(Reading time: 19 - 38 minutes)

தன்பின் ஏதும் கேட்கவில்லை மது.இருவரும் சற்றே கூட்டம் குறைவாக இருந்த பகுதியில் அமர்ந்தனர்.

எப்படி இருக்கான் வினு. நீ இல்லாம அழமாட்டானா.

அவன் அப்பா, பாட்டி, தாத்தா, அத்தைனு ஒரு படையே இருக்கு. அதனால பிரச்சனை இல்ல.

"ஹ்ம்ம் சொல்லு. அப்பா அம்மா என்கிட்ட பேச சொன்னாங்களா" என்று கேட்டாள்  மது.

அதற்கென காத்திருந்தவள், "ஏன் அப்படி சொன்ன?"

அதுதான் என் முடிவு. அதான்...

நீ இன்னும் பிரபுவ நெனச்சுட்டு இருக்கியா. அதுதான் காரணமா

நிச்சயம் இல்லை. அது கடந்த காலம் வாணி.அதுக்கு திரும்பி போக முடியாது. அவருக்கு கல்யாணம் ஆகி கொழந்தையும் இருக்கு.

பின்ன என்னதான் உன் பிரச்சனை

இந்த சமூகம்….அதோட கொள்கைகள்...இதெல்லாமே தான்

புரியல...

எனக்கு கிட்டத்தட்ட ஒரு வருஷமா மாப்ள பாக்குறாங்க. இதோட நூறு வரனாவது வந்து இருக்கும். ஆனா ஒண்ணுமே செட் ஆகல.

எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு மது.அதுவரைக்கும் நாம காத்துருக்கனும்.

எதுக்கு...இதனால என்னோட நிகழ்கால நிம்மதிய நா கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு இருக்கேன் வாணி. ஒவ்வொரு தடவையும்...ஒரு ஒருத்தரா  பாத்து....அவங்ககிட்ட பேசி...அவங்க நோ சொன்னா  எங்க அப்பா அம்மாக்கு  கவலையாகுது....நா 'நோ' சொன்னா எங்க வீட்ல பிரளயமே  வெடிக்குது. இதுல நா 'நோ' சொல்றப்போ எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்வு வேற வருது...ஏதோ அடுத்தவங்க மனசு காயப்படுறதுக்கு நாம காரணம் ஆயிட்டோமேன்னு ...இதெல்லாம் எனக்கு பிடிக்கல.

இந்த மாதிரி நெறைய பேரு இருக்காங்க மது....பொண்ணோ பையனோ இந்த சமூகத்துல கல்யாணம் இப்டிதான் நடக்குது.....

அதுதான் எனக்கு பிடிக்கல

"என்ன பிடிக்கல"....கோவமாய் கேட்டாள்

இவங்க எதை பாக்கறாங்களோ இல்லையோ முதல்ல ஜாதின்னு ஒரு வட்டம். அத பத்தி வாய தொறந்து ஒண்ணுமே சொல்ல முடியாது.

இதுல ஓரளவுக்கு படிப்பு வேலை எல்லாம் சமமா பாத்து செலக்ட் பண்ணி அடுத்து இவங்க போறது ஜோசியர் கிட்ட. எனக்கு ஜோசியம் உண்மையா பொய்யானெல்லாம் தெரியாது.ஆனா நெறைய பொய்யான ஜோசியர் இருக்காங்கனு நெறைய ஜோசியர்களே ஒத்துக்கிட்டாங்க. ஆனாலும் ஜோசியம் பாக்குறாங்க...அந்த கட்டம் மட்டும்தான் தீர்மானிக்கும்....நா எப்படி வாழ்வேன்....எத்தனை குழந்தைங்க....அப்படி இப்படினு....என்னால இதெல்லாம் நம்ப முடில வாணி.

எங்க அம்மா அப்பா கூட ஏதோ சரினு அதுக்கு ஒத்துக்கிட்டாலும் பையன் வீட்டுல பாக்குறாங்க. சில பசங்களே எட்டு பொருத்தம் இருக்குற பொண்ணா  பாருங்கன்னு சொல்ற அளவுக்கு இருக்கு.

பட் பொருத்தம் இருந்தா நல்லது தான மது....

எங்க அப்பா அம்மாக்கு ஜாதகமே கெடயாது....எங்க தாத்தா பாட்டிக்கும் ஜாதகம் பாத்தெல்லாம் கல்யாணம் பண்ணல. அவங்க எல்லாம் வாழலயா. அந்த ஜெனெரேஷன் கூட பரவால்ல போல...ஸ்மார்ட் போன் காலத்துலதான் இதெல்லாம் நெறைய நடக்குது

ஆனா போன மாசம் வந்த வரன் ஜாதகம்லாம் பாக்கவேணாம்னு சொன்னாங்களாம்...அத்தை சொன்னாங்க...

சொன்னாங்க...சொன்னாங்க...கூடவே அவங்க பையனுக்கு சரியான வேல இல்லனும் ...கூடிய சீக்கிரம் எப்படியாச்சும் வாங்கிடுவோம்னு சொன்னாங்க...அது மட்டுமில்ல....உங்க பொண்ணு கல்யாணத்துக்கப்பறம் வேலைக்கு போகணும்னு கண்டிஷனையும் சொன்னாங்க...

ஆனா நீ வேலைக்கு போகணும்னு தான நெனைக்கிற....அப்பறம் என்ன....

இங்கதான் எனக்கு ஒரு பயம் வருது....பையனுக்கு வயசு முப்பத்தியிரண்டு ....இன்னுமா ஒரு ஸ்திரமான வேல கிடைக்கல...நா வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லல ...ஆனா நாளைக்கே எனக்கு குழந்தை பொறக்குதுனு வை ...அந்த இடைபட்ட நேரத்துல குடும்பத்தை சமாளிக்க வேணாமா வாணி....

.......

பொதுவா பொண்ணுங்களுக்கு வேலைக்கு போக ரொம்ப பிடிக்கும். ஆனா கல்யாணத்துக்கப்புறம் ...குறிப்பா குழந்தை வந்தா பொண்ணுங்களுக்கு மனசுல நெறைய குழப்பம் வரும்....குழந்தைங்களோட நேரம் செலவிட முடியாம ஆபீஸ்ல கலங்கின கண்ணோட வேலைக்கு வர எத்தனையோ பொண்ணுங்கள பாக்கறேன்…

அப்போ நீ என்ன சொல்ல வர....நல்லா சம்பாதிக்கிற பையன்தான் வேணும்னு சொல்றியா...

இல்ல ...முப்பத்தியிரண்டு வயசாகியும் தனக்குனு இந்த சமூகத்துல ஒரு இடத்த தக்க வெச்சுக்க முடியாத ஒரு பையன நம்பி நா போக மாட்டேன்னு சொல்றேன்.

ஆனா நீயும் வேலைக்கு போற...அப்புறம் என்ன.

ஆணும் பெண்ணும் சமம்தான்... அது எனக்கு தெரியுது....ஆனாலும் இன்னும் பொண்ணுங்க மேல வைக்கப்படுற சுமை அதிகம்தான....நீ ஒத்துக்கிட்டாலும் ஒதுக்கலானாலும்....ஒரு வீட்டோட பிரைமரி இன்கம் ஆண்தான்....செகண்டரி இன்கம்தான் பொண்ணு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.