(Reading time: 49 - 98 minutes)

“சரி... அவன் கண்களில் கட்டியிருக்கிற துணியை கழற்றிவிடு...” என்றது அந்த அதிகார தோரணை கொண்ட குரல்.

“இதோ உடனே...” என்ற சப்தம் பின்னாலிருந்து வந்தவுடன், அவன் கண்களைக் கட்டியிருந்த துணி அவிழ்க்கப் பட்டது. துணி இறுக்கமாகக் கட்டப் பட்டிருந்ததால் ஜாஃபர் தன் கண்களைத் திறக்க கடினப்பட்டு, மெல்ல திறந்து பார்த்தான். அவனுக்கு எதிரே, கருப்பு நிற துணியால் முகத்தையும், உடலையும் மறைத்த நான்கைந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, கைகளில் துப்பாக்கியேந்தி நின்று கொண்டிருந்தது.. அந்த சுரங்கத்தின் சுவர்களில், கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS) தீவிரவாத இயக்கத்தின் கொடிகள் தொங்கவிடப் பட்டிருந்தது. கீழே அவனுக்குப் பக்கத்தில், அவன் நண்பன் ஆர்யாவும், காவல்துறையைச் சேர்ந்த ஒரு கான்ஸ்டபிளும், உடம்பு முழுவதும் ரத்த காயங்களோடு கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிருந்தான் ஜாஃபர். 

“இவனுங்கள என்ன பண்ணலாம்...??” என்றான் ஜாஃபரைக் கட்டி இழுத்து வந்தவன். 

“சந்தேகமே வேண்டாம்... நேரா மேல அனுப்பி விட வேண்டியதுதான்... இவனுங்களோட கடைசி நிமிடங்களை, கேமராவில் பதிவு செஞ்சு, அதை இணையத்தளத்தில் வெளியிட வேண்டும்... ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு பத்து அடி இடைவெளியில், ஒரு கேமரா பொருத்தி வைக்கப்பட்டு அதன் லைவ் ரெக்கார்டிங் ஓடிக் கொண்டிருந்தது.

கீழே படுக்க வைக்கப் பட்டிருந்த ஆர்யாவையும், அந்த காவல்துறையைச் சேர்ந்தவரையும் எழுப்பி, ஜாஃபரோடு சேர்ந்து மண்டியிட வைத்தார்கள். இந்த மூவரின் கழுத்திலும் கத்தி வைக்கப் பட்டு, முகமூடி அணிந்த மூன்று பேர், இவர்களுக்குப் பின்னால் தயார் நிலையில் நின்றார்கள். 

இவர்களுக்குப் பக்கத்தில் வந்த அந்த தீவிரவாத கும்பலின் தலைவன்,

“இன்றைக்கு உங்கள் மூணு பேரோட கடைசி நாள்... அதாவது நீங்கள் கடவுளை அடையப் போகின்ற நாள்… அதேபோல் நாளை மறுநாள், உங்கள் பாரதப் பிரதமருக்கான கடைசி நாள்... இந்த உலகமே எங்களைத் திரும்பிப் பார்க்க போகின்ற நாள்... இந்தியாவிலும் எங்களின் கிளைகள் (ஐ.எஸ் . ஐ.எஸ் . (ISIS)) தொடங்கப்பட்டு விட்டதை, இந்த உலகம் அறியப் போகின்ற நாள்...” என்று கூறிச் சிரித்த அவன், 

இந்த மூவரையும் ஒருமுறை அருகில் வந்து பார்த்துவிட்டு, அவர்கள் சட்டையில் அச்சிடப் பட்டிருந்த பெயர்களைப் படித்துக் கொண்டே வந்தான்.

“ஸ்வதீப் ராஜ்… போலீஸ் கான்ஸ்டபிள்... ஹ்ம்ம்...”

“வீர் பிரதாப் சிங் ஆர்யா... BSF ARMY…”

ஜாஃபரின் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும்,

“ஜா.... ஃபர்” என்று பேச்சை நிறுத்தியிருந்த அவனின் கண்கள், ஆச்சர்யத்தோடு ஜாஃபரைப் பார்த்து,

“ஜாஃபர் காதிம்... சலாம் அலே கும் ஜாஃபர்…!” என்றான். 

ஜாஃபர் தன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் மௌனம் காத்தான்.

“நீ என் இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தான், உன்னிடம் இவ்வளவு மரியாதையாக பேசிட்டு இருக்கிறேன். உனக்கு ஒரு கடைசி வாய்ப்பு தருகிறேன்… உன் உயிர் மேல் ஆசை இருந்தால் சொல்... நீயும் எங்களோடு சேர்ந்து விடுகிறாயா...? இல்லை இவர்களைப் போல் சாகப்போகின்றாயா...? ” என்றான்.

இந்த முறையும் ஜாஃபரிடம் இருந்து மௌனமே பதிலாக வந்திருந்தது.

அதைப் பார்த்த அந்த கும்பலின் தலைவன்,

“நமது இனத்துக்கான இந்த போராட்டம், சிரியா தொடங்கி, உலகின் பல நாடுகள் வரை பரவி, இன்றைக்கு இந்தியாவிலும் கோலோச்சியிருக்கின்றது... பல இடங்களில் நமது கொடி பட்டொளி வீசிப் பறக்கின்றது. ஒரு நாள்... இந்த உலகமே நமதாகும்... இதை எதிர்ப்பவர்கள் கண்டிப்பாக கடவுளை சென்றடைவார்கள்.” என்று உரக்கக் கத்திய அவன்,

“தைரியமாகச் சொல்... இறைவனின் திருப்பெயரால் உனக்கு மன்னிப்பு அளிக்கப்படும்...” என்றான் மறுபடியும்.

இதைக் கேட்டவுடன் ஜாஃபரின் முகத்தில் உக்கிரம் தெரிந்தது. ஒரு நொடியில் முகம் சிவந்த ஜாஃபர்,

“என்ன...? இறைவனின் திருப்பெயராலா...? அந்தப் பெயரை உச்சரிக்கும் அருகதை கூட உனக்குக் கிடையாது. மதத்தின் பெயரால் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளான உங்களோடு, அந்த புனிதமே உருவான கடவுளை தொடர்பு படுத்தாதே... உங்களுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது...! இதற்கான விளைவுகளை மிக விரைவில் அனுபவிக்கத்தான் போறீங்க...!” என்றான் முகம் முழுக்க ஆவேசத்தோடு.

“ஏய்... நீ எங்களை எச்சரிக்கிறாயா...? உன்னோட உயிர்க்கே இன்று உத்தரவாதம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாட்டில் சகிப்புத்தன்மை என்பதே அழிஞ்சுகிட்டு வருது... குறிப்பா நமது மதத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இங்க ரொம்ப அதிகம்... அது உனக்குத் தெரியாதா...? ” என்றான் அந்த கும்பலின் தலைவன்.

இதைக் கேட்டதும், ஆவேசம் கொஞ்சமும் குறையாமல் பேச்சைத் தொடர்ந்தான் ஜாஃபர். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.