(Reading time: 26 - 52 minutes)

தற்குமேல் கேட்க உஷாவிற்கு பிடிக்கவில்லை. கேட்டாலும் ஆதியிடம் இருந்து சரியான பதிலும் வராது. ஆதிக்கு அவனுடைய ப்ரைவசி மிகவும் முக்கியம் என்று நினைப்பவன். மனைவியாக இருந்தாலும் அவளின் பெர்சனலுக்குள் அனாவசியமாக மூக்கை நுழைக்க மாட்டான். அவனின் பெர்சனலுக்குள் மற்றவர்களை நுழைய விடவும் மாட்டான். உஷா விரக்தியாக சிரித்தாள். அவனை பற்றி தனக்கு இன்று நேற்றா தெரியும். அவனாகவே ஒரு முடிவு எடுக்கட்டும் என்று அவனை விட்டு தனியாக வந்தாள். இருவர் மனத்திலும் மாயாவை பற்றிய எண்ணங்களே.

ஆதியின் மனதிலோ அன்றைய நிகழ்வுகள்.

உஷாவிற்கோ பழைய நினைவுகள்.

ஆனால் மாயா???

காலை - ஆதியின் அலுவலகம்

தன் இடத்தில் அமர்ந்து தன்னுடைய டீம் மெம்பர்ஸ்க்கு வேலைகளை பகிர்ந்து கொடுத்தவனுக்கு, மனதினோரம் ஏதோ இனம் புரியா உணர்வு ஆக்கிரமித்தது. வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை.

ஒரு 11 மணியளவில் அவனின் சி. டி. ஓ (Chief Technical Officer) அவனை அழைத்தார். அவர்களின் லண்டன் பிரான்ச் நிர்வாகி வந்திருப்பதாகவும், டீம் லீடர்கள் அனைவரையும் இரு புது ப்ராஜெக்ட் விசயமாக பேச அழைப்பதாகவும் கூறினார். அங்கே சென்றவன் லண்டன் நிர்வாகியான பரத்தை சந்தித்து பேசினான். அவனின் நிர்வாகத்திறமை, பேச்சுத்திறமை கண்டு அனைவரும் வியந்தனர். ஆதி அவனை மனப்பூர்வமாக பாராட்டினான்.

“ரியல்லி, யு ஹாவ் கிவன் அ ஸ்பெளிண்டிட் வொர்க் சார். நீங்க இங்க இருக்க எல்லாருக்கும் ஒரு ரோல் மாடல் அண்ட் ஹீரோவாவே ஆகிட்டிங்க” என்றான் ஆதி.

“தாங்க் யு மிஸ்டர். ஆதி. நான் என் வேலை மட்டும் தான் செஞ்சேன். அதை நீங்க பெருசா பேசுறது உங்களோட நல்ல மனசை காட்டுது” என்று தன்னடக்கதுடனேயே பதில் அளித்தான் பரத்.

மேனேஜர் அவனின் மதிய உணவை பற்றி கேட்க, அவன் தன் மனைவி மக்களுடன் வெளியில் செல்வதாக கூறினான். மதியம் உணவு உண்டு வந்தவனை மின்தூக்கியில் வைத்து பார்த்தான் ஆதி. அவனுடன் அவன் மனைவி மற்றும் மகன்களுடன். பார்த்தவனால் நிஜமாக தன கண்களை நம்ப முடியவில்லை.

“ஹாய் ஆதி, லஞ்ச் முடிச்சுடிங்களா” என்று பரத் கேட்க, சுதாரித்த ஆதி, “ஆச்சு சார்” என்று பதில் உரைத்தான்.

ஆதியை யாரோ போல் பார்த்த அவனின் மனைவிக்கு “இது ஆதி இங்க இருக்க டீம் லிடர். நம்ம லண்டன் ப்ராஜெக்ட்டை கொஞ்ச நாள் பார்த்துட்டு இருந்தவரு. ஆதி மீட் மை வைப் மாயா, இது என் ட்வின்ஸ் பசங்க நிலன் அண்ட் நிவன்” என்று அறிமுகம் செய்து வைத்தான். மாயா ஒரு அரை இன்ச் அளவு புன்னகை புரிந்தாள்.

“ஹலோ, நைஸ் டு மீட் யு மேம்” என்று மாயாவிற்கு கூறிய ஆதி, “எனக்கு கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு சார் நான் கிளம்பனும்” என்று மின்தூக்கியை விட்டு வெளியில் வந்தான்.

தன் உடமைகளை எடுத்து நேராக சென்ற இடம் தன் இல்லம். வரும் வழியில் எல்லாம் அவளின் நினைவுச்சுவடுகள்.

நியூ டெல்லி - 7 ஆண்டுகளுக்கு முன்பு...

ஆதி, மாயா, உஷா மூவரும் அந்த கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஆதி, உஷா மற்றும் மாயாவை விட 2 வருட சீனியர். அக்கல்லூரியிலேயே முதுகலை பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தான். அதிலும் 3 ஆண்டுகளாக ஆதியும் மாயாவும் காதலர்கள். 3ம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது மாயாவின் 22ம் வயதில் அவளுக்கு பாஸ்டனில் படிக்க இடம் கிடைத்தது. மேற்படிப்புடன் கூடிய வேலை. கேம்பஸ் மூலமாக தேர்வு செய்யப்பட்டாள். அவள் செய்த ப்ரொஜெக்ட் பாஸ்டனில் நல்ல வரவேற்பை பெற்றது.

உஷாவிற்கு சென்னையிலும் ஆதிக்கு டெல்லியிலும் கிடைத்திருந்தது. மிகவும் சந்தோசமாக இருந்தார்கள் மூவரும். மாயா பாஸ்டன் கிளம்புவதற்கு 1௦ நாட்களுக்கு முன்பு அந்த மாலில் மூவரும் ட்ரீட் வைத்து கொண்டாடினர்.

ட்ரீட் முடிந்த பிறகு “எனக்கு கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று உஷா அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து அருகில் இருந்த புக் ஷாப்பிற்கு சென்று விட்டாள். சரியென்று அவளை அனுப்பி வைத்தனர்.

“பாஸ்டன் போறது ரொம்ப சந்தோசமா இருந்தாலும் உங்க ரெண்டு பெயரையும் விட்டு போறது நினைச்சா கஷ்டமா இருக்கு ஆதி” என்று தன் மனதில் இருந்ததை கூறினாள் மாயா.

“மாயு இந்த மாதிரி ஒரு விஷயம் யாருக்கும் கிடைக்காது. எனக்கெல்லாம் கிடைச்சா நான் பீல் பண்ணவே மாட்டேன், அப்படி பார்த்தாலும் சரியா 3 வருஷம் தான. இப்ப எல்லாம் டெக்னாலஜி வளர்ந்துக்கிட்டே இருக்கு” என்று அவளை சமாதான படுத்தினான்.

“என்னது பீல் பண்ண மாட்டியா, போறதுக்கு முன்னாடியே இப்படி சொல்ற போனப்பறம் என்னை கண்டிப்பா மறந்துருவ. உனக்கு என் மேல லவ்வே இல்லையா டா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“அம்மா தாயே, ஆரம்பிக்காத, ஏதோ உன்னை சமாதனப்படுத்த ஒரு ப்ளோல வந்துருச்சு, அதுக்காக இப்படியா?” என்று அவளை கடிந்தவன் அவளுக்கு பொறுமையாக எடுத்துக் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.