(Reading time: 17 - 33 minutes)

தெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான் ஆனால் இன்னைக்கு நான் கண்ட கனவு என்னை ரொம்பவே குழப்பியிருக்கு… மாதங்கியை பைக்கில் பார்த்தது இரண்டு வருடத்துக்கு முன் நடந்தது… அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நிச்சயமானது எப்படி சாத்தியம்…?” என்று முடித்தவன் நித்யாவின் கருத்துக்காகத் திரும்பி பார்த்தான்…

“ஹரி கனவு கண்டுட்டு நீ கொடுத்த எஃப்பெக்டில இது கனவில்லை நிஜம்னு நினைக்க வச்சிட்ட… இதுக்காகவா தூங்கிட்டிருந்த என்னை பாதில எழுப்பி இந்த நடு ராத்திரியில் கொட்டற பனியில மொட்டை மாடியில நிறுத்தி மொக்கைப் போட்டிருக்காய்?” என்று இவள் முடிக்கும் முன்னே ஹரி அவளை முறைத்தான்…

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு என்னை முறைக்கிற… எதோ சீரியஸா போகுதேன்னு தான்… சரி இப்ப மேட்டருக்கு வருவோம்… நீ சொன்ன மாதிரி மாதங்கியோட நினைவுகள் உன் மனசுல இருக்குது… எங்க சந்தோஷத்துக்காக நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டே… இது உன் உள்ளுணர்வுல எதோ குழப்பத்தை எற்படுத்தியிருக்க அதுவே கனவா வந்திருக்கு… டேக் இட் ஈஸி” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள்…

“நீ சொல்லறதும் சரிதான்… நான் ரொம்பவே குழம்பி உன் தூக்கத்தையும் கெடுத்துட்டேன்…”

“புரிஞ்சா சரி… என்னை தூங்க விடாமல் இப்படி மொக்கைப் போட்டதுக்கு இழப்பீடா உன் கல்யாணத்துக்கு ஒரு எக்ஸ்டிரா பட்டு புடவை வேணும்” என்று கிடைத்த வாய்ப்பை தனக்கு சாதமாக்கினாள் நித்யா…

“உனக்கு இல்லாததா? ஒன்று இல்லை இரண்டு புடவை எடுத்துக்கோ… இப்போ நீ போய் தூங்கு…” என்று தங்கையின் தலையை தடவியபடி சொல்லி அவளை அனுப்பிவிட்டு தன் அறைக்கு வந்தவனால் தூங்க முடியவில்லை… நித்யா சொன்னது ஒரு வகையில் சரியென்றாலும் ஹரியால் அதை முழுமனதுடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை… கனவைப் பற்றி நினைத்தபடியே உறங்கியும் போனான்….

டுத்து வந்த நாட்களில் அலுவலகத்தின் பரபரப்பான வேலையில் அந்த கனவை மறந்து விட்டான் ஹரி… சில நாட்களுக்கு பின் அவனது அம்மா வள்ளி தன் தூரத்து சொந்தமான இராமசாமியின் வீட்டிற்கு போக வேண்டுமென எல்லோரையும் கிளப்பினார். வர மறுத்த ஹரியையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்.

சிறிது நேர பயணத்திற்கு பின், “நித்தி உங்க மாமா இராமசாமி வீட்டுக்கு போகலை… ஹரிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்கு அவங்க வீட்டுக்கு தான் போறோம்…”

“நல்ல வேலை பண்ணீங்க அம்மா… இப்படி ஏதாவது சொல்லலைனா ஹரி வராம வழக்கம் போல தப்பிச்சிருப்பான்…” என்று சந்தோஷத்தில் தன் தாய்க்கு ஹை ஃபைவ் கொடுத்தாள் நித்யா… அதற்கு பரிசாக ஹரியிடமிருந்து முறைப்பையும் பெற்றாள்…

ந்த பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினார், ஹரியின் தந்தை சுப்பிரமணி… எல்லோரும் வீட்டினுள் சென்று அமர்ந்தனர்… பெண் வீட்டாரின் உபசரிப்புகள் முடிந்து பெண்ணை அழைத்தனர்…

பெண்ணைப் பார்த்த ஹரி இன்ப அதிர்ச்சியில் மூழ்கினான்… அவளை இமைக்கவும் மறந்து பார்த்தான்… அவனைச் சுற்றி இருக்கும் உலகத்தை மறந்தான்…

அவனின் தொடையைக் கிள்ளி, “அண்ணா எவ்வளவு நேரமா கூப்பிடுவது உன்னை… ரொம்ப வழியாம அவங்க கிட்ட பேசச் சொல்றாங்க… போய் பேசிட்டு வா”

“எதுக்கு நித்தி என் மானத்தை வாங்கற? நான் போறேன்” என்று அவன் தேவதையை பின் தொடர்ந்து அவள் வீட்டு தோட்டத்தை அடைந்தான்….

ஹரி மிகவும் ஆர்வமாக அவள் தன்னுடன் பேசும் முதல் வார்த்தையை எதிர்ப்பார்த்திருக்க, அவளோ “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை… என் பெயர் மாதங்கி… என்னை மன்னிச்சிருங்க, உங்களை காயபடுத்துவது என்னோட நோக்கமில்லை… என் பெற்றோர் வர்புறுத்தவும் இங்க நிக்கிறேன்… தயவு செய்து இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லைனு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்…

வாழ்க்கையில் தான் இழந்த மகிழ்ச்சி தனக்கு திரும்பக் கிடைத்தாக எண்ணி வானத்தில் பறந்தவன் அவளின் வார்த்தையில் சட்டென்று கீழே விழுந்தான்… இரண்டாம் முறையாக தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டான்… இருப்பினும் தன்னை சமாளித்துக் கொண்டு அவன் தேவதையின் வேண்டுகோளையும் நிறைவேற்றினான்…

வீட்டிற்க்கு திரும்பிய ஹரியின் குடும்பத்தினர் அன்று முழுவதும் அமைதியாக இருந்தனர்… இரவு உணவின் போதும் அனைவரும் அமைதியாக இருக்கவும் ஹரியே பேசினான்…

“என்ன ஆச்சு இப்போ? ஏன் எல்லோரும் அமைதியா இருக்கீங்க?”

“உனக்கு அந்த பொண்ணை பிடித்திருந்ததுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்… ஏன் பிடிக்கலைன்னு சொன்னே?” என்றார் சுப்பிரமணி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.