(Reading time: 21 - 41 minutes)

 

ரு வேளை இப்படி இருக்குமோ...இவள் சம்பளத்திற்காகத்தான் இவளைத் திருமணம் செய்கிறானோ? ஒருவேளை என்ன..ஒரு வேளை....நிச்சயமா அதுதான்...

இவள் எதெல்லாமோ நினைத்து நொந்து குழம்ப  இன்னும் கொதி நீர் சாய்த்தது நாட்கள் இவள் வேரில். கல்லூரியில் அறிந்தவர் தெரிந்தவர் திருமண விஷயம் தெரிந்து இவளிடம் துக்கம் விசாரித்தனர். பலர் திருமணத்தை மறுக்க சொல்லி ஆலோசனை சொன்னர்.

இவள் சூழல் காரணமாக அவர்கள் ஆலோசனையை மறுக்க, காதல் திருமணம் என பரவியது வதந்தி. நொந்து போனாள். காவ்யா இவளிடம் பேச்சை நிறுத்திவிட்டாள். “நான் சொன்னதை அவர்ட்ட போட்டு குடுத்திராத....எனக்கு இந்த வேலை ரொம்பவும் முக்கியம் “ என்ற மன்றாட்டோடு.

இவளிடம் கேலி கிண்டலாக பேசி மகிழும் மாணவ மாணவியர் கூட வெறும் அஃபீஷியல் பேச்சளவிற்கு நிறுத்திக் கொண்டனர். ப்ராக்டிகல்ஃஸ் மார்க்  ஹெ.ச் ஓடி கையிலும் இருக்கிறதே...இப்பொழுது இவள் அவர் ஆளாயிற்றே!

சிடுமூஞ்சி நம்பர் 2 வாக இவளைப் பார்த்தது  கல்லூரி.

இவளிடம் முன்பு போல பேசிய ஒரே நபர் அந்த சுகவர்த்தன் தான். ஆம் ஹெச் ஓ டி என்ற முறையில் அவன் பேசும் அதே விஷயங்கள். அதைத் தாண்டி ஒரு கமா கூட கிடையாது.

பாப்பா நம்ம மாப்ள தங்கமானவருமா...நிச்சயதார்த்தம் வேண்டாம்....நேரே கல்யாணம்னு சொல்லிட்டாரு...நிச்சயம்னா நமக்கு கூடுதல்  செலவு....நம்ம நிலைய அவரே புரிஞ்சிட்டு எதுக்கு தேவை இல்லாமன்னுட்டாரு....கல்யாணத்தை உடனே வைக்க சொல்லிட்டாரு..கேட்காமலே உதவுற குணம் அவருக்கு..” அப்பா அன்று வீட்டுக்குள் நுழைந்த இவளிடம் சிலாகித்தார்.

அவனுக்கு உதவும் குணமா? கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகம் வந்தது.. அனாதை ஆசிரமம், முதியோர் கல்வி இப்படி எதாவது ஒரு காரியத்திற்கென கல்லூரியில் ஒரு குழு மாணவர்கள் அவ்வப்போது பணம் வசூலித்து கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை வசூலித்தவர்கள் இவனிடம் கேட்க, இவன் கடித்து குதறிய விதத்தில் அந்த பழக்கத்தையே விட்டுவிட்டனர்.

இப்பொழுது இவர்கள் வீட்டிற்காக அவன் உதவுகிறானாமாம்?...கருமி நிச்சயதார்த்தம் என்றால் அவனுக்கும் தானே செலவு..அதனால் நிறுத்தி இருப்பான்.

“நீங்க வேறப்பா.....நிச்சயம் அப்புறம் கல்யாணம்னா அவர் இன்னும் எவ்ளவு நாள் காத்திருக்கனும்....இதுன்னா பாப்பா உடனே அவர் வீட்டுக்கு போயிடும்ல....” அவித்த பாசி பயிறை அப்பாவுக்கு கிண்ணியிலிட்டு நீட்டிய மூத்த அக்கா யாழினி சொல்ல “காதல் படுத்தும் பாடு...”அப்பா  ஆனந்தமாக சொல்லி சிரித்தார்.

தலையை குனிந்து கொண்டாள் மகிழினி. காதலா? அழுகை அடைத்துக் கொண்டு வந்தது. இவள் சம்மதம் அறிந்த முதல் நாள் அவன் முகத்தில் வந்த சிறு ஆர்வத்தை தவிர இன்றுவரை அவன் அதே சிடுமூஞ்சி தான்.

திருமணம் ஒரு மாதத்தில் என முடிவாகியது.

ப்பொழுது எல்லாம் வகுப்பு நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் தனிமை தான் கல்லூரியில். அவளது ப்ரிய கவிதை தொகுப்புகளில் தலையை நுழைத்துக் கொள்வாள் மகிழினி. நெருப்பு கோழி உதாரணம்.

அன்றும் அப்படிதான் கவிதை மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. அழைத்த அலை பேசியை யார் என பார்க்காமல் இணைப்பை ஏற்க இறங்கியது இடி.

அவளது அப்பா இறந்துவிட்டார்.

எப்படி வீடு சேர்ந்தாள், என்ன நடந்தது தனக்கு என தெரியாமல் கடந்தது மூன்று நாள் அவளுக்கு.

அவளுக்கு சற்று சுயம் புரியும் நேரம், வீட்டில் மற்றவர்கள் பேசிமுடிவெடுத்து அந்த வார இறுதியில் நடந்தேவிட்டது திருமணம்.

“பாப்பா புத்திசாலியா நடந்துக்கோ பாப்பா...அக்காங்க நாங்க ரெண்டு பெர் இருக்கோம் தான்...ஆனால் சொந்தம்னா இனி அவர்தான்.....” இரண்டாம் அக்கா குமுதினி சொல்லி அனுப்பி வைத்தாள் அவனோடு.

இவள் அவன் வீடு நோக்கி கிளம்ப அக்காக்கள் அவர்கள் ஊரை நோக்கி....அதிக விடுமுறை எடுத்திருந்ததால் இதற்குமேல் தங்க முடியாது அவர்களால்.

த்தனை ஏமாற்றமும் சேர்ந்து ஏனோ அவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு  வந்தது மகிழினிக்கு. அவன் மனம் வலிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு வேகம்.

“நான் இனி வேலைக்கு போகமாட்டேன்...” காரில் வைத்தே அறிவித்தாள். அவனோடு அவள் பேசிய முதல் சொந்த விஷயம்.

“சரிமா...உன் இஷ்டம்...எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்...வீட்ல போய் பேசுவோமே...” பார்வையால் டிரைவரைச் சுட்டிக் காண்பித்தான்.

இவள் எதிர் பார்த்தது போல் அவன் எகிறாததே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மெல்ல அவள் வலக் கையை பற்றிய அவன் இடக்கரம் அவள் கையை அவனது வலகரத்திற்கு கொடுத்தது.

தன் இரு கைகளாலும் அவள் கையை தன் கைகளுக்குள் பொக்கிஷப் படுத்தினான்.

ஏனோ கோபம் எரிச்சல் எதுவும் வரவில்லை அவளுக்கு,மாறாக அழுகை வந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இப்பொழுது அவன் முகம் வித்யாசமாக தெரிந்தது. அவன் கண்களில் அவள் பார்வை கலந்தது. தாய்மை உணர்வு வலிக்காமல் வருடியது அவளது வலித்த இதயத்தை.

“அப்பா...” வெடித்தாள் அவள்.

ன்று இரவு ஆழ்ந்து உறங்கினாள் வெகு நாளைக்கு பிறகு. மீண்டும் அவளுக்கு முழு விழிப்பு வந்து எழுந்த போது முழுதாக 36 மணி நேரம் முடிந்திருந்தது அவள் தூங்கத்தொடங்கி.

எழுந்த போது முன்னைவிட மனம் பெரிதும் தெளிந்திருந்தது.

பசி புரிய எழுந்து பல் துலக்கிவிட்டு படுக்கை அறையை விட்டு வெளியே வர எங்கிருக்கிறோம் என புரியவில்லை.

உள்ளே நுழைந்தபோது அவள் வீட்டை கவனித்திருக்கவில்லை. இப்போது இது யார் வீடு என புரியவில்லை.

அதன் சுத்தம். அழகு. எதிலும் பெர்பெக்க்ஷன்.

அப்பொழுதுதான் அவள் வந்ததைப் பார்த்தவன் “ ஏய் மணிப்பொண்ணு என் சின்னபொண்ணு வந்தாச்சு பாரு...” என உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “உட்காருமா” என்றான்.

தலை சுற்றியது அவளுக்கு. முந்திய நாள் சாப்பிடாததால் அல்ல, அவன் பேசிய விதத்தில்தான்.

இன்னுமாய் கிர் ரென தலை சுற்றியது உள்ளிருந்து வந்த மணிப்பொண்னை பார்த்துவிட்டு. இவள் ஒரு சிறு பெண்ணை எதிர்பார்க்க கையில் பதார்த்தங்களுடன் வந்ததோ ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி.

“நாந்தான்மா இவிய பிறக்கும் முன்ன இருந்தே இந்த வீட்டில சமையல்....இவரு பிறந்ததும் இவிய அம்ம....இவியளை என்கைல குடுத்துட்டுதான் கண்ண மூடுனாவ...அப்போ இருந்து எல்லாம் நாந்தான் பார்துகிட்டேன்...இப்போ வயசாயிட்டுனு சின்னவரு இந்த கிழவிய சமைக்க விடுறது இல்ல...இருந்தாலும் சின்ன மருமக வந்துருக்கிய...அதான் இன்னைக்கு நான் சமச்சேன்...நேத்தே வந்திருப்பேன்...இவிய இந்தபக்கம் யாரையும் வரவே விடல...”

அவர் முகபாவம் நேற்றை பத்தி அவர் என்ன நினைக்கிறார் என புரிவிக்க குனிந்து கொண்டாள்.

சிறு மௌனத்துக்கு பின் “வேலக்காரி அதிகமா உரிமை எடுக்கிறேன்னு தோணிச்சுன்னா...மன்னிச்சுகோமா...” மூதாட்டி சொல்ல இவள் மௌனம் தவறாக புரிய தொடங்குவது புரிய “ அப்படி எல்லாம் இல்ல பாட்டி” என்றாள் வேகமாக.

“வெட்க பட்டியளா...படுங்க...படுங்க...” அவர் சொல்லியபடி அடுப்படி நோக்கி நடக்க இவள் முகம் பார்த்தவன் கண்களில் நன்றி உணர்ச்சி.

“படிக்காதவங்க தான்...ஆனா என்னை அம்மா முகத்துக்காக ஏங்கவிடாம பார்த்துகிட்டவங்க....அளவுக்கு மீறி நம்ம விஷயத்தில் மூக்க நுழைக்கமாட்டாங்கதான்...இங்கயே எப்பவும் இருக்க மாட்டாங்க...பக்கத்தில் கெஃஸ்ட் ஹவுசில் தான் இருப்பாங்க...ஆனா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுடா...நான் வேற ஏதாவது ஏற்பாடு செய்றேன்...” கிட்டதட்ட அவன் கெஞ்ச இவளுக்கு ஆச்சர்யம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.