(Reading time: 33 - 65 minutes)

ஹூம்...உன்வீட்ல மரியாத பலமா இருக்கும்போல....வீட்டுக்கு வந்த என்னை இன்னும் வான்னு கேட்கலை....பசிக்குனு சொன்ன உனக்கு சாப்பாடு போடலை...மாமனாரை பத்தி ஒன்னும் விசாரிக்கலை....சரி நானாவது உனக்கு சாப்பாடு போடுறேன்...” அனித்ரா அடுக்கிக்கொண்டு போக அசைய மறுத்த உடலுடன் அம்பேல் என்று அமர்ந்திருந்தாள் அஞ்சனி.

கடந்த மாதம் முழுவதும் இரவில் இந்த நிவந்துடன் பேசி சிரித்ததில் தூக்கம் கம்மி. அதோடு எக்கசக்க அலைச்சல். நேற்று விழா மேடையில் ஏகப்பட்ட நேரம் கால்கடுக்க நின்றிருக்கிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இரவு தரையில் அமைதியற்ற தூக்கம். மொத்தத்தில் சோர்ந்து போன உடல். காலையிலும் உணவின்றி முக்கால் மணிநேர நடை. கோபத்தை வெளிபடுத்த கூட தெம்பின்றி அமர்ந்திருந்தாள் அஞ்சனி.

இதற்குள் ப்ரெட் ஆம்லெட் செய்து கொன்டு வந்து தன் அண்ணனுக்கு கொடுத்திருந்தாள் அனித்ரா.

“வந்தவள பட்னி போட்ட பாவம் உனக்கு வேண்டாம்...அவளையும் சாப்ட சொல்லு...” நிவந்திடம் சொல்லிவிட்டு அனித்ரா மாடிக்கு படியேறினாள்.

“சாப்டு...” நிவந்தின் சத்தத்தில் மெல்ல கண்விழித்துப் பார்த்தாள் அஞ்சனி.

பசியை கூட உணரமுடியாதபடி மனம் வலித்தது.

“வேண்டாம்...”

“ஏன்....எல்லார்ட்டயும் போய் நான் உன்னை கொடுமை படுத்றேன்னு சொல்லவா? சாப்டுட்டு இருக்கிறதுன்னா இங்க இரு...இல்லனா இப்பவே டைவர்ஃஸ் அப்ளை செய்துடுவோம்....”

கல்யாணத்தின் மறுநாள் பேச வேண்டிய பேச்சா இது...?

“ஏன் நிவந்த் இப்டில்லாம் பேசுறீங்க....? “ அழுகையாய் வந்தது அஞ்சனியின் குரல்.

டங்க்ங்க்ங்க்.......... தட்டு தரையில் போய் விழும் சத்தம்.

“மனுஷன நிம்மதியா சாப்டவிடுறியா..? சாப்டுறப்ப எதிர்ல உட்காந்து அழுதுகிட்டு....”

 எழுந்து போயிருந்தான் நிவந்த்.

மெல்ல எழுந்து கணவனை தேடி மாடிக்கு சென்றாள். அவன் அறையை உள்ளுக்குள் தாழிட்டு இருந்தான். அனித்ரா பால்கனி ஊஞ்சலில் ஆடியபடி மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.

இவளைப் பார்த்தவள் “மதிய சாப்பாடாவது சாப்டுற மாதிரி செய் ....பாவம் அண்ணா பசி தாங்க மாட்டான்...நல்லவேளை அப்பா வரலை இந்த கூத்தெல்லாம் பார்க்க” என்றவள் மொபைலில் தொடர்ந்தாள்.

மதியத்திற்கு சமைக்க தொடங்கினாள் அஞ்சனி.

அவள் சமைக்க பழகியது சித்தப்பா வீட்டில் தான். அங்கும் முழு சமையல் செய்தது இல்லை. சில நாட்கள் குழம்பு வைத்திருப்பாள். அல்லது கூட்டு. இரவில் குருமா அல்லது சட்னி.

இன்று ஒவ்வொன்றை சமைக்கும் போதும் ஆயிரம் சந்தேகம். சித்தியை அழைத்து சந்தேகம் கேட்கலாமா என்று பலமுறை தோன்றிவிட்டது.

இவளுக்கு நிவந்துடன் காதல் என்றதும் பொறாமைப்பட்டு இந்த திருமணத்தை நிறுத்த என்னவெல்லாமோ செய்த  சித்தியிடம்,  திருமணத்தின் மறு நாளே இவள் சமைக்க வேண்டிய நிலையை சொன்னால்  எள்ளி நகையாட மாட்டாரா? தவிர்த்தாள்.

மதியம் உணவு மேஜைக்கு வரும் போது பார்த்த நிவந்தின் முகம் இவள் வாழ்நாளுக்கும் மறக்காது.

 பசியின் மொத்த உருவமும் எரிச்சலுமாய் அவன். சோர்ந்துமிருந்தான்.

“ஆக வந்த முதல் நாளே பட்னி போட்டாச்சு...” அனித்ராவின் இந்த வார்த்தைகள் அஞ்சனிக்கு கோபத்தை தரவில்லை. ஏனெனில் அதைத்தான் வார்த்தை மாறாமல் மனதினுள் அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள் குற்ற மனப்பான்மையோடு..

அனித்ராவுக்கும் அவனுக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள் அஞ்சனி. கண்ணை கட்டிக்கொண்டு வந்தது அவளுக்கு. நேற்று இரவு சாப்பிட்டது.

“ஹூம்....வந்திருக்கவங்க சாப்டு முடிச்ச பிறகுதான் எங்கம்மால்லாம் சாப்டுவாங்க...” அனித்ரா ஆரம்பிக்க நிவந்த் எழுந்துவிட்டான் “இவ தான் இத சாப்ட முடியும்...மனுஷங்க சாப்ட முடியாது... நீ எந்திரி..”

அனித்ராவை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பிவிட்டான் நிவந்த்.

ஒன்றுமே புரியவில்லை அஞ்சனிக்கு.

அவன் கிளறி வைத்திருந்த உணவை எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள். குழம்பில் உப்பில்லை. கூட்டு சற்று கரிந்திருந்தது. மீன் இன்னும் கொஞ்சம் வெந்திருக்க வேண்டும். ஆனால் அவளால் சாப்பிட முடிந்தது. பசி காரணம்.

அவனுக்கும் தானே பசி...ஆனாலும் ராஜகுமாரன் ஏன் அட்ஜெஸ்மென்ட் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று நினைத்து விட்டான் போலும்?

வீட்டின் கதவை பூட்டிவிட்டு அந்த பெரிய வீட்டிற்குள் தனியாக உட்கார்ந்து ஒரு மூச்சு அழுதாள் அஞ்சனி.

இரவு ஏற ஏற பயம் பிடித்துக்கொண்டது.

அத்தனை பெரிய வீட்டில் அவள் மட்டும்.

அவனாக வரட்டும் என்று இருந்த எண்ணம் மாறி, அவனை தன் மொபைலில் அழைக்க வைத்தது. அவன் இவள் இணைப்பை ஏற்கவே இல்லை.

இரவு பலமுறை முயற்சித்தாள்.முடிவில் அவன் எண் ஸ்விட்ச் ஆஃப். அரண்டு போனாள் அஞ்சனி.

இரவு முழுவதும் மாடியில் அவன் அறையில் உட் தாழ்பாளிட்டு, தூங்கி விழுந்தபடி அவன் படுக்கையில் அமர்ந்திருந்தாள்.

யேசப்பா என்னை ஏன் எல்லாரும் இப்டி பண்றாங்கன்னு தெரியலையே....எனக்கு ஹெல்ப் பண்ணுங்க...

சூரியனின் கதிர்களை பார்க்கும் வரைக்குமே ஒவ்வொரு சத்தத்திற்கும் பதறிக்கொண்டு இருந்தவள், அதன் பின்பு தூங்கிப் போனாள்.

மீண்டுமாக விழிப்பு வரும்போது பக்கத்து அறையில் ஆள் நடமாடும் சத்தம். வந்துவிட்டானோ...? அவன் கதவை தட்டியது கூட தெரியாமல் இவள் தூங்கிவிட்டாளோ....? கோப படுவானே...?

பதறிக்கொண்டு எழுந்தவள் கதவை திறக்க, அருகிலிருந்த இவளது அறையில் அனித்ரா.

“அறிவே இல்லையா உனக்கு...இப்டிதன் ஜுவல்ஸை வைக்கிறதா?” இவளைப் பார்த்ததும் காய்ந்தாள் அவள்.

திருமணத்தின் போது அணிந்திருந்த நகைகளை கழற்றி அவள் அறையிலிருந்த செல்ஃபில் பரத்தி இருந்தது இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது.

“இதெல்லாம் குடுக்கிறப்ப ஒவ்வொன்னுக்கும் பாக்ஸ் கொடுத்தாங்கதான...அத எங்க...?”

திருமண அலங்காரத்தின் போது அவைகளை வரிசையாக திறந்து அவசரமாக இவள் அணிந்தது ஞாபகம் வந்தது. அதன் பின் அந்த நகை பெட்டிகள் தேவைப்படும் என்று கூட இவளுக்கு தோணவில்லை.

ஏனெனில் இப்படி மொத்தமாக நகைகளை இவள் பயன்படுத்தியதும் கிடையாது, பத்திர படுத்தியதும் கிடையாது.

“அ..து”

“ம்...அதையும் வேண்டாம்னு தூர போட்டுட்டு வந்தாச்சு..போல...”     அனித்ராவின் வார்த்தையில் எதோ உள்குத்து?

“என்ன விஷயம் அனித்ரா...எதுனாலும் ஓப்பனா சொல்லுங்க...மாத்திக்க ட்ரை பண்றேன்... எவ்ளவுனாலும் திட்டிகோங்க  ஆனா ப்ரச்சனை என்னன்னு தயவு செய்து சொல்லுங்க... எனக்கு நிவந்த் வேணும்...அவங்க கோபத்தை...அவங்க இல்லாத ஒரு நாள என்னால தாங்க முடியல....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.