இரண்டு மாதமாக பேச்சு வார்த்தை இல்லை. உப்பு சப்பு பெறாத விஷயத்தினால் வந்த சச்சரவு தான்... எப்போதும் போல் நான் தான் விட்டுக் கொடுக்க வேண்டுமா என்று என் மனம் சண்டி தனம் செய்யவும், வேண்டுமானால் அவரே பேசட்டும் என்று நான் பேச முயற்சி எதுவும் செய்யவில்லை. இப்போதும் என் கோபம் தீர்ந்தபாடில்லை, எனவே,
"ம்ம்ம்ம்ம்..." என்றேன்.
என் முகத்தை பார்த்து விட்டு என்ன நினைத்தாரோ, அரவிந்த் மேலே எதுவும் சொல்லவில்லை, நானும் எதுவும் கேட்கவில்லை.
நித்திலாவை பள்ளியில் விட்டு திரும்பும் போது வீட்டு வாசலில் யாரோ நிற்பது தெரிந்தது. அருகில் வந்ததும் அது சஞ்சய் என புரியவும் என் மனம் தானாய் மலர்ந்தது. சஞ்சய் என்னுடைய பள்ளி தோழி தாமரையின் இளைய சகோதரன். என் பெற்றோர் வீட்டின் அருகில் தான் அவர்கள் வீடும் இருந்தது. சிறு வயது முதலே அம்மு அக்கா என்று என் பின்னேயே சுற்றி கொண்டு இருப்பான். ரோட்டில் கண்ணாமூச்சி முதல் க்ரிக்கெட் வரை என்னுடன் தான் விளையாடுவான். வளர்ந்த பின்னும் பொறியியலில் எந்த துறை எடுப்பது என்பது வரை என்னிடம் கேட்டு தான் முடிவு செய்தான். எங்களுக்குள் சிறு வயது முதலே ஒரு தோழமை உணர்வு இருந்தது.. இப்போதும் அவ்வப்போது அவனுடைய வியாபார விஷயமாக இந்த பக்கம் வரும் போது, என் அம்மா எனக்காக செய்து தரும் பலகாரம் முதல் பொடி வகை வரை எந்த வித அலுப்பும் இன்றி எடுத்து வந்து தருவான்.
"ஹேய் சஞ்சய்... எப்படிடா இருக்க?"
அவன் முகமும் என்னை பார்த்த உடன் மலர்ந்து, "நல்லா இருக்கேன் அக்கா... நித்தி குட்டியை ஸ்கூல்ல விட போயிருந்தீங்களா?"
"ஆமாம்டா..." கதவை திறந்து அவனை உள்ளே வந்து அமர சொல்லி விட்டு, அவன் கொடுத்த பைகளை வாங்கி கொண்டு, வழக்கம் போல் நலம் விசாரித்தேன். "அம்மா, அப்பா, கலா, குட்டி பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? "