(Reading time: 34 - 68 minutes)

ப்ள்ஸ் ஒன் சேர்ந்த முதல் நாள். புதுப் பள்ளி, புது முகங்கள் என எல்லமே புதிதாய் இருந்த அந்த நாளில் தான் திவ்யா அறிமுகமானாள். முதல் பார்வையிலேயே சட்டென பிடித்துப் போய் விட்டது அவளை. ஆளைக் கவரும் அழகு, கலகலப்பான பேச்சு என எனக்கு நேர் எதிராக இருந்தாள். முதல் சில நாட்களில் “ஹாய்,,பை” நட்பாக இருந்த நாங்கள், அடுத்த ஒரு வருடத்தில், ‘ட்வின்ஸ்’ என்று பெயர் பெற்று விட்டோம். என்நேரமும் ஒட்டிக் கொண்டே திரிவோம். தினமும் எனக்கு லஞ்ச் எடுத்து வருவதிலிருந்து,டெஸ்ட் எழுத பேப்பர் கொண்டு வருவது வரைக்கும் எல்லாம் அவள் தான். டெஸ்ட்டில் அவளுக்கும் சேர்த்து பிட் எழுதுவதிலிருந்து,அவளை பைக்கில் தினமும் வீட்டில் ட்ராப் பன்ணும் வரைக்கும் எல்லாம் நான் தான். பல முறை யோசித்திருக்கிறேன் அப்படி என்ன இவளிடம் நான் கண்டுவிட்டேன் என்று. இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அது தேவையும் இல்லை.

பின்னர் ஒரே கல்லூரி. ஒரே கோர்ஸ். ஒரே பென்ச். ஒருவருக்குள் ஒருவர் ஒன்றிப் போய்விட்டோம்.

இடையில் அவளுக்கு ஏற்பட்ட காதலோ, அவளின் காதலனோ எங்களுக்குள் சிறிதளவு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ப்ரேம் நல்ல பையன் தான். எல்லா விதத்திலும் திவ்யாவுக்கு முழுமயான மேட்ச்.....இந்தக் காதலுக்காக அவர்கள் பட்ட கஷ்டத்தை நான் பட்டது தான் அதிகம். நடு ராத்திரியில் இவளுக்கு ரீ-சார்ஜ் செய்து விட கடைக்கு ஓடுவதிலிருந்து, இப்படி இவர்கள் அடிக்கடி சந்திக்க ஏற்பாடு செய்து விட்டு ,அவள் திரும்பி வரும் வரை பார்க் பெஞ்ச்சில் படுத்து வானத்தை வேடிக்கை பார்ப்பது என இவர்கள் காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து நான் படும் பாடு.. அய்யயயோ..பல நேரங்களில் எனக்கே சிரிப்பு வரும்..ஆனால் என்னைப் போலவே இவளை பார்த்துக் கொள்ள ஒருத்தன் இருக்கிறான் என்று எண்ணும் போது அந்த சிரமமெல்லாம் பறந்து போகின்றன.

சிவப்பு சிக்னல் விழ , நானும் பழைய நினைவுகளிலிருந்து திரும்பினேன்.

அடுத்த சிக்னலில் இறங்கப் போகிறாள்.

அப்போது அவளின் செல்போன் சினுங்கியது. ஃபோனைக் கையில் எடுத்து பார்த்தவள் புன்னகைத்தாள்.

காதோடு அணைத்துக் கொண்டவள் “ ஹாய் டா.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்” என்றாள்.

அவன் தான் அழைத்திருக்கிறான். சில நொடிகள் மெளனம்.

 “வாட்?? என்னடா சொல்ற?” அவளின் குரலில் அதிர்ச்சி கூடவும் அவள் பக்கம் திரும்பினேன்.

அவள் கண்ணில் அத்தனை கோபம்,“நோ,,,நா எவ்ளோ ப்ளேன் பண்ணி வெளியே வந்திருக்கேன் தெரியுமா? எதாவது பண்ணு“, என்றவள் எதோ மெதுவாகச் சொன்னாள்.

எனக்கு புரிந்துவிட்டது. வெளியில் திரும்பி வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.

என்ன சொன்னானோ தெரியவில்லை. மேலும் சில நொடிகள் ஃபோனில் பொறிந்து தள்ளிவிட்டு கட் செய்தாள்.

“ப்ளேன் கேன்சல் டா” என்றாள் கோபம் கலந்த ஏமாற்றத்துடன்.

எனக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.

“என்னாச்சு?”

“அவன் பேரண்ட்ஸ் வீட்ல தான் இருக்கப் போறாங்களாம்” 

“ஏன்?“

“திருப்பதி போகலையாம். அதனால இவனும் வீட்லேர்ந்து வெளில வர முடியாதாம்“,அவள் முகம் சுருங்கிப் போய் விட்டிருந்தது.

“சரி விடு.. இன்னோரு சாண்ஸ் வராமையா போயிடும்? அப்போ உண்மையாவே ஊட்டி போறோமா?”

“அடப் போடா.. இப்போ அதொன்னு தான் குறைச்சல்” என்றவள் திடீரென கண்ணீர் விடத் துவங்கிவிட்டாள்.

இது எனக்கு புதிதல்ல. எதிர்பார்த்தது தான். திவ்யா ஒரு வித்தியாசமான கேரக்டர். வெளியில் தான் துடிப்பான,துடுக்கான தைரியமான பெண். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. சின்னக் குழந்தை மாதிரி. சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள அவளால் முடியாது. பட்டென கண்ணீர் துளிர்த்திடும். சமாதானப் படுத்துவதற்குள் எனக்கு போதும் போதுமென ஆகிவிடும்.

“ஹேய் கமான் டார்லிங்க்.. என்னது இதுக்கெல்லாம் அழற?”..அவளை நெருங்கி அனைத்துக் கொண்டேன். இதுவும் எங்களுக்குள் வழக்கம் தான்.

என் தோளில் சாய்ந்து கொண்டவள் தேம்பித் தேம்பி அழத் துவங்கினாள். “இல்லடா.. உங்கிட்ட நிறைய விஷயம் நான் சொல்லல. இப்பெல்லாம் ப்ரேம் ரொம்ப மாறிட்டான். என்ன கண்டுக்கிறதே இல்ல. அவனுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் போயிடுச்சு. அதிகமா பேசுறதில்ல. மெசேஜ்க்கும் ஒழுங்கா ரெஸ்பாண்ட் பண்றது இல்ல. எப்பவாவது தான் மீட் பண்றோம். அதுவும் கொஞ்ச நேரம் தான். நானும் கொஞ்ச நாளா கவனிச்சிட்டு தான் இருக்கேன். அனிதா கூட அதிகமா சுத்துறான். என்ன விட அவளுக்கு இம்பார்டன்ஸ் தற்ரான். போன வாரம் அவ பர்த்டே அன்னிக்கு அவ்ளோ காஸ்ட்லி ஃபோன் கிஃப்டா கொடுத்திருக்கான். எனக்கு கூட அதெல்லாம் பண்ணினது கிடையாது. என்ன நடக்குதுனு தெரில. ஆனா ஏதோ தப்பா நடக்குதுனு மட்டும் தெளிவா புரியுது” ,,இதை சொல்லி முடிக்கும் முன்னரே அழுகை மூச்சுத் திணற வைக்கும் அளவுக்கு அதிகமாகியிருந்த்தது.

“ஸ்டுபிட்....நீ பேசுறது ரொம்ப தப்பு திவ்யா. பொதுவா பசங்க அப்படி தான் இருப்போம்.ஃபர்ஸ்ட் ரொம்ப இன்ட்ரஸ்ட் காட்டுவோம். அப்புறம் நாளாக நாளாக அத அதிகமா காட்டிக்க மாட்டோம். அதுக்காக லவ் குறஞ்ச்சிட்டதா அர்த்தமில்ல. எங்களுக்கு டிஸ்ட்ராக்ஸ்ன் ஜாஸ்தி. நிறைய வெளில சுத்துறோம்...ஃப்ரெண்ட்ஸ்..அது இதுன்னு கொஞ்சம் டைவர்ட் ஆகுறோம்.அவ்ளோ தான்..அப்புறம் அனிதா பத்தி நீ ஏன் அப்பிடி நினைக்குற? அவங்க ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்காங்கனா லவ் பண்றாங்கனு அர்த்தமா? அப்போ நம்ம ரெண்டு பேரும்? நம்ம விட யாராவது ரெண்டு பேர் இவ்ளோ க்ளோஸா இருக்க முடியுமா? நாம ஹக் பண்றதில்ல? எவ்ளோ தடவை நீ எல்லார் முன்னாடியும் என் கன்னத்தில கிஸ் பண்ணிருக்க!! அதுக்காக நாம லவ் பண்றோமானு யாராவது உங்கிட்ட கேட்டா சும்மா இருப்பியா?..அது போலத் தான் அவங்களும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க. எதையும் நீயாவே முடிவு பண்ணாத..ஓகே?” ..

சொன்னது கொஞ்சம் புரிந்தது விட்டது போல. எதுவும் பேசவில்லை. ஆனால் அழுகை குறைந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பர்ஸைத் திறந்து அதன் லாட்ச்சில் இருந்த கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொண்டாள். பர்ஸிலிருந்து ஒரு பென்சிலை எடுத்து அழிந்த மையை திரும்பவும் தீட்டிக்கொள்ளத் துவங்கிவிட்டாள். அதானே!! என்ன நடந்தாலும் இவளுக்கு இது முக்கியம். மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.

“போலாம் டா” கண்ணடியைப் பார்த்தவாறே என்னிடம் சொன்னாள்.

“எங்க? ஊட்டியா? “

“இல்ல..அங்க போக மூட் இல்ல. வேற எங்காவது போலாம். ஈவ்னிங் வீட்டுக்கு போயிடுவோம். கேட்டா நைட் அங்க ஸ்டே பண்லனு எதாவது சொல்லிக்கலாம் அம்மா கிட்ட”

“ம்ம்,,எங்க வீட்டுக்கு போலாமா?”

“லூஸா நீ? உங்க அம்மா எங்க அம்மா கிட்ட சொல்ல மாட்டாங்களா?”

“இல்ல..அம்மா அப்பா வீட்ல இல்ல. தம்பி மட்டும் தா இருப்பான். நோ ப்ராப்ளம்.”

“ம்ம்ம்,,ஃபர்ஸ்ட் எதாவது படத்துக்கு போலாம். அப்புறம் டைம் இருந்தா உங்க வீட்டுக்கு போலாம்.”

யோசித்தேன். இந்த ஐடியா ஓகே எனப் பட்டது. வீட்டுக்கு போய் கரண்ட் இல்லாமல் போரடித்து கிடப்பதை விட எதாவது படத்துக்கு போவது பெட்டர்.

“சரி போலாம்,,எந்தப் படம்?”.

“ராஜா ராணி?”.

னிக்கிழமை மதியம் என்பதால் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. டிக்கெட் வாங்கிகொண்டு த்யேட்டருக்குள் நுழைந்தோம். அந்த மெல்லிய ஒளியில் தடவித் தடவி இரண்டாவது வரிசையில் சென்று அமர்ந்தோம். ஃப்ரெண்ட்ஸோடு வரும்போதெல்லாம் கடைசி வரிசையில் அமர்வது தான் வழக்கமென்றாலும் இன்று அதில் விருப்பம் இல்லை. கார்னர் சீட் ஜோடி என்று எங்களை யாரும் அனுமானிக்கக் கூடாதென்ற எச்சரிக்கையில். அங்கங்கே பிஸியாக பல ஜோடிகள் , அதை ரகசியமாக நோட்டமிடும் இளைஞர்கள் சிலர் எனப் பரவலாக இருக்கைகள் நிரம்பியே இருந்தன.

சுட்டெறிக்கும் கோடைக்கு இந்த குளிரூட்டப் பட்ட திரையரங்கு சொர்கமாய்த் தெரிந்தது. மெதுவாக ஒவ்வொரு விளக்காக அணைக்கப்பட்டது. வழக்கமான விளம்பரங்கள் திரையில் தோன்றத் தொடங்கின.

படம் எனக்கொன்றும் அவ்வளவாக ஒட்டவில்லை.முதல் அரைமணி நேரம் லைட்டாக போரடித்தது. பின்னர் அப்படியே கொஞ்சமாக நானும் படத்தில் மூழ்கிவிட்டேன். நயன்தாராவின் சோக ஃப்ளாஸ்பேக்கிற்கு ஆர்யா திரையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது , என் மணிக்கட்டில் குளிர்ச்சியாக இரண்டு மூன்று துளிகள் விழுந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.