(Reading time: 8 - 15 minutes)
வோட்டர் சாவித்திரிபாலா - பனபூல் (சு.கிருஷ்ணமூர்த்தி)

ஆனால் தீவிரமான ஜுவாலை. சாவித்திரி சமையல் வேலை செய்த வீட்டுக்காரர், தமோநாஷின் மரணத்துக்குப் பிறகு அவளுடைய சம்பளத்தை இரண்டு ரூபாய் உயர்த்துவதாகச் சொன்னார். சாவித்திரி அதற்கு இணங்கவில்லை. "தேவையில்லை" என்று சுருக்கமாக மறுத்து விட்டாள்.

  

ரிபுநாஷ் தெருக்களில் சுற்றித் திரிந்தான். வீட்டில் இட மில்லாதவர்கள், தெருவில் சுற்றியவாறே காலங்கழிப்பவர்கள், ஏதாவதொரு கிளர்ச்சி, சண்டை, மோட்டார் விபத்து ஏற்பட்டால் அதைப் பார்க்கக் கூட்டங் கூடுபவர்கள், இவர்களே ரிபுநாஷின் தோழர்கள். அவர்கள் அவனை "ரிபுன்" என்ற அழைத்தார்கள்.

  

ஆனால் ரிபுன் தம்னாவைப் போல் பலசாலி அல்ல, நோஞ்சான். அவன் மார்க்கெட் வட்டாரத்தில் சுற்றிக் கொண்டிருப்பான். மூட்டை தூக்கி ஏதோ சம்பாதித்தான். பீடி பிடிக்கக் கற்றுக்கொண்டான். தினம் ஒரு கட்டு பீடி வாங்கக் காசை எடுத்துக்கொண்டு மிச்சத்தைத் தாயிடம் கொடுப்பான்.

  

அவனுக்குப் பதினாறு பதினேழு வயதாயிருந்தபோது ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒருநாள் அவன் ஒரு கூடை கோசு தூக்கிக் கொண்டு வந்து ஒரு மோட்டாரின் பின்புறப் பெட்டியில் அவற்றை அடுக்கி வைக்கும்போது அவனுக்குத் தொண்டை கமறியது. அவன் இருமத் தொடங்கினான். மோட்டார்க்காரர் அவனுக்குரிய முக்கால் ரூபாய்க் கூலியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ரிபுன் நடைபாதையில் உட்கார்ந்துகொண்டு இருமத் தொடங்கினான். திடீரென்று இருமலுடன் ஒரு கட்டி இரத்தம் வெளிவந்தது. ரிபுன் அதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு வீடு திரும்பினான். சாவித்திரி பக்கத்து மருத்துவரிடம் ரிபுனைக் கூட்டிச்சென்றாள். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "இவனுக்குக் காசநோய் வந்திருக்கு. எனக்கு நீ ஃபீஸ் ஒண்ணும் தரவேண்டாம், ஆனா மருந்து வாங்கிக் குடுக்கணும். ஊசி மருந்து போடணும். முட்டை, வெண்ணெய், மீன், மாமிசம், பழம் இந்த மாதிரி புஷ்டியான சாப்பாடு குடுக்கணும்.." என்றார்.

  

சாவித்திரி பேசாமல் மருத்துவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண்ணுக்குப் புலப்படாமல் அவள் முகத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பை அவர் உணர்ந்த கொண்டார் போலும். "ஒன்னாலே முடியலேன்னா பையனை ஆஸ்பத்திரி யிலே சேர்த்திடு. நான் ஒனக்கு ஒரு சீட்டு எழுதித் தரேன். நீ அதை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ" என்று அவர் சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.