(Reading time: 13 - 25 minutes)

என்னவள் - ஜான்சி

You are mine

என்றுமில்லாமல் 

என் மனதில்

இன்றொரு குறுகுறுப்பு,

முன்பெப்போதும் அறியாத

ஓர் உண்மையைக் 

கண்டுக் கொண்டதன் 

பரபரப்பு.

 

என்னவள் 

சிரிக்கும் பொழுதுகளை 

விடவும்,

முறைக்கும் பொழுதுகளில்

 மிகவும்

அழகாய் இருக்கின்றாள்.

 

என்னவள்

செல்லம் கொஞ்சும் 

பொழுதுகளை விடவும்,

கோபம் கொள்ளுகையில்

ஏனோ அழகை

அள்ளித் தெறிக்கின்றாள்.

 

என்னவளின்

பறக்கும் முத்தங்களின்

சப்தங்களை விடவும்

அவள் பற்கள் நறநறக்கும்

ஒலியில் இன்னும் அதிகமாய்

எந்தன்

நெஞ்சம் கவர்கின்றாள்.

 

என்னவளின்

குரல்

இழைந்து ஒலிக்கும்

செல்லச் சிணுங்கல்களை

விடவும்

தனக்குள்ளே முணுமுணுத்து

என்னைக் குறைச் சொல்லி

கடந்துச் செல்கையில்

இன்னும்

இனிமையாய்

என்னுள்ளம் நிறைகின்றாள். 

 அஜித் ரெண்டும் கெட்டான் மனநிலையில் இருந்தான் என்றுதான் சொல்லவேண்டும், என்றும் இல்லாத வகையில் அவன் திண்டாடிக் கொண்டிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக அவனை அப்படி அலைக் கழித்துக் கொண்டிருந்தாள் மாலினி என்னும் அவன் காதல் மனைவி. ஒரு புறம் என்றுமே கோபப் படாத இவளுக்கு இப்போது மட்டும் என்ன ஆயிற்று? என்றுத் தோன்ற, இன்னொரு புறம் இவ கோபத்தில் கூட எவ்வளவு அழகாக இருக்கிறாள் என ஜொள்ளிக் கொண்டிருந்தது அவன் மனது. 

 அவளின் விடைத்த மூக்கும் , அடிக்கடி கோபத்தில் மேல் உதட்டை மெல்லமாய் கடித்து வைப்பதும், சிடு சிடுவென்ற முகமும் வெகுவாய் சுவாரஸ்யமாக தோன்றியது .அவள் கோபத்தை ரசிக்கும் அதே நேரத்தில் அவள் எதற்காக கோபமாக இருக்கிறாள் என்றே அவனுக்கு புரியவில்லை. அவர்களுடையது பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான். ஆனால், நிச்சயத்திற்கும், திருமணத்திற்குமான சில மாத இடைவெளிகளில் அவர்கள் ஒருவரோடொருவர் பேசி பழகிய விதத்தில் அது காதல் திருமணம் போலவே இருவருக்கும் தோன்றிவிட்டது.

 திருமணத்தின் இந்த நாலைந்து மாதங்களாக அவர்களுக்குள் பிணக்கு எதுவும் ஏற்பட்டால் முன் தினம் எதுவுமே நிகழாதது போல முதலில் வந்து பேசுபவள் அவள்தான். தானாக அவளைப் போய் இதுவரை சமாதானப் படுத்தாததாலோ என்னவோ அவனுக்கு அவளை இப்போது எப்படி சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை.( இதுக்கெல்லாம் க்ளாஸ்கு போயா கத்துக்க முடியும்? அது கூட தெரியலையே உனக்கு அஜித்து.)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.