(Reading time: 16 - 32 minutes)

 

"கொஞ்சம் பயம் தான் அபி," என்று சிரித்தார். அவள் தெளியாதது கண்டு "நான் இருக்கேன் கூட " என்றார்.

சந்தேகம் தோன்ற அபி  "எல்லாரும் இதை தான் யூஸ் பண்ணுவாங்களா அத்தை " என்று கேட்டாள்.

"இல்லை அபி நீ,நான் உங்க மாமா மட்டும் தான் "என்றார்.

"மற்றவருக்கு??? "

"அதெல்லாம் உனகெதுக்கு, இது வெட்டவெளி அபி, எங்கே வேண்டும் என்றாலும் போகலாம் " என்றார்.

இந்தியா உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில், மொபைல் போன் உபயோகிப்பதில், மக்கள் தொகையில், ஆங்கிலம் பேசும் மக்கள் தொகையில் இரண்டாம் இடமாம் ஆனால் வளர வேண்டிய துறையில் வளர்ந்திருக்கிறதா ??

சாயங்காலம் சிலுசிலுவென காற்று, அவள் அத்தையின் கைமனத்தில் மசால் வடை வாசனை, வீட்டின் வெளியே சாய்வு நாற்காலியில் அவள் மாமா, இந்த பக்கம் கயிற்று கட்டிலில் அவள் அமர்ந்தபடி சுற்றி வேடிக்கை பார்த்தாள்.

"எப்படி இருக்கு அபி இடம் "

"சூப்பரா இருக்கு மாமா, எனக்கு பாரதியார் கவிதை "காணி நிலம் வேண்டும்" தான் ஞாபகம் வருது "

முண்டாசு கவிஞனின் பிளான் படியே இருந்தது அந்த இடம். தென்னை தோப்பு ஒருபக்கம், கேணி ஒரு பக்கம், காற்று வீச, நிலவொளி வசீகரமாக, சுவையாக சமைத்து கொடுக்க அத்தை, காவலுற புவனேஸ்வரி.

உற்சாகத்தில் அபிநயா "வாழ்கை என்றால் இது தான் மாமா, நீங்க ஜாலியாக தான் இருக்கீங்க , அம்மா தான் தேவை இல்லாமல் பயந்து இருக்காங்க " என்றாள்.

அவர் சிரித்தபடியே கட்டிலில் இருந்து எழு என்று செய்கை செய்தார், எழுந்தவள் கீழே பார்க்க கோதுமை நிறத்தில் ஐந்து அடி நீளத்தில் பாம்பு அவளை கடந்து சென்றது.

உறைந்து நின்றாள்.

"தோப்பில் இதெல்லாம் சகஜம் அபி " என்று தேற்றினார் அவள் அத்தை.

சேதுமாதவன் "அபி எங்க அம்மா புவனேஸ்வரி உன்னை பார்த்து ஹாய் சொல்ல வந்திருக்கா " என்றார்.

அபிக்கு கடவுள் மேல் ஆர்வம் திரும்பியது. கோவில் சென்றால் வணங்குவது, அவள் அம்மா தீபம் ஏற்றும் வேளையில் வணங்குவது, கஷ்டம் என்று வந்தால் "கடவுளே " என்று பெருமூச்சு விடுவது. மற்றபடி தெய்வ நம்பிக்கை, ஒரே கடவுளை துதித்தல் என்று அவள் இருந்ததில்லை.

பிள்ளை முகம் பார்த்து அறியும் பெற்றோர், கஷ்டமில்லா சூழ்நிலை, எதற்கும் சிரமபடாத வாழ்கை கடவுளை அவளை தேட வைத்ததில்லை என்றும் சொல்லலாம்.

ஆன்மீகத்தில் கடவுளிர்க்கும் பாம்பிற்கும் நிறைய தொடர்பு உண்டு, முற்போக்கு புத்தகம் ஒன்றில் மனிதனின் உடலில் ஆற்றல் பாம்பின் வடிவில் பிரயாணபடும் என்று அவள் படித்திருக்கிறாள். நம் இந்து கலாச்சாரமும் பாம்பை தெய்வமாக பார்த்தாலும் பக்தியை காட்டிலும் பயம் தான் நிறைய அதன் மேல். குழம்ப தொடங்கினாள் கடவுளை அறிய.

டுத்த நாள் காலை அந்த பாத்ரூம் அருகே அடுப்பில் வெந்நீர் காய்ந்து கொண்டிருந்தது. சின்ன பெண்ணொருத்தி ஊதாங்குழலில் நெருப்பை ஊதிகொண்டிருந்தாள்.

மாட்டுசான வாசனை, காலை வெண்பனி, ஆடுகளின் "மே " சத்தம், நன்றாக வளர்ந்த சேவல், கோழி குஞ்சு அபிநயாவை இன்னொரு புது உலகத்திற்கு வரவேற்றது.

கீதா, "ஹே சின்னபாப்பா, தண்ணி காஞ்சிடுச்சா " என்று கூவினார்.

அவள் "ஆங்.. காஞ்சிட்டு இருக்குங்.."

சின்னபாப்பா முகம் தெரிந்த முகம் போல் இருந்தது அபிக்கு.

 காலை வெந்நீர் குளியல், பின் புவனேஸ்வரிக்கு மாமா லலிதா சஹஸ்ரநாமம், அஷ்டலக்ஷ்மி சோஸ்திரம், புவனேஸ்வரி காயத்ரி சொல்லி  மூன்று மணி நேரம் பூஜை, பின் யு.கே, யு.எஸ் யிலிருந்து போன் வரும்  மத்தியானம் சாப்பிட பின் சிறிது நேர தூக்கம் அதன் பின் அபி, அவள் அத்தை, சின்னபாப்பா மூன்று பேரும் பக்கமிருக்கும் கழனிகெல்லாம் சென்று விளைந்திருக்கும் காய்களை பறித்து வருவார்கள். திரும்ப சாயந்திரம் விளக்கேற்றி வைத்து அத்தையும் அவளும் தெரிந்த பாட்டு படுவார்கள் , ஸ்லோகம் எல்லாம் சொல்வார்கள்.

சின்னபாப்பா கண்ணயனின் தூரத்து உறவு பெண். யாருமற்ற அந்த சின்ன பெண்ணை தன் மனைவிக்கு உதவி என்று வீட்டில் வைத்திருந்தனர். பள்ளி படிப்பை முடித்திருந்தாள் அவள். வெகுளியான பேச்சு, கள்ளமற்ற சிரிப்பு , அங்கே அவள் தான் பொழுதுபோக்கு. சின்னபப்பாவிடம் நெருக்கம் அதிகமானது அபிக்கு.

இருவேளையும் அம்மாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் அதுவும் அவள் மாமாவின் தொலைபேசிக்கு,

சேதுமாதவன்,"அபி ஏன் உன் போன் எங்கே, உங்க அம்மா எனக்கு போன் பண்றா  ?"

அபி "போன் இருக்கு சார்ஜ் இல்லை "

"ஏன் "

"சார்ஜெர் எடுத்துட்டு வரலை "

"எனதும் ஐ போன் தான் என் சார்ஜெரும் செட் ஆகும் உன் போன்னிர்க்கு"

"விடுங்க மாமா பரவாயில்லை" 

பேஸ்புக்கில் பதினாறு மெசேஜ் என்று ஒரு நாள் நோட்டிபிக்கேசன் வர படித்தால் நிம்மதி கெடும் என்ற பயம் அவளை அந்த போனை அணைக்க செய்தது.

ரு நாள் காலை பூஜை செய்து கொண்டிருக்க கண்ணையன் வந்தான் தள்ளாடிய படி "என்னடா, கும்பாபிஷேகம் செய்ய நாள் பார்க்கலையா ம்ம்ம், ரெண்டாம் பௌர்ணமி எனக்கு கும்பாபிஷேகம் செய், இவனை வைத்தே செய்,ஊர் கூட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டு நல்லா செய் கூடவே இருப்பேன் " என்றான்.

சேதுமாதவன் பரவசமானார். "எங்கம்மா உத்திரவு கொடுத்துட்டா " என்றார். உடனே திட்டத்தை துவக்கினார், அந்த ஸ்வாமிஜியை அழைக்கணும், இங்கே பந்தல் போடணும், அங்கே ஹோமம் செய்யணும் என்று.

இரவு பேச்சுவாக்கில் அபி "ஏன் மாமா  எதுக்கு இப்படி செய்யணும்,அவரை ஏன் நம்பறீங்க?, எனக்கென்னமோ அவர் புவனேஸ்வரி பெயர் சொல்லி அவருக்கு உங்களை அடிமை ஆக்குகிறார் என்று தோன்றது." என்று சொல்ல

அவர் "கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் யோகம் எல்லாருக்கும் அமையாது அபி, அதும் என் முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் நானும் வாழ்ந்து இங்கே கோயில் கட்டுவது புண்ணியம், இந்த குடும்பத்தில் பிறந்ததால் அந்த புண்ணியம் உனக்கும் சேரும் " என்றார்.

அபி விடாமல் "ஏன் மாமா இப்படி நடு காட்டில் கட்ட வைத்தது உங்களை சாமி அப்போ"

அவர் "அவளுக்கு இங்கே தான் இருக்க ஆசை "

அபி "உங்களுக்கு அப்பறமா இந்த சாமியை யார் பார்த்துப்பா மாமா ??"

அவர் "எடம் தேடி வந்து உட்கார்ந்தவளிர்க்கு தனக்கான பூஜையையும் செய்து வைக்க தெரியும் "

அபி " இதை உங்க வீக்நெசாக தான் பார்கிறேன் "

அவர் "அப்படியே ஆகட்டும் போ "

அபிக்குள் கோபம் கொந்தளித்தது. தெய்வம் பாரபட்சம் பார்க்காது. அப்படி பார்த்தால் அது தெய்வம் ஆகாது. கண்ணையன் மூலம் வரும் சாமி பேசுவேதெல்லாம் "கண்ணையன் குடும்பத்திற்கு அதை செய், இதை செய், இந்த கிணற்று தண்ணி இந்த நிலத்திற்கு மட்டும் தான், உனக்கு மட்டும் இந்த குடும்பத்தின் இரகசியம் சொல்கிறேன் " என்பது தான்.

கேட்கையில் அது சாமியல்ல ஒருவனின் ஈகோ, இன்னொருவரின் சுயநலம் என்பது தெளிவாக புரிந்தது.

அமைதியாக வீட்டிற்க்கு வெளியே வந்து அமர்ந்தாள் அவள், உள்ளிருக்கும் கோபம் குறையவில்லை.

சின்னபாப்பா "என்னக்கா இப்படி ஒகாந்திருக்க?"

அபி சலிப்புடன் "ஒண்ணுமில்ல பாப்ஸ் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.