(Reading time: 34 - 68 minutes)

னக்கு பயம் அதிகரித்துக் கொண்டே போனது. எதெற்கெல்லாமோ அழுது தீர்ப்பவள் இப்போது அமைதியாக இருக்கிறாள்.

“திவ்யா”

“ம்ம்ம்..”

“ஏதாவது பேசு”

“என்ன பேசலாம்?”

சொல்லிவிட்டு போலியாய் புன்னகைத்தாள்.

“ப்ரேம் இப்படி பண்ணுவனா? அது வேற யாராவதா இருக்கும். நாம் பேசிப் பாப்போம். ஒருவேளை சும்மா ஃப்ரெண்ட்ஸாக் கூட வந்”

“ஆமா..ஃப்ரெண்ட்ஸ் தான். த்யேட்டர்ல கார்னர் சீட்ல உக்காந்து கிஸ் பண்ணுவாங்க.. ஃப்ரெண்ட்ஸ் தான்“ முகத்தை திருப்பிக்கொண்டுவிட்டாள்.

இதற்கு மேல் நான் என்ன சொல்லட்டும்? எல்லாம் அப்பட்டமாகத் வெளிப்பட்டுவிட்டது. இப்படி ஒரு துரோகத்தை ப்ரேம் செய்வானென்று நானும் எண்ணியதே இல்லை. அநியாயத்துக்கு காதலைப் பொழிவான். பல நேரங்களில் இவள் மீது பாசம் காட்டுவதில் எனக்கும் அவனுக்கும் மறைமுகப் போட்டியே இருந்திருக்கிறது. அதனால் அவளைக் காட்டிலும் எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. 

அதற்குப் பின்னர் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை. எங்கே போவதென்ற இலக்கே இல்லாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

மேற்கே சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பரந்து விரிந்திருந்த அந்த கடற்கரையினை பார்க்கப் பார்க்க சலிக்காத அழகு. ஆர்ப்பரிக்கும் கடல் இன்று அமைதியாக அலைவீசிக் கொண்டிருந்தது. மாலை மெதுவாக இரவைத் தழுவிக்கொள்ளத் தொடங்கியிருந்தது. வெகு தூரத்தில் ஆங்காங்கே மனித உருவங்கள் தென்பட்டன.  ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் அலைகள் ஓடி வந்து காலைத் தொடும் தொலைவில் அமர்ந்திருந்தோம்.

பேரமைதியான அந்த மாலையில், குளிர் காற்று மனதிற்கு இதமளித்தது.

“ஏதாவது சாப்பிடுறியா?”

“ம்ம்ம்..விஷம்”

அவள் பதிலால் எரிச்சலானேன். ஆனால் அவள் நிலமையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி விடு,,அதையே நினைச்சிட்டு இருக்காத..பின்னாடி எப்போவாவது உண்மை தெரியறத விட இன்னிக்கே அந்த பாஸ்டர்ட் பத்தி தெரிஞ்சிடுச்சேனு நினைச்சு சந்தோசப் படு”..

“ஹ்ம்ம்” மறுபடியும் அதே மெல்லிய புன்னகை.

“திவ்யா..உண்மையிலேயே உனக்கு வருத்தம் இல்லையா? இல்ல நடிக்கிறியா? ஒரு சின்ன ஏமாற்றத்தக் கூட நீ தாங்கிக்க மாட்ட. ஆனா இப்போ நீ எந்த ரியாக்ஸனும் இல்லாம இருக்க. நீ அழுதிருந்தாக் கூட பரவாயில்ல. இப்படி இருக்கிறது தான் பயமா இருக்கு”

இன்னும் பக்கமாக நகர்ந்து வந்து உட்கார்ந்து என் கையை எடுத்து தன் கைகளால் பொத்திக்கொண்டாள். என் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“நிஜமாவே எனக்கு அழத் தோனலடா..நான் எதுக்கு அழனும்? நான் அவன உண்மையா லவ் பண்ணேன். அவனும் அப்படித்தான்னு நம்பினேன். ஆனா அவன் ஏமாத்திட்டான். இதுல என் தப்பு ஏதும் இல்லயே? அப்புறம் ஏன் அழனும்? ஆசைப் பட்டது கிடைக்கலேனா அழுவேன் தான். ஆனா அவன் ஏமாத்திட்டதுக்காக அழுதேன்னா அது கோழைத்தனமா இருக்கும். நான் ஸாஃப்ட் தான் பட் கவர்ட் இல்ல” சொல்லி முடிக்கும் போதே கண்ணீர் துளிர்த்துவிட்டது.

 போலியான அந்த தைரியம் கரைந்து போனது. கைக்குட்டையில் முகத்தை புதைத்துக்கொண்டு அழத் துவங்கிவிட்டாள்.

எனக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அவளை நெருங்கி அணைத்துக் கொண்டேன். அந்தப் ப்ரேமைக் கொல்ல வேண்டும் போல இருந்தது. இவளை ஏமாற்ற எப்படிடா மனசு வந்தது?

ஆறுதல் ஏதும் சொல்லத் தோன்றவில்லை. அழட்டும். மனதில் தேங்கிய சோகத்தை, வலியை இப்படியாவது தீர்க்கட்டுமென விட்டுவிட்டேன்.

“சரி,,அழாத திவ்யா,,போலாம்..எழுந்திரு..”

அவள் காதில் விழவில்லை. மேலும் சில நிமிடங்கள் என் மேல் சாய்ந்து கொண்டு அழுது தீர்த்தாள்.

தூரத்தில் சிலரின் பேச்சுக் குரல்கள் கேட்டன. சற்று தூரத்தில் ஒரு குடும்பம் கடலில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்த சிறுவர்கள் கத்திக் கொண்டு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள்  எங்களை நோக்கித்தான் ஓடி வருகிறார்கள்.

சத்தம் கேட்டு எழுந்த்தாள். கண்கள் சோர்ந்து சிவந்து போயிருந்தன.

“போலாமா? ரொம்ப லேட் ஆயிடுச்சு”

“ம்ம்ம்..போலாம் வா’ எழுந்து நின்று அவளுக்கு கை நீட்டினேன்.

என் கையைப் பற்றிக் கொண்டு எழுந்தாள். தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த என் காரை நோக்கி நடந்தோம்.

நான் இரண்டடி முன்னாள் சென்று கொண்டிருந்தேன்.

“ஒரு நிமிஷம் நில்லுடா”

நின்றேன்.

அருகே வந்து, என் பின்னால் தட்டினாள்.

“பாரு..பேண்ட் பின்னாடி மண்ணாயிடுச்சு. எதையுமே கவனிக்காத. அப்டியே எருமமாடு மாதிரி உக்காரவேண்டியது, போகவேண்டியது..வா” அழுகையால் கம்மிப் போன குரலில் சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

வியப்பில் மூழ்கிப் போனேன். எப்படி இந்த நேரத்திலும் இவளால் என்னை கவனிக்க முடிகிறது? பல நேரங்களில் இவளின் பிறந்த நாளும்,ஃபோன் நம்பரும் கூட மறந்திருக்கிறேன். ஆனால் இவள் அப்படியல்ல. எந்நேரமும் என் நினைவுதான். ஒரு நாளைக்கு பத்து முறையாவது ஃபோன் பண்ணாமல் இருப்பதில்லை. சாப்டியா? படிச்சியா? தூங்கிட்டியா? என அன்புத்தொல்லை தான். எங்களைக் காதலர்களென பலர் தவறாய் எண்ணியதில் இவள் பங்கு அதிகம்.  சத்தியமாக என் அம்மா கூட என் மேல் இவ்வளவு அக்கரையாக இருந்ததில்லை. மிகவும் நெகிழ்ந்து போனேன்.

பல அடி தூரம் முன்னால் போய்க் கொண்டிருந்தாள். வேகமாக நடக்கத் துவங்கினேன்.

எனக்கு தொண்டை வறண்டு போயிருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும்.

“திவ்யா..” சத்தமாக அழைத்தேன். திரும்பினாள்.

“நீ கார்ல இரு. நான் போய் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன். இந்தா கீ”

கார் சாவியைக் கொடுத்து விட்டு தூரத்தில் தெரிந்த பெட்டி கடையை நோக்கி நடந்தேன்.

அதிக ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக் கடை இருந்தது சந்தோஷம் தான் . அதிலும் மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது என் அதிர்ஷ்டம். தாகத்தில் தவித்துப் போயிருந்தேன்.

கடையில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் எழுந்து கொண்டான்.

“வாங்கனா..என்ன வேணும்?”

“அக்வஃபினா ஒரு லிட்டர் பாட்டில் ஒன்னு”

திரும்பி ரேக்கிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்துக் நீட்டினான். “முப்பது ரூவானா” என்றான்.

அதை வாங்கிக்கொண்டேன். அக்வாப்யூர் என்று லேபிள் ஒட்டியிருந்தது. ஏதோ ஒன்று. குடிக்க தண்ணீர் தேவை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன்.

“அண்ணா..சில்லர கொடுங்கனா..சுத்தமா இல்ல” கல்லா பெட்டியைப் பார்த்துக் கொண்டே உதட்டைப் பிதுக்கினான்.

பர்ஸில் பார்த்தேன்.எல்லாம் நூறு ரூபாய் நோட்டுக்காளாகவே இருந்தது.

“எங்கிட்டயும் இல்ல தம்பி “ என்றேன்.

“ப்ச்” லேசாக எரிச்சல் பட்டுக்கொண்டே என்னிடமிருந்து நோட்டை வாங்கிக்கொண்டான்.

“ஒரு நிமிஷம் கடையைப் பாத்துக்கோங்கனா”

என்னிடமிருந்து பதிலைக்கூட எதிர்பாராமல் குடுகுடுவென எங்கேயோ ஓடினான்.

ஒருவேளை நூறு ரூபாயோடு ஓடிடுவானோ!! கடையைப் பார்த்தேன். எப்படியும் ஐயாயிரம் தேறும். நிம்மதியானேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.