(Reading time: 17 - 34 minutes)

இந்த கம்பனி உங்களோடதுன்னு கொஞ்சநாளைக்கு முன்னால்தான் தெரிஞ்சுது. நா சத்தியமா ரிஷப்சனிஸ்ட் வேலைக்கு வரலை. அதுக்கு எனக்கு தகுதியில்லைன்னு எனக்குத் தெரியும். உங்க கிட்ட உதவி கேக்கக்கூட எனக்கு எந்த தகுதியும் இல்லைதான், என்றாலும் நீங்க மறுக்காம செய்வீங்கன்னுதான் உங்களைத் தேடி வந்தேன். ஏதாவது ஒரு  எடுபிடி வேலை கூட என் குழந்தையை வளர்க்க போதும்" என்றவள் மறுபடியும் விசும்பி அழ ஆரம்பித்தாள்.

‘என் தேவதைக்கு நான் எப்படி எடுபிடிவேலை கொடுக்க முடியும். நீண்ட காலமாக பார்க்கவில்லை என்றாலும் மறக்கக்கூடியதா அவளது நினைவுகள்?  ஒருகாலத்தில் எனக்கே எஜமானியாகியிருக்கக் கூடியவள், சிறிது தவறியதால் மட்டும் எடுபிடியாக்க முடியுமா என்ன’, என்று எண்ணியபடி

"நிலா ,ப்ளீஸ் அழறதை நிறுத்துங்க. உங்களுக்கு நா அவசியம் வேலை கொடுக்கிறேன். சரிதானே? இப்போ நா கொஞ்சம் வெளியில போகவேண்டி இருக்கு. என்னோட வந்தா நீங்க தங்கியிருக்கிற இடத்துல இறக்கிவிட்டுடறேன் " என்றான் ஆகாஷ்.

அவனுக்கு உள்ளூர நிலாவின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள ஆசை. அப்படியே அந்த குட்டி நிலாவையும் பார்க்க விரும்பினான். ஆனால் அவளோ "இல்லை வேணாம் ஆகாஷ். நானே போய்க்கறேன், நாளைக்கு எப்போ வரட்டும்"? என்றாள் .

சற்று ஏமாற்றத்துடன் “காலையிலேயே வந்துடுங்க”. என்றவன் கார்சாவியை எடுத்தபடி கிளம்பினான்.

அவள் இன்னும் தன்னிடம் மனத்தால் நெருங்கி வரவில்லை என்பதை உணர்ந்தான் அவன். எப்படி முடியும், ஒரு காலத்தில் தன்னை உயிராக நேசித்தவனை அலட்சியப்படுத்திவிட்டு பணக்கார வரன் கிடைத்ததும் லண்டனுக்கு  பறந்துவிட்டாளே.திருமணம் கூட அங்கேயே முடிந்ததாக கேள்வி. நேரில் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அவளுக்கு அவனிடம் தயக்கம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் அவள் என்ன செய்தாலும் ஏனோ இவனால் அவளை வெறுக்க முடிந்ததே இல்லை. பணம் இல்லாததால் தன்னை அவள் நிராகரித்தாள் என்பதால் முயன்று தன் நிலையை உயர்திக் கொண்டான். ஆனால் அவள் தன்னிடம் யாசகம் கேட்கும் நிலையை நிச்சயமாக அவன் விரும்பவில்லை. அவனது காதல் உண்மையானது என்பதால் அவளது நன்மையைத் தவிர அவனால் வேறு எதையுமே நினைக்க முடிந்ததில்லை.

றுநாளிலிருந்து வேலைக்கு வர ஆரம்பித்தாள் நிலா. அவளுக்கு கவுரவ ஆலோசகர் பதவியை கொடுத்திருந்தான் அவன். அவள் எவ்வளோ மறுத்தும் கேட்கவில்லை.

" நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம். டைம் ரெஸ்ட்ரிக்ஷன் கிடையாது. குழந்தைக்காகத்தான் இந்த அரேஞ்சமென்ட். உங்களுக்கு ஓகே தானே?" என்றான்.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சார், நீங்க எனக்கு வேலை கொடுத்ததே பெரிய விஷயம். அதுவும் இப்படி ஒரு வேலை ரொம்பவே அதிகம். ரொம்ப தேங்க்ஸ் சார்" என்றாள்.

"என்னாச்சு நிலா , திடீர்ன்னு சார்ன்னு கூப்பிடறீங்க, இதெல்லாம் வேணாமே". என்றான் அவன் 

" நீங்க என்னை வாங்க போங்கன்னு கூப்பிடலையா , அதுபோலத் தான் இதுவும்”. என்றவள் அதன் பிறகு வேலையை கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.

சற்றுநேரம் அசைவற்று நின்றுவிட்டான் அவன் 'அப்படியென்றால் அவன் மரியாதை பன்மையில் பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லையா , அவனிடம் இன்னும் நெருங்கிவர விரும்புகிறாளா?' எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்தவன் அதன்பிறகு பொது இடங்கள் தவிர மற்ற இடங்களில் அவளிடம் பன்மையில் பேசுவதில்லை.

அவள் இருப்பிடத்தை அவ்வளோ சீக்கிரம் அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பின் அவள் ஒரு பங்களாவில் தங்கியிருப்பதை அறிந்து விசாரித்தான். அந்த பங்களாவில் தான் தானும் மேற்பார்வை வேலை செய்து கொண்டு தங்கியிருப்பதாக தெரிவித்தாள் அவள். மேற்கொண்டு அவனும் எதுவும் கேட்கவில்லை.

ஆனால் இந்த விஷயம் மேகாவை கொதிப்படைய வைத்தது.

அவன் தாயார் ரேணுகாதேவியிடம் சென்று "அத்தே வரவர ஆகாஷ் செய்யறது ஒன்னும் சரியில்லை. அவரோட பழைய காதலி டைவர்ட்ஸ் ஆகி ஒரு கொழந்தையோட வந்திருக்கா. அவ மூஞ்சி பாக்க சகிக்கலே.அவ வந்ததுலேர்த்தே இவரு நடவடிக்கை ஒன்னும் சரியில்லை. தேவையில்லாம அவளுக்கு நம்ம ஆபீஸ்லயே பெரிய வேல போட்டு கொடுத்தார். விட்டால் அவளையே கல்யாணம் பண்ணிக்குவார்ன்னு நினைக்கறேன்.நீங்க இப்பவே கண்டிக்காட்டி பிரச்சனையை ஆயிடும்" என்றாள்.

 அன்று மகன் வந்ததும் திருமணப் பேச்சை எடுத்தார் ரேணுகா.

"ஏம்ப்பா ஆகாஷ். எனக்கும்  வயசாயிக்கிட்டே போகுது , காலகாலத்துல உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிபாத்துட்டா எனக்கும் நிம்மதியாயிடும். . மேகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நா உன்னை வற்புறுத்த மாட்டேன். உன் மனசுக்கு யாரை புடிக்குதோ அவுங்களையே பண்ணி வைக்கிறேன்.நீ என்ன சொல்றே" என்றார்.

ஆகாஷ்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நிலாவின் மனசும் புரியவில்லை. அவள் தன் வாழ்வுக்கு இந்த குழந்தை மட்டும் போதும் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தாலும் இப்போதெல்லாம் அவளது நடவடிக்கைகளிலும் அவனிடம் ஈர்ப்பு இருப்பதை போல தோன்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.