" அப்பா! இதென்ன புதுப் பழக்கம்? இந்தக் குடும்பத்துக்காக நீங்க எடுக்கிற எந்த முடிவும் எங்களுக்கும் ஏற்புடையதாகத்தானே இருந்து வருகிறது, ......"
" அதில்லேம்மா! இவர்தான் ஆசைப்படறாரு, உன்னிடமிருந்தே நேரிடையாக, முடிவை தெரிஞ்சிக்கணும்னு பிடிவாதமா இருக்காரு, பரவாயில்லே.....நீயே சொல்லும்மா! ஆனால், ஒரு விஷயம், இப்ப நீ வயசுவந்த பொண்ணு! ஒரு கோடீஸ்வரி!
எங்களைவிட நிறைய படிச்சவ! உன்னை இப்ப நாடே ரொம்ப புத்திசாலின்னு புகழுது, எனக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லே, நீ எடுக்கிற, என் முடிவிலிருந்து மாறுபட்டாலும், அதை ஏற்றுக்க என்னப்பன் முருகன் எனக்கு மனசிலே தெம்பை தருவான், நீ மனசுவிட்டுப் பேசும்மா! உங்கம்மாவுக்கும் என் அபிப்பிராயம்தான், இல்லையா காமாட்சி?"
" அதிலென்ன சந்தேகங்க! உங்க எண்ணம்தான், என் எண்ணமும்! வடிவு நம்ம ஒரே மக! படிச்சவ! அவ எதிர்காலம்
சிறப்பா இருக்கணுங்கறதுதானே, நம்ம ஆசையும்!
வடிவு! தாயும் சேயும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுன்னு பழமொழியே உண்டு! உன் வாழ்க்கையை எப்படி அமைச்சுக்கணுங்கிற முடிவை நீதாம்மா எடுக்கணும், என்ன இருந்தாலும், நாங்க பழமையிலே ஊறினவங்க! இந்த ஊருக்கு வெளியே என்ன நடக்குதுன்னுகூட தெரியாது, எங்களுக்கு! உங்கப்பாவுக்கு தெரிந்தது, பட்டறை! எனக்கு தெரிந்தது, சமையலறை! வந்திருக்கிறவரும் அழகா பேசறாரு........."
" ஆமாம்மா! வந்திருக்கிறவர் பேச்சு, ராமதூதன் இலங்கையிலே ராவணனிடம் தூது போனபோது பேசினமாதிரி, நடேச செட்டியாருக்காக உருக்கமா இருந்தது......."
சிக்கில் சிங்காரத்துக்கு பெருமகிழ்ச்சி! வந்த காரியம் வெற்றி என்றே தீர்மானித்துவிட்டார்!
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பதுபோல, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், அவர் தலையிட்டார்!
" வடிவு! நடேச செட்டியாரும் அவர் மகனும் உன்னை அந்த போட்டியிலே பார்த்து, உன் பதில்களை கேட்டதிலிருந்து, உன்னைப் பற்றியே பேசிக்கிட்டிருக்காங்கம்மா! அவங்க ரெண்டு பேருக்குமே உன்னை எம்.ஏ., எம்.ஃபில்., பி.ஹெச்.டி. வரையிலும் படிக்கவைத்து, உலகமே உன்னை திரும்பி பார்க்கவைக்கணுங்கற வெறியிலே துடிக்கிறாங்கம்மா! இப்பவே உன்னை வீட்டு மருமகளா முடிவு பண்ணிட்டாங்கம்மா!"
" நீங்க சொல்றதை கேட்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க! ஆமாம், அவங்க என்ன வியாபாரம் செய்கிறதா சொன்னீங்க?"