(Reading time: 21 - 41 minutes)

 

ரு வேலைக்காரிக்காக இவன் கெஞ்சுகிறான். அன்று உதவ போன மாணவர்களை எத்தனையாய் கொதித்தான்?

இன்னும் இவள்முகத்தை தவிப்போடு அவன் பாத்திருக்க, பதில் சொன்னாள் “ எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல...”

“ஆனால் ப்ரச்சனை ஆனா என்ட்ட கண்டிப்பா சொல்லு..”

“உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்லுவாவளாம்?, அதெல்லாம் சொல்லாமலே வந்துரும் ....பசிச்ச பிள்ள பாலுக்கு பெத்தவ மடி தேடுத மாதிரி பொம்பிள மனம் ஒரு கஷ்டம்னா கட்டுனவன தான் தேடும்...” தன் வருகையை அறிவித்தபடியே மீண்டுமாய் உணவு மேஜை நோக்கி வந்தார் அந்த முதியவர்.

மொழியும், பாலும், படிப்பும் அம்மூதாட்டிக்கு தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த மணிப்பொண்ணின் அருகாமை அவளுக்கு தன் தந்தையின் அருகாமையை நினைவு படுத்தியது.

இவள் சாப்பிட்டு எழுந்திருக்க, அவனோ “அப்படியே போய் படுக்காத நீ...கொஞ்சம் நடந்துட்டு அப்புறன் வேணும்னா படுத்துக்கோ....வீடை 2தடவை சுத்திட்டு...” அவன் சொல்லிக் கொண்டிருக்க, “இது உங்க வீடுதானா?” தயங்கி கேட்டாள்.

ஒரு சிறு அதிர்வுக்கு பின் சிரித்தபடி சொன்னான். “இல்ல நம்ம வீடு..” அதிசயம் அவன் சிரிக்கிறான். வீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும் பொருந்தவில்லை.

 “வா வீட்டை காண்பிக்றேன்...” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஃஸ். ஸ்லீவ்லெஃஸ் டி ஷர்ட்.  பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம்? வீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்?

வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்... பயோ கெமிஃஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.

படிப்ஃஸ்.

இவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா?

வளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான. அவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஃஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.

 புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.

பதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.

“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவளுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.

இத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.

“லேபில் ஆசிட் காலி....கெமிகல்ஃஸும் ஷாட்டேஜ்...வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க...அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்....இப்படி ஆயிட்டு...”

அவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்...அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்?

பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல..., அலபறந்து கெடக்கு....இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்...இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.

அவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு...நானும் பழகனும்...”

“எதுக்காம்...இந்த கிழவி இருக்கிறப்ப நீங்க ஏன் இத செய்தவிய?” அவர் மறுக்க

“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்...அங்க இத யார் செய்வாங்களாம்..?”

”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்...” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.

வார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.

லைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.

“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க...ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்...ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்...முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது...ஆனா ஊரைவிட்டுட்டு எங்கயும் தூரமா போக முடியாது...அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு...பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”

அவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.

‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’  ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.

இவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..?

“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்...” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.

“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க

“சொல்லுமா...”

அவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.

“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..?.”

மென்மையாக அவள் வாய் பொத்தினான்.

“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்...”

“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்...” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க

“இல்லமா அப்படி எதுவும் இல்ல...இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்....”

றுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்...செதுக்கப் பட்ட சீரான மீசை.

காலேஜ் சென்றடைந்தார்கள்.

இரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.

இவள் அங்கு இருப்பது தெரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.

“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள... உண்மையிலேயே கோணகண்ணன்...சரி சரி முறைக்காத...உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்...இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு...” ஒருவன் சிலாகிக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.