(Reading time: 17 - 34 minutes)

“உக்காருங்க ஆகாஷ். நா எல்லா விஷயத்தையும் விளக்கமா சொல்றேன்”. என்ற நிலா அவர்களிருவரும் அமர்ந்த பிறகு தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

"மொதல்ல நீங்க என்னை மன்னிச்சுடுங்க ஆகாஷ். உங்களை நா எவ்வளோ காயப்படுத்தியிருக்கேன். இருந்தாலும் நீங்க எனக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் நினைத்ததே இல்லை.  நீங்க என்னை விரும்பனது  தெரியும் , ஆனா என் மனசு என்னன்னு எனக்கே தெரியாம போச்சு. எனக்கு அப்பா அம்மா கிடையாது. மாமா வீட்டில்தான் வளத்தாங்க. பணக்கார சம்மந்தம்னு வீட்டுல முடிவு பண்ணதை ஏத்துக்கிட்டு வெளிநாட்டுக்கு போனேன். அங்கே ஒருமாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் உங்களை விட்டுட்டு போன பிறகுதான் உங்களை எந்த அளவுக்கு நானும் நேசிச்சிருக்கேன்னு எனக்கே புரிஞ்சுது. பல நாட்கள் தூங்காம யோசனை பண்ணேன். திரும்பி வந்துடலாம்னு எங்க வீட்டுல ரகசியமா கேட்டப்போ அவுங்க  ஏற்கனவே நிறைய பணம் வாங்கிக்கிட்டுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்கன்னும் இனி என்னை திரும்ப ஏத்துக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க. என்னால உங்களை மறக்கமுடியலை ,வேற யாரையும் கணவனா ஏத்துக்கவும் முடியலை. அதனால சாகறதுன்னு முடிவு பண்ணிட்டேன்"

அதிர்ச்சியடைந்து அவளை பார்த்தான் ஆகாஷ்.

நிலா தொடர்ந்தாள் "ஆமா ஆகாஷ். உங்களை இழந்து என்னாலும் வாழமுடியவில்லை. ப்ளக்கில் கையை வைத்தேன். ஆபத்தான  நிலையில்  ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டேன்.  உயிரை எப்படியோ காப்பாத்திட்டாங்க , முகம் மட்டும் கருகிப் போனது. ஆனால் மிஸ்டர் சைதன்யனுக்கு என்னை அந்த முகத்தோட ஏத்துக்க இஷ்டமில்லை.  என் கல்யாணம் நின்னு போனது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கருகின முகத்தோட மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிச்சப்போதான் பக்கத்துக்கு வீட்டுல இருந்த மிஸ்டர் சுந்தரேசன் உதவிக்கு வந்தார்"  நிலா அந்த பெரியவரைப் பார்க்க

அந்தப் பெரியவர் பேச ஆரம்பித்தார் " ஆமா சார், என் மகளும் மருமகனும் ஒரு விபத்துல இறந்துபோனாங்க. இந்த ஒரே குழந்தையை வளக்கறதுக்காக நா உயிரோட இருக்க வேண்டியதா போச்சு. ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கு. எல்லாத்தையும் வித்துட்டு இந்தியாவுக்கு திரும்ப நினைக்கிற வேளையில பக்கத்துக்கு வீட்டுல இந்த பெண்ணை பார்த்தேன், அவளோட முகம்  கருகிப் போய் இருந்தது. அவளுக்கு நடந்ததை அறிந்து  மிகவும் வருத்தப் பட்டேன். அவளையே என் மகளா தத்து எடுத்துக்கிட்டேன். அவளும் என் பேத்தியை தன் குழந்தையைப் போல வளர்த்து வருகிறாள்.  அங்கே   எல்லாத்தையும்  செட்டில்  பண்ணிட்டு  போனவருஷம்தான்  இந்தியாவுக்கு  வந்தோம் ”. என்றார் சுந்தரேசன்.

“இங்கே வந்த பிறகு என்னால உங்களை  பாக்காம  இருக்க முடியலை. உங்களை பல இடங்கள்ல தேடி பார்த்தேன். அப்போதான் ஒருநாள் மேகாவோட நீங்க கார்ல போறதை பார்த்தேன். என்னை மறந்துட்டு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு நெனச்சேன். உங்களை ஒருமுறை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டுக்கிட்டு போய்டலாம்னு நெனச்சேன். கருகிப் போன முகத்தோட இருக்கிற என்னால  மறுபடியும் உங்க வாழ்க்கையில குழப்பம் வராதுன்னு  அந்த முகத்தோடையே  உங்களை பாக்க வந்தேன். நீங்க என்னை மறக்கலைன்னும் வேற கல்யாணம் பண்ணிக்கலைன்னும்  தெரிஞ்சுது.  உங்களை பக்கத்துல  இருந்து பார்க்கும் வாய்ப்பா ஒரு வேலையை நீங்களே  கொடுக்கும் போது எனக்கு மறுக்க மனசில்லை. ஆனா என்னை விட்டு நீங்க விலகிடணும்னு தான் எனக்கு கல்யாணம் ஆயிட்டதாவும் ஒரு கொழந்தை இருக்கறதாவும் பொய் சொன்னேன். நீங்க நா எந்த நிலமைல இருந்தாலும் என்னை மறக்கறதாயில்லைன்னும் என்னை விட்டுட்டு வேற யாரையும் நீங்க மணக்கப் போறதில்லைன்னும் உங்கம்மா பேசினதுலேர்ந்து தெரிஞ்சுது. எனக்கு ஒரே குழப்பமா இருந்தது.  கருகிப்போன அந்த முகத்தோட உங்க வாழ்க்கையில் பங்கெடுத்துக்க எனக்கு விருப்பமில்லை. அதனால தான் அங்கிள் கிட்டே சொல்லி பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஏற்பாடு செய்யச்  சொன்னேன். நல்லவேளையா என் பழைய முகமே எனக்கு திரும்பக் கிடைச்சது. இப்போ உங்க நிலாவதனியா உங்க வாழ்க்கையில பங்கெடுக்க வந்திருக்கேன் , இது எல்லாத்துக்கும் அங்கிளுக்குத்தான் நன்றி சொல்லணும் " என்றாள்.

“என்னம்மா நன்றி கின்றி இன்னிக்கிட்டு, என் மகளுக்கு நான் செய்தேன், இதுல என்ன இருக்கு”, என்றவர்  “முன்னாடியே உங்களை பத்தி சொல்லியிருக்கா சார். உங்களை மாதிரிதான் அவளும் கடைசிவரை தனியாவே இந்த குழந்தைக்காக வாழப்போறதா சொல்லிக்கிட்டு இருந்தா. ஆனா நான்தான் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு ஏற்கனவே பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்க சொல்லியிருந்தேன்,  அதுக்கு அவ இப்போதான் சம்மதிச்சா" என்றார் சுந்தரேசன்.

“ஆமா ஆகாஷ். உங்களை விட்டு நான் பிரிவதற்கு ஒருவகையில் என்  அழகும் காரணமா இருந்ததாலதான்  நா  பிளாஸ்டிக்  சர்ஜரி  பண்ணி  அந்த  அழகை  திரும்ப  அடைய  முயற்சிக்கலை. ஆனா  இப்ப  உங்களுக்காக தான்  மறுபடியும்  சர்ஜரிக்கு  சம்மதிச்சேன்” என்றாள் நிலா. 

நம்பமுடியாத  ஆச்சர்யத்தில்  வாயடைத்துப்  போயிருந்தனர்  இருவரும் .

ரேணுகாதான் முதலில்  பேச ஆரம்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.