(Reading time: 14 - 27 minutes)

ம்ம்படித்துப் பார்!” என்று அவன் ஊக்க, அதனை மெதுவாக பிரித்து வாசிக்க ஆரம்பித்தாள். அதில் இருந்த ஒவ்வொரு வரியும் அவள் நெஞ்சை ரணமாக்கின.

அன்புள்ள அண்ணா,

இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும்போது நான் நீ என்னை காண முடியாத தொலைவுக்கு சென்றிருப்பேன். அதற்கு முன் உன்னிடம் சொல்லவேண்டிய சிலவற்றைக் கூறவே இதை எழுதுகிறேன்.

என் ஐந்தாவது வயதில் நமது தாய்-தந்தை இறந்தபின், என்னை வளர்த்து ஆளாக்கியது எல்லாம் நீதான். எனக்காக நீ செய்த தியாகங்கள் ஏராளம். என்னையும் கவனித்து உன் படிப்பிலும் கவனம் செலுத்தி, வெற்றி பெற்றாய். ஐஏஎஸ்சாகி உன்னை பெருமைப்படுத்துவதே என் லட்சியமாக கொண்டிருந்தேன் அண்ணா. ஆனால், அதனை நிறைவேற்ற காலம் எனக்கு அவகாசம் அளிக்கவில்லை.

ஆம். எனக்கு நுறையீரல் புற்றுநோய். தீய பழக்கம் உடையவர்களிடம் நட்பு பாராட்டி கற்றுக்கொண்ட சிகரெட்டின் விளைவு இது. நீ எவ்வளவு சொல்லியும் நான் இந்த விசயத்தில் மட்டும் கேட்கவே இல்லை. இறுதியில், இது என் உயிரையே குடிக்கப்போகிறது.

வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பது சாகும் தருவாயில் தான் எனக்கு தெரிகிறது அண்ணா! அதனைப் பசுமையாக நான் காணக் காரணம் தந்தவள், நிலாமிகா. என்னோடு கல்லூரியில் உடன் பயின்றவள். என் உள்ளம் கொள்ளை கொண்டவள்.

அவளைப் பற்றி உன்னிடம் முன்பே கூறாததற்கு என் மன்னிப்புகள். என் லட்சியம் நிறைவேறியதும் உன்னிடம் அவளை அழைத்து வந்து உன் சம்மதம் பெறவே எண்ணியிருந்தேன். ஆனால், இப்போது அதற்கு அவசியமே இல்லாது போய்விட்டது.

நான் போவதற்கு முன் ஒரு வேண்டுகோள். நிலாமிகாவிற்கு நானென்றால் உயிர். அவள் நான் இல்லாமல் வாழமாட்டாள். ஆனால், நான் செய்த தவறுக்கு அவளும் துன்பப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவள் அவ்வாறு செய்ய விடாமல் காப்பாற்று அண்ணா!

அத்தோடு, என் மனத்தில் நீங்காத இடம் பெற்ற நீங்கள் இருவரும் வாழ்வில் இணைந்தால், நான் எங்கிருந்தாலும் அதனைக் கண்டு மிகவும் மகிழ்வேன். உன் தம்பியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவாயா?

என் உயிரான இருவரும் வாழ்வில் இணைவீர்கள் என்ற நம்பிக்கையுடன், விடைபெற்று போகிறேன் உன்னிடமிருந்து. என் பழக்கத்தால் நான் தேடிக்கொண்ட இந்த முடிவுக்கு உன் வளர்ப்பை பிறர் குறை கூறவைக்க எனக்கு விருப்பமில்லை. எனவே கடலன்னையின் மடி சேர்ந்து என்னுயிரை மாய்த்துக்கொள்கிறேன்.

உன் அன்புத் தம்பி,

ரகுராம்.

கடிதத்தைப் படித்து முடித்த நிலாமிகாவின் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகிற்று. இறந்த காதலனை நினைத்து அழுவதா? இல்லை, அவன் கேட்ட ஒரு சொல்லுக்காக தன்னை மணந்து கொண்டு, திருமணம் முடிந்த இந்த ஒரு வருடமாக ஒரு சிறந்த தோழனாக விளங்கும் இந்த மனிதனை நினைத்து கலங்குவதா? அவள் நிலை அந்த வானத்திற்கே பொறுக்கவில்லை போலும்! அடைமழை பொழிய ஆரம்பித்தது.

சிறிது நேரம் மனம் விட்டு அழுதபின், அவன் முகம் கண்டாள். மரத்துப் போயிருந்தது. பாவம்! அவனுக்கும் அதே துன்பம் தானே?

நாங்காண்டுகள் பழகிய தனக்கே உயிர் பிரிந்தது போல் வலித்ததே! அப்போது, ராமின் அண்ணனாகிய இவனுக்கு? ராம் விடுதியில் தங்கி படித்ததால் இவரை இதுவரை கண்டதில்லையெனினும், இவரைப் பற்றி அவன் உரைக்காத நாளில்லையே!

பத்து வார்த்தை பேசினால் அதில் ஆறு அண்ணாவைப் பற்றியன்றோ இருக்கும்? இவளும் எத்தனை முறை அவனிடம் பொய்யாக கோபம் கொண்டிருக்கிறாள் இதற்காக?

என் அண்ணனுக்கு நான்னா அவ்வளவு இஷ்டம். நான் என்ன சொன்னாலும் தட்டவே மாட்டாருஎன்று அவன் அன்று சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை? இவன் வேறு பெண்ணை காதலித்து கூட இருக்கலாம். இருந்தும், ராமிற்காக என்னை மணந்தானே!

இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது நான் கண்டுபிடித்ததால் தானே தெரியும்? இல்லையென்றால்?? இந்த ஒரு வருடமாக தன் துன்பத்தை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு என்னை மகிழ்விக்க என்னென்ன செய்தான்? அதற்கு நான் என்ன செய்து ஈடு செய்ய போகிறேன்?

அவள் இலக்கியனைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென்று அடக்க முடியாதவனாய் சோஃபாவில் அமர்ந்து கதற ஆரம்பித்தான்.

முடியலைம்மாஎன்னால முடியலை. அவன் படிக்க வெளியூர் போன அந்த பிரிவையே என்னால தாங்க முடியலை. இப்போ, சுத்தமா முடியலை. எங்கே பார்த்தாலும் அவன் என்னை கூப்பிடற மாதிரியே இருக்கு. அதனால தான் ஊரு விட்டு ஊரு வந்துஆனாலும்…” என்று அவளைப் பார்த்தான். அதில் தான் எத்தனை வலி!

புரிந்தது அவளுக்கு. அவளைப் பார்க்கும்போதெல்லாம் ராம் நினைவிற்கு வருகிறான். அவள் மேலும் தவறுண்டல்லவா? இது நாள் வரை ராமின் காதலியாக மட்டுமே அவனுடன் இருந்திருக்கிறாள். இலக்கியனின் மனைவியாக? இல்லை என்று அவளது மனசாட்சியே அவளை சுட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.