" வேடிக்கையா இருந்தது......."
" என்ன நடந்தது?"
" முதலில் நான் பணிவுடன் என் சான்றிதழ்களை அவர்களிடம் நீட்டினேன், அவர்கள் அதை வாங்கிக் கொள்ளாமல், சிரித்தார்கள்."
" எதற்கு?"
" நேர்காணலின் முடிவில், எல்லாம் திருப்தியாக இருந்து, வேலைக்கு அமர்த்துவது என முடிவு எடுத்தால், சான்றிதழ்களை பார்த்துக்கொள்ளலாம், முதலில் நேரத்தை வீணாக்கவேண்டாம், என்று சொன்னார்கள்......"
" அதுவும் சரிதான், என்ன கேள்விகள் கேட்டார்கள்?"
" வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், நீங்கள் இந்த சாதாரண வேலைக்கு வரவேண்டிய அவசியமென்னன்னு முதல் கேள்வியிலேயே என்னை தாக்கினார்கள். ......."
" ப்ரியா! நீங்க என்ன பதில் சொன்னீங்க?"
" நான் நிரந்தரமாக வேலையில் இருக்கமாட்டேனோ என்பதுதானே உங்கள் பயம், முப்பது வருடத்துக்கு இந்த வங்கியிலே தொடர்ந்து வேலை செய்ய சம்மதித்து ஸ்டாம்பு பேப்பரில் ஒப்பந்தம் செய்து தருகிறேன், போதுமா? என பதில் கூறியதும், அவர்கள் சிரித்துவிட்டு, அடுத்த கேள்வியை தொடுத்தார்கள்."
" இன்டெரெஸ்டிங்கா இருக்கே........"
" ஆமாம், அதென்ன முப்பது வருஷம்னு எல்லைக்கோடு போடறீங்கன்னு........"
" அடப் பாவிங்களா!"
" தனியார் துறையிலே இருக்கிற வங்கியின் ஆயுள் முப்பது வருஷத்துக்கு மேலே இருக்கமுடியாதுன்னு பதில் சொன்னதும், அவங்க எல்லோருமே எழுந்து நின்று கை குலுக்கினாங்க......"
"வெரி குட்! வேலை கிடைப்பது உறுதி! கங்கிராட்ஸ்!"
"சுகுணா! உனக்கு நான் என்ன சொல்லியிருக்கேன், எப்போதும் நிகழ்காலத்திலே வாழணும்னு இல்லையா? அதை மறந்துட்டியா?"
" குழப்பாதீங்க, ப்ரியா!"
" சுகுணா! உங்களை எந்த நேரத்திலும் கூப்பிடுவாங்க, அதற்கு தயாராக இருங்க! என் நேர்காணலின் முடிவை தெரிந்து கொள்கிற உங்க ஆவலுக்காக, சூசகமாக ஒரு விஷயம் சொல்றேன், என் சான்றிதழ்களை அவர்கள் சரிபார்க்கவேயில்லை...."