வள்ளி மனமின்றி தலை குனிந்து வீட்டுக்குள் பத்மாவதியின் பின்னே சென்றாள்.
" வள்ளி! ஜானவி நேற்றே என்னிடம் வீடியோவைக் காட்டி புலம்பினாள், உன்னை உடனடியாக வேலையை விட்டு நீக்கப் போவதாகவும் சொன்னாள். நான் அவளிடம் அவசரப்படாதேன்னு எத்தனையோ சொல்லியும், அவள் பிடிவாதமாக இருந்தாள்........"
" எல்லாம் என் தலைவிதிம்மா! கல்யாண வயசிலே ஒரு மகளுக்குத் தாயாக இருந்துகொண்டு, எனக்கிந்த அவமானம் வரலாமா?"
" வள்ளி! அதையே மனசிலே வைத்துக்கொண்டு துயரப்படாதே! சரி, இருந்த வேலை போயிடுத்தே, என்ன செய்யப்போறே?"
" பட்டினி கிடந்து நானும் என் மகளும் செத்தால்கூட வருத்தமில்லை, இப்படியொரு அவமானத்துடன் வாழணுமா?"
" வள்ளி! இதெல்லாம் எல்லா பெண்களுடைய வாழ்க்கையிலும் நடப்பதுதான்! அதை விடு! இன்றிலிருந்து என் வீட்டில் வேலை செய்! ஜானவி கொடுத்த சம்பளத்தைவிட நூறு ரூபாய் அதிகமாகவே தருகிறேன், வா, உள்ளே!"
" உங்க நல்ல மனசுக்கு தலை வணங்கறேன், ஆனா இதிலே ஒரு சங்கடம் இருக்கே......"
" சங்கடமா? என்னது அது?"
" ஜானவியம்மா என்னை அடிக்கடி பார்க்க நேரும்போதெல்லாம், என்மீது பழி சொல்லி, கள்ள உறவை தொடர்ந்து நடத்த, பக்கத்து வீட்டிலேயே வேலை செய்ய வந்துட்டியான்னு காறித் துப்புவாங்க! வேண்டாம்மா! இனி இந்தப் பக்கமே தலைகாட்டமாட்டேன்! வரேம்மா!"
வள்ளி பிடிவாதமாக நகர்ந்ததும், பத்மாவதிக்கு மிகுந்த ஏமாற்றம்!
எத்தனையோ யோசித்து திட்டம் போட்டு, கணவனை வீடியோ எடுக்கச் சொல்லி, அதை ஜானவிக்கு அனுப்பி, அவளும் எதிர்பார்த்தபடி வள்ளியை வேலையிலிருந்து நீக்கியும், தனக்கு பலனில்லாமல் போய்விட்டதே என வருந்தினாள்!
ப்ரியா நேர்காணல் முடித்து வெளியே வந்து சுகுணாவின் அருகே அமர்ந்தாள்.
ப்ரியாவை, சுகுணா கை குலுக்கினாள்.
ப்ரியா சிரித்தாள்.
" ஏன் சிரிக்கிறீங்க, ப்ரியா?"
" பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று! என் கடமையை முடிச்சிட்டேன், எது நடந்தாலும் நல்லதற்கே என்று கருதுவேன்......."
" ப்ரியா! கேள்விகள் கஷ்டமா இருந்ததா?"