(Reading time: 26 - 52 minutes)

 

" நான் என்ன பண்ணுவேன் அக்கா ? நான் என்ன தப்பு பண்ணேன் .. ஏன் எனக்கு இப்படி ஆணிச்சு .. அஜய் இல்லாம நான் எப்படி இருப்பேன் அக்கா ? ஐயோ என்னாலே அதை நெனச்சு கூட பார்க்க முடிலையே .. பொய்ன்னு சொல்லிடு அக்கா .. ஏதோ விளையாட்டுக்கு நீ சொன்னாதா சொல்லிடு ... "

" அஞ்சு .. அஞ்சும்மா .. என்னை மன்னிச்சிரு டா .. "

" அச்சோ நீ ஏன் அக்கா மன்னிப்பு கேட்குற .. விடு கா .. இதான் என் விதி .. கடைசி வரை எனக்கு நீ உனக்கு நான்னு இருக்கணும்னு விதின்னு எடுத்துக்கலாம் .. எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்ணு அக்கா "

" சொல்லு "

" நான் அஜயை  பார்க்கணும்.. எனக்கு அனுமதி கொடு "

" அஞ்சு ??"

" கவலைபடாதே அக்கா .. தப்பான முடிவு எடுக்க மாட்டேன் .. அவனை அவன் மனைவியோடு ஒரு தடவை பார்த்தா என் மனசுக்கும் மூளைக்கும்  உண்மை புரியும்னு தோணுது ..அவங்களை  நேரில் பார்த்தா தான் என்னால அவனை நினைக்காமல் இருக்க முடியும் .. "

நினைக்காமல் இருக்க முடியும் என்று சொன்னாலே தவிர மறக்க முடியும் என்று அவள் சொல்லவில்லையே ?? அதை சாதனாவும் கவனித்தாள் ..எனினும்  அவள் சொல்வதிலும் எதார்த்தம் இருக்கிறது என்று உணர்ந்தவள்  " போய்    வா " என்று அனுமதிக்க, இதோ கிளம்பிவிட்டாள் அந்த பேதை .. அவனைத்தேடி ..  இங்கு அஞ்சனா காதல் வலியில்  துடிக்க, அங்கு சுமதி பிரசவ வலியில்  துடித்தாள் .. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதா என்ன?????

மருத்துவமனை

" சாரி மிஸ்டர் அஜய் .. உங்க மிசஸ் ரொம்ப க்ரிட்டிகல் பொசிஷன்ல இருக்காங்க .. அநேகமா ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடியும் "

" ட்ரை  யோர் பெஸ்ட் டாக்டர் " என்றான் பட்டும்  படாமலும் .. மனதிற்குள் மட்டும் " அம்மா அவ எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்லை .. ஆனா நம்ம வாரிசு எனக்கு வேணும் "என்று வேண்டிகொண்டான் .. அவன் டாக்டரிடம்  சொன்ன பதிலை கேட்டு வெகுண்டுதான் போனார் பங்கஜம் .. அதையும் தாண்டி " என் மகளுக்கு ஒன்னும் ஆக கூடாது கடவுளே " என்று வேண்டிக்கொண்டு இருந்தார் ..

அஜய்யின் வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் லேசாய் இருட்டிவிட்டது ..

" என்ன சொல்லி அங்கு செல்வது " என்று தயங்கியபடியே அவன் வீட்டை நோக்கி நடை போட்டாள் ... அவன் வீட்டு வாசலில் கூட்டம் அதிகமாய் இருந்தது .. யாருக்கு என்ன ஆச்சு தெரியலையே என்று பதறி அடித்துக் கொண்டு வந்தவள் அஜய் அங்கு குழந்தையுடன் நிற்பதை பார்த்து கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு விட்டாள் ...

" அப்போ .. இது ???? " அவளின் கேள்விக்கு பதிலாய் உரக்க அழுதாள்  பங்கஜம்

" பாவி மவ இப்படி  பச்சை குழந்தைய உங்க கையில கொடுத்துட்டு போயி சேர்ந்துட்டாளே  மாப்பிள்ளை "

அதிர்ச்சியில் உறைந்தாள்  அஞ்சனா .. அவன் முகத்தை ஏறிட்டாள் ..  அவனோ கல்லாய் இறுகி இருந்தான் .. மெல்ல அவன் புறம் வந்தாள் .. சுமதியின் மரணம் அவனுக்கு எந்தவித உணர்வையும் தரவில்லை .. தன்னருகில் நிழலாட மெல்ல நிமிர்ந்தான் ..

" அஞ்சனா "

" அஜய் .. அஜய்.... ஐ எம் சாரி "

" ஹே நீ என்ன பண்ணுவ ? மரணம் ரொம்ப இயல்பானது ...அதுவும் மன்னிப்பு கேட்க வேண்டிய பலரே எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நல்லாத்தான் இருக்காங்க " என்றான் மாமியாரை பார்த்துக் கொண்டே .. அதற்குள் அவன் கைகளில் இருந்த குட்டி தேவதை வீரிட்டு அழுதாள் .. அஞ்சனாவிற்கே கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது .. பச்சிளம் குழந்தை தாயை இழந்து நிற்கிறதே என்று .. ஆனால் பங்கஜமோ கோபத்தில் வார்த்தைகளை கொட்டினார் ..

" பிறந்தவுடனேயே அம்மாவை முழுங்கிட்டு இப்போ அழறத பாரு .. " தாழ்ந்த குரலில் சொன்னாலும் அது அஜய், அஞ்சனாவிற்கு கேட்காமல் இல்லை .. அவன்  ஏதோ சொல்ல வாயெடுக்க  அஞ்சனாத்தான் " வேண்டாம் அஜய் .. சாவு வீட்டில் சண்டை வேண்டாம் .. " என்றாள் ...

" குழந்தையை கொஞ்ச நேரம் உள்ள எடுத்துட்டு போ அஞ்சனா " என்றவன் அவள் கைகளில் தன் மகளை  தந்தான் .. துன்பத்திலும்  ஓர் இன்பம் போல, அந்த நிலையிலும் அவன் உரிமையாய்  குழந்தையை கொடுத்ததை தனக்கு சாதகமாக்கி காதிற்கு மருந்து போட்டுக் கொண்டது அவளின் காதல் மனது ..

வீட்டினுள், இருந்த ஒரு சிறுமியிடம் உதவி கேட்டாள்  அஞ்சனா ..

"  தங்கச்சி "

" தங்கச்சி இல்ல .. பொன்னி "

" பொன்னி .. பாப்பா அழறாங்க .. பால் இருக்குமா டா ? "

" நாங்க பக்கத்து வீடுலதான் இருக்கோம் .. நீங்க இருங்க நான் எடுத்துட்டு வரேன் " என்று சிட்டாய் பறந்தாள்  அந்த பெண் .. ஏனோ அவளை பார்க்கும்போது தன்னைத்தானே பார்ப்பது போல இருந்தது அஞ்சனாவிற்கு ..

" நானும் நேற்றுவரை இப்படி தானே துள்ளித் திரிந்தேன் .. ஆனா .. இப்போ ?? என் வாழ்கையே முடிஞ்சிருச்சே பிள்ளையாரப்பா "

அவளின்  இஷ்ட  தெய்வம் பிள்ளையாரோ இனிதான் உன் வாழ்க்கை ஆரம்பம் என்று மர்மமாய் சிரித்தார் ..

அங்கிருந்த ஒரு அறையில் அமர்ந்தாள்  அஞ்சனா .. கைகளில் அஜயின்  குழந்தை ... பெண் குழந்தை .. ஆனால் பார்க்க அச்சு அசல்  அஜயை  போலவே இருந்தாள் ... அவளின் பிஞ்சு விரல்களை தொட்டு பார்த்து சிலிர்த்தாள் அஞ்சனா .. அவளுக்கு ஏதோ ஒரு புதுவித உணர்வு பொங்கி எழுந்தது .. இதுதான் தாய்மையா ?? தன்  நெஞ்சோடு அணைத்து  கொண்டாள்  அஞ்சனா .. ஒன்றும் அறியாத குழந்தையோ பசியில் அவளது நெஞ்சை ஈரமாக்கினாள் ..

" அச்சோ கண்ணம்மா .. உங்களுக்கு ரொம்ப பசிக்குதாடா ??? அஞ்சு நிமிஷம் டா ...பொருத்துகொங்க  " என்றவளின் கண்களிலும் கண்ணீர் ..என்னமோ அவள் பேசுவது குழந்தைக்கு புரிவது போல, பேசிக்கொண்டே போனாள் ...

அதற்குள் அங்கு வந்த பொன்னி, " அக்கா  இந்தாங்க " என்றாள் கையில் பாலுடன்   ... பொன்னி சென்றதும்  அறைகதவை தாளிட்டு கொண்டாள்  அஞ்சனா .. பால்புட்டியில் பாலை எடுத்து குழந்தைக்கு புகட்ட முயற்சித்தாள்  அஞ்சனா .. குழந்தையால்  அதை குடிக்க முடியாமல் போக பால் வாயிலிருந்து சிந்தியது.... பசியில் மீண்டும் அழுதாள்  அந்த குட்டி தேவதை .. "

 அவள் அழ அழ அஞ்சனாவிற்கும் கண்ணீர் பெருகியது .. என்ன செய்கிறோம் என்பதை சிந்திக்கும் நிலையில் அவள் இல்லை .. அவளை பொருத்தவரை குழந்தையின் பசி போக்க வேண்டும் ..  திருமணமாகாத அந்த யுவதிக்கு தாய்மை சுரக்கலாம் .. தாய்ப்பால் ?? சுரந்தது .. பொன்னி கொண்டு வந்த பாலை, தன் மார்பில் ஊடே குழந்தைக்கு ஊட்டி அவளது தாயானாள் அஞ்சனா ... வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு  அது ... பசி தீர்ந்து அழுகையை நிறுத்தி இருந்தாள்  குழந்தை ..

" அம்மா செல்லம் டா நீங்க .. என்னுடைய குட்டி கண்ணம்மா .. நான் உங்களை விட்டு இனி போக மாட்டேன் டா " என்று பேசிக்கொண்டு குழந்தையை வாரி அனைத்து முத்தமிட்டாள்  அஞ்சனா .. அதே நேரம் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது ..

அஜய்தான் நின்றிருந்தான் மாமியாருடன் ...

" என் பொண்ணு இங்கதான் இருக்கா ... போதுமா உங்களுக்கு ??? "

" என்னாச்சு அஜய் ??"

" ஒண்ணுமில்ல அஞ்சனா .. இன்னும் 3 நாள் பாப்பாவை நீ பார்த்துக்க முடியுமா ப்ளீஸ் ?? "

" ஏன் நாங்க இல்லையா மாப்பிளை ?? "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.