர்யா, கீழே கிடந்த கத்தியை எடுத்து அனாசயமாக சுழற்றி வீசினான். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாகப் பாய்ந்த அந்த கத்தி, அந்த கும்பலின் தலைவனின் காலைப் பதம் பார்த்தது. அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். சற்றும் தாமதிக்காமல் விரைந்த ஆர்யா, அந்த கும்பலின் தலைவனை சராமரியாகத் தாக்கி அவனை வலுவிழக்கச் செய்தான். 

அடுத்த வினாடி, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவின் தலைமையில் ஆன போலிஸ் படை, அந்த சுரங்கத்தின் உள்ளே நுழைந்திருந்தது. தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்திருந்த அவர்கள், அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். பேச்சு மூச்சில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஃபர், ஆர்யாவுடன் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடன் அவனுக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிரவாதிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், செல்போன்கள் மற்றும் கேமராக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அடுத்த கட்ட விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தது. தீவரவாதிகளிடம் பிடிபட்டிருந்த இருந்த போலிஸ் கான்ஸ்டபிள் ஸ்வதீப் ராஜ் நடந்த விவரங்களை, இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மாவிடம் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். அடுத்த கட்ட விசாரணையில், இந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய பலர் கைது செய்யப் பட்டனர். 

அடுத்த நாள், இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்திச் சேனல்களில் நேரலையாக ஓடிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளின் பிடியில், அந்த சுரங்கத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்ட கடைசி நேர வீடியோக் காட்சிகள் இந்தியாவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி, நாடு முழுவதிலும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியிருந்தது.

பகத்சிங் பிறந்தநாள் விழாவில் பேசிய இந்தியப் பிரதமர் பிரதீப் சவான், சகிப்புத்தன்மைக்கு உதாரணமாக திகழ்ந்த ஜாஃபரையும் ஆர்யாவையும் பார்த்து தலைவணங்குவதாக புகழாரம் சூட்டியிருந்தார்.

ஜாஃபருக்கும் ஆர்யாவுக்கும் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு கூடியிருந்தது. 

இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்த ஜாஃபர் கண்களை விழித்திருந்தான். எதிரே அவன் நண்பன் ஆர்யாவும், சீனியர் கமாண்டன்ட் சஞ்சய் மிஸ்ராவும் நின்று கொண்டிருந்தார்கள். இருவரையும் அணைத்துக் கொண்ட சஞ்சய் மிஸ்ரா,

“இந்திய ராணுவத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள்...” என்று அவர்களை கட்டியனைத்துக் கொண்டார்.

அவர்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் கோர்த்திருந்தது.

இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை. இரண்டடுக்கு இரும்பு முள்வேலி, உலக வரைபடத்திலிருந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனியாக பிரிக்கிறது. இந்த எல்லைக்கோட்டை ஒட்டியே, தனக்கென ஒரு எல்லையை வகுத்து வாழ்ந்து, ஆயுதத்தோடு புறப்பட்ட பலரது வாழ்க்கைப் பயணங்கள், வெறும் சொற்ப வருடங்களில் முடிவுக்கு வந்திருக்கின்றது. இது எதைப்பற்றியும் ஒரு துளிகூட சட்டை செய்யாத ஒரு கேடுகெட்ட கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற, நமது வாழக்கை ஒரு முடிவுறாத் தொடர். 

முற்றும் -

உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

இப்படிக்கு 

பூபதி கோவை .

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.