(Reading time: 33 - 65 minutes)

தை அவர்கள் செய்யாமல் போயிருந்தால் இவள் நிலை என்னவாகி இருக்கும்?

அவர்களுடன் தொடர்புடைய அத்தனை மனகசப்புகளும் பணத்தோடு சம்பந்தமுடையாதாக தோன்றுகிறதே....இல்லையோ....இவளை வேலை சொல்லி வதைத்தது?

முன்பெல்லாம் தினமும் காலை, இரவு மட்டுமின்றி, ஞாயிறு சர்ச்சுக்கு சென்று வந்ததும் பசிக்க பசிக்க சமையலறையில் சித்தியுடன் சேர்ந்து பத்துபேருக்காவது சமைக்க வேண்டும். சாப்பிட்ட பின் அந்த வாரத்திற்கான இவளது துணிகளை துவைக்க வேண்டும். முறுமுறுப்பாய் இருக்கும்.

இப்பொழுதோ சித்திக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதோடு வெகு தூரத்திலிருந்து ஹாஃஸ்டலில் வந்து தங்கி படிக்கும் பிள்ளைகள் சிலரை ஒவ்வொரு ஞாயிறும் வீட்டிற்கு கூட்டி வந்து வீட்டு சாப்பாடு போடுவார் சித்தி. அந்த சமையலில் இவள் உதவுவாள்.

அதற்குதான் இவளுக்கு எரிச்சலாக வரும். ஆனால் சித்தியின் உதவும் குணம் இன்றுதான் புரிகிறது. பசியோடு நின்றுகொண்டு அடுத்தவருக்கு சந்தோஷமாக சமைப்பதென்றால்......ஒரு நாள் இவள் அப்படி நின்றதில் தலை சுற்றிப் போகவில்லையா?

ஆக நிவந்துடன் இவள் திருமண விஷயத்தில் அவர்கள் நடந்து கொண்டதை தவிர அனைத்திலும் சித்தி சித்தப்பாவின் நடவடிக்கைகள் நியாயமென்றாகிறதே...

நிவந்த் விஷயத்திலும் உண்மையில் நியாயம் தவறி நடந்திருக்கிறார்களா?

படித்து முடித்த காலத்தில் தான் இந்த நிவந்தின் அலுவலகத்தில் ட்ரெய்னியாக தேர்வானாள். 6 மாதம் பயிற்சி காலம். அதன்பின் ஸ்க்ரீனிங் எக்ஸாம். தேர்வானால் வேலை நியமனம் என்ற நிலையில்,

 முதல் முறை நிவந்தை கண்டதுமே இவள் மனம் சரிய தொடங்கியது என்றால், அவனது ஒவ்வொரு நடவடிக்கை, பிறரிடம் பழகும் பாங்கு, நியாமான சிந்தனை, வேலை பார்க்கும் திறன் ஒவ்வொன்றையும் காண காண காதலில் சரணாகதி ஆனது.

நிவந்த் மீது இவள் மனம் அலைபாய்கிறது என்று உணர்ந்த சித்தி இப்படி ஆசையை வளர்த்துக்கொள்ளாதே...இது நிலாவை பிடிக்கும் முயற்சி என்று  அறிவுரை சொன்னதன் நோக்கம் இவளின் நன்மை என்று இப்பொழுது புரிகிறது. அன்று எரிச்சல் மட்டுமே வந்தது.

அடுத்தும் நிச்சயமே முடிந்த பின்பும் ஆயிரம் நிபந்தனைகள். அலுவலகத்தில் ட்ரெய்னிங் பீரியட் அப்பொழுதுதான் முடிந்திருந்தது அஞ்சனிக்கு

இனி வேலைக்கு போக்கூடாது, இவர்களிடம் கேட்காமல் அஞ்சனியை நிவந்த் எங்கும் அழைத்துப் போக கூடாது...இரவு ஏழு மணிக்குள் அவள் வீட்டிற்கு வந்தாக வேண்டும். இப்படி ஏகபட்ட கெடுபிடிகள்.

நிவந்தையும் இவளையும் எவ்வளவாய் அவர்கள் நம்பவில்லை, எத்தனை கீழ்தரமாய் நினைக்கிறார்கள்  என்று அப்பொழுது இவளுக்கு கோபமாய் வரும்.

 ஆனால் கடந்த இரு இரவுகளில் தனியாய் உட்கார்ந்திருந்தபொழுது என்ன என்ன நினைவுகள் எல்லாம் வந்து இவளை பயம் காட்டின? நிவந்திற்கு ஆக்சிடெண்ட் ஆகி இருக்குமோ....இனி வரவே மாட்டானோ...இப்படி எத்தனை எதிர்பதமான நினைவுகள்....? அவன் தன் பார்வைக்குள் இருந்தால் போதும் என்று இவள் இன்னமும் தவிக்கவில்லையா?

கண்ணால் காணமுடியாத சூழலில் மனம் பாதுகாப்பிற்கான உறுதியை பலமடங்கு எதிர்பார்ப்பதும்....எதிர்பதமாய் நினைத்து கலங்குவதும் அன்பின் அடையாளமன்றோ.... பாதுகாப்பு முயற்சி தாய்மையின் வெளிப்பாடு அன்றோ....குஞ்சுகளை தாய் சிறகில் அடைப்பது குஞ்சின் மீதான அடக்கு முறையோ, அவநம்பிக்கை செயலோ கிடையாதே.... அது தாய்மையின் தியாக அடையளமல்லவா? எதுவானாலும் என்னை தாண்டியே என் பிள்ளைகளை தொடவேண்டும் என்ற நினைவின் செயலாக்கம் அன்றோ....

ஆக சித்தி இவளை மகளாக பார்த்திருக்கிறாள் ஆனால் இவள் அவர்களை தன்னிடம் கடன் பட்ட வேலைக்காரர்கள் போல் பார்த்திருக்கிறாள்....

அப்படித்தானா? ஆனால் நிவந்தின் தந்தையிடம் சென்று இத்திருமணம் வேண்டாம் என்று சித்தி சொன்னதாக நிவந்த் சொன்னானே...?

வள் அழுத்திய காலிங் பெல்லின் பலனாக கதவை திறந்தது நவிரா..

“ஹை....அஞ்சுக்கா வந்தாச்சு....நீங்க ரொம்ப பிஸி....கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு அம்மா சொன்னாங்கக்கா....ஆனா நீங்க வந்துடீங்க...”என்றபடி குதித்த நவிராவைப் பார்க்க கண்ணில் நீர் கட்டியது என்றால் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து வெளியில் வந்த சித்தியை பார்த்ததும் கட்டி கொண்டு அழுதாள் அஞ்சனி.

“சாரி சித்தி...வெரி சாரி...” என்றபடி.

“என்னடி...என்ன ஆச்சு....” என்ற சித்தியின் குரலில் அம்மாவின் சத்தம்.

தன் மன நினைவுகளை அதன் திருந்தல்களை கொட்டி தீர்த்தாள் அஞ்சனி. ஆனால் இப்படி திருந்திய நினைவுகளுக்கு காரணமான நிவந்தின் செயல்களை சொல்ல மனம் வரவில்லை.

கேட்டிருந்த சித்தியோ...”சரியான லூசு....இத சொல்ல கிளம்பி வந்தியாக்கும்...இப்படி ஒரு அழுகை வேற, நான் கூட மாப்ளைக்கும் உனக்கும் என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்....கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனதும் எல்லாருக்கும் பிறந்த வீட்டை பத்தி இப்படி எமோஷனலா தோணும்....அப்றம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்...போ முகத்தை கழுவு... .மாப்ள வர்றதுக்குள்ள நைட் டிஃபன் செய்யனும்...இத்தனை மணிக்கு வந்துருக்க... சாப்பிட்டுட்டே போங்க” என்றபடி சாதாரணமாக எழுந்து போனார்.

“சித்தி நிவந்த் அப்பாட்ட எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க...”

திரும்பி பார்த்தார் சித்தி.” சின்ட்ரெல்லா ஸ்டோரீஸ் படிக்க நல்லா இருக்கும் அஞ்சு...ஆனா நிஜத்தில் ரொம்ப கஷ்டம்...அவங்க பழக்க வழக்கம் உனக்கும், உன்னோடது அவங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் உதைக்கும்...அதோட...நிவந்த் மட்டும் உன்னை விரும்பி, அவங்க வீட்ல இந்த கல்யாணதுக்கு எதிர்ப்பு இருந்தா, இப்படி பழக்க வழக்க முரண்ல வாற ப்ரச்சனையும் சொந்த பேரண்ட்ஸின் வெறுப்பும் சேர்ந்து எந்த ஆணையும் மனதளவிலாவது விவாகரத்தை நோக்கி தள்ளும்...அதான்...நிவந்த் வந்து பெண்கேட்டதும்....அவங்க அப்பாவை பார்த்து இதை தடுத்து நிறுத்த சொல்லி கேட்டுட்டு வந்தேன்......அதையும் தாண்டி அவங்க சம்மதிச்சாங்கன்னா நாம பணத்துக்காக பையனை வளச்சு போட்டுடோம்னு அவங்களுக்கும் உறுத்தல் இல்லாம இருக்குமே...உன்னை நல்ல படியா நடத்துவாங்கல்ல.... நிவந்த் அப்பா பேச்சை கேட்டு உன்னை கல்யாணம் செய்யாம போறத கூட தாங்கிடலாம்...ஆனா கல்யாணம் செய்துட்டு பின்னால அவங்க வீட்டாளுங்க காரணமா உன்னை பிரிஞ்சா தங்க முடியாதே...அதான்....

சரி இப்ப எதுக்கு அந்த பேச்சு அதான் நிவந்த் அப்பாவே  விரும்பி வந்து பொண்ணு  கேட்டு, அனித்ராவும் நிவந்தும் ஆளாளுக்கு அஞ்சனிக்கு நான் கேரண்டின்னு ஆயிரம் உறுதி மொழி கொடுத்து கல்யாணமும் ஆயிட்டே....”

சித்தி அடுப்படிக்குள் செல்ல அதிர்ந்து போய் நின்றாள் அஞ்சனி. நிவந்த்  சித்தியிடம் வந்து பெண்கேட்டாராமா? சித்தி சரி என்று சொன்ன பின்பு நடந்த திருமணமா இது. அனித்ரா....? இந்த கதை எதுவும் இவளுக்கு தெரியாது.

இவளிடம் நிவந்த் மணக்க கேட்டான், இவள் சம்ம்மதித்தாள், இவள் சித்தியிடம் சொன்னாள், நிச்சய தார்த்தம், திருமணம் இப்படித்தன் இவள் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறாள். நிவந்த் எப்போது சித்தப்பாவிடம் வந்து பெண்கேட்டான்?

நிச்சயத்திற்கு பின் ஒருநாள் நிவந்துடன் அலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த காலத்தில் “உங்க சித்தியே எங்க வீட்டு படியேறி வந்து   இந்த பொண்ணுட்ட இருந்து உங்க பையனை காப்பாத்துங்கன்னு  சொன்ன பொண்ண கல்யாணம் செய்ய போறேன்...உன்ட்ட மாட்டிகிட்டு நான் என்ன ஆகபோறனோ” ன்னு கிண்டலடித்தபோதுதான் இவளுக்கு சித்தி இப்படி ஒரு வேலை செய்திருப்பது தெரிந்தது. சித்தியின் சதி என்று அப்பொழுது நினைத்தவள் அதை நிவந்திடம் கூட பேச விரும்பவில்லை. தன் வீட்டை பற்றி தானே அவனிடம் குறை பட வேண்டுமா என்ற எண்ணம். அதோடு தான் பெருந்தன்மையாக நடந்து கொள்வதாக வேறு ஒரு நினைப்பு இவளுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.