(Reading time: 7 - 14 minutes)

 " கற்பகம்! என்னாச்சு? உடம்பு சரியில்லையா? டாக்டரிடம் காட்டலாமா? நான் பயந்தே போயிட்டேன்........"

 கற்பகம் கணவனின் தோளில் முகம் புதைத்து தன் துயரம் தீரும் வரை அழுது தீர்த்தாள்.

 " கற்பகம்! சொல்லு! என்னாச்சு? ஏன் அழறே?"

 " நான் தோற்றுப்போயிட்டேங்க! குழந்தையை எப்படியாவது என்னை தன் தாயாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, அதற்கு தாய்ப்பால்கூட கிடைக்காதபடி செய்தேன், பெற்ற தாயின் கண்களில் குழந்தையை மறைக்கவும் செய்தேன். எதுவுமே பலிக்கவில்லை, இந்த பச்சைக் குழந்தையிடம்! சிவம்! உன்னைப் பார்த்தவுடன் அதன் கண் மலர்ந்தது, இதழ் விரிந்து சிரித்தது, கைகால்களை ஆட்டி பரவசத்தை காட்டிய இந்தப் பச்சைக் குழந்தை நான் அதன் அருகில் நாள் முழுவதும் தவம் கிடக்கிறேன், என்னைப் பார்த்து ஒரு சின்ன அசைவைக்கூட காட்டவில்லை, ஆனால் உன்னைப் பார்த்தவுடன் எப்படி சந்தோஷப்படுகிறது, பார்! சிவம்! நான் பொய் சொல்லவில்லை, நீ சற்று தள்ளி நின்று பாரேன்!"

 சிவம் நகருவதை, அந்தப் பச்சைக்குழந்தை தன் கண்களை அவன் நகருகிற பக்கமாக திருப்பிப் பார்த்தது. பார்வையிலிருந்து சிவம் மறைந்ததும், அதன் கண்களில் கற்பகம் தெரிந்த மறுகணமே சப்த நாடியும் ஒடுங்கியதுபோல், அசைவற்ற கட்டையாக கிடந்தது!

 அதைப் பார்க்கப் பார்க்க, கற்பகத்துக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது!

 " சிவம்! பார்த்தாயா? உன்னைப் பார்த்தவுடன் கொள்ளைச் சிரிப்பைக் காட்டிய குழந்தை, பார்! இப்போது பார், கட்டைபோல கிடப்பதை! இதற்கென்ன அர்த்தம்? என்னை அது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே? சொல்லு, சிவம்!"

 " அவசரப்படாதே, கற்பகம்! கொஞ்சம் பொறு! சமையலுக்கு வந்திருக்கிறவங்களை கூப்பிடு! நாமிருவரும் சற்று தள்ளி நிற்போம்! அவங்களை குழந்தையின் அருகில் நிற்கச் சொல்லு! பார்ப்போம்!"

 அப்படியே அவள் வந்து எந்த ஒரு அசைவும் காட்டாமல் குழந்தையின் அருகில் நின்றாள்.

 கற்பகமும் சிவமும் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

 குழந்தை அவளையே பார்த்தது.

 " குழந்தையின் அருகே உங்க முகத்தை காட்டுங்கம்மா!"

 அப்படியே சமையற்காரம்மா குழந்தையின் முகத்தருகே தன் முகத்தை கொண்டுபோனாள்!

 குழந்தை தன் பிஞ்சுக் கைகளை மெல்ல எடுத்து அவள் முகத்தை தொட்டது!

 அதைப் பார்த்ததும், கற்பகம் தன் தலையில் அடித்துக்கொண்டாள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.