(Reading time: 20 - 40 minutes)

"புயல் மழை திடீர்னு வரும்னு நாங்க எதிர்பாக்கல சார். நீங்களே கூட இருந்து பார்த்திங்கல்ல. எங்களோட முழு உழைப்பையும் கொட்டி தான வேலை செஞ்சிருக்கோம்"

"புரியுது சார் வேலையை சீக்கிரம் முடிச்சு கொடுத்தா நல்லாயிருக்கும்"

"இது கிரியேட்டிவ் சார். மனசில இருக்கிற கற்பனையை நிஜத்துல கொண்டு வர கலை. சில நேரங்கள்ல ஏற்படுற தாமதத்தை பொறுத்துகிட்டு தான் ஆகணும்" என்றபடி தனது காரை நோக்கி நடந்த டைரக்டர், தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது உதவியாளரை அழைத்தார். அடுத்த சில நொடிகளில் டைரக்டரின் முன்னால் வந்து நின்றார் உதவியாளர்

"நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இந்த இடமும் வீடும் பழைய மாதிரி இருக்கணும்"

"ஓகே சார்"

"வசந்த் எங்கே?"

"அன்னைக்கு ராத்திரி போனவர் இன்னமும் வரலை"

"அவன் வந்தா என்னை வந்து பாக்க சொல்லு"

"சரிங்க சார்"

டைரக்டர் விஷ்வா காரில் ஏறி புறப்பட்டார். அவர் சென்ற அடுத்த அரை மணி நேரத்தில் மீதமிருந்த தொழிலாளர்களும் புறப்பட்டு சென்றனர் .அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது.

ஜான் மட்டும் தனிமையில் நின்றிருந்தான். சில நாட்களாய் தனி மனித சுதந்திரத்தை பறி கொடுத்தவன் மீண்டும் தனது சுதந்திரத்தை அடைந்த திருப்தியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டெறிந்தான்.  

'நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இனி இந்த ஷூட்டிங் கும்பலுக்கு வீடு கொடுக்க கூடாது. எல்லாம் அந்த வசந்த் பையன் செஞ்ச வேலை' என நிறுத்திய ஜான் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். 'சும்மா இருந்தவனை இந்த காதல் கசமுசான்னு என்ன என்னத்தையோ பேசி காரியத்தை சாதிச்சிகிட்டான்' என தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டான் ஜான்.

ஷூட்டிங் ஆட்கள் விட்டு சென்ற குப்பைகள் காற்றில் சலசலத்தன. "எவ்வளவு அழகா என்னுடைய வீட்டை பராமரிச்சு வச்சிருந்தேன். அத்தனையும் நாசம் பண்ணிட்டானுங்க" என்று புலம்பியபடி குப்பைகளை பொறுக்கினான் ஜான்.

"என்ன, தனியா புலம்பிட்டு இருக்க?" என்ற குரல் ஜானை திடுக்கிட வைத்தது. மெதுவாக குரல் வந்த திசையை திரும்பி பார்த்தான். ஜெஸிகா நின்றிருந்தாள்.

"நீ இன்னும் கிளம்பலையா?"

"போகலாம்னு தான் தோணுச்சு"

"அப்போ ஏன் இன்னும் போகாம இருக்க?"

"நீ தனியா கஷ்டப்படுறியே"

ஜான் ஆச்சர்யம் கலந்த பார்வையை ஜெஸிகாவின் மீது வீசினான்.

"என்ன அப்படி பாக்குற?"

"வாழ்க்கையிலயே முதல் முறையா என் மேல இரக்கபடுறேன்னு நினைக்குறேன். பரவாயில்லை நீ அந்த அளவுக்கு மோசமான பொண்ணு இல்லை"

"இது இரக்கம் இல்லை ஜான். குற்ற உணர்ச்சி. எனக்காக இந்த வீட்டை ஷூட்டிங்க்கு கொடுத்த அந்த நன்றி கடன்"

ஜான் குப்பையை பொறுக்கியபடி சோக புன்னகையை உதிர்த்தான். அதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தன.  

"இவ்வளவு நேரம் நீ எங்க இருந்த?"

"ஏன், என்னை தேடுனியா?"

"ஆமா, நன்றி கடன் கொடுத்தா அதை வச்சு இந்த வீட்டை புதுசா மாத்தலாம்னு தேடினேன்"

ஜெஸிகா சிரித்தாள். "இன்னும் ஒரு வாரத்துக்குள்ள உன் வீடு பழைய மாதிரி மாறிடும் ஜான். நீ கவலைப்படாத"

சிதிலமடைந்த வீட்டினை மீண்டுமொரு முறை நோக்கிய ஜான், "இப்படி நடக்கும்னு நான் எதிர்பாக்கவே இல்லை. ஒரே நாளுல மொத்தமா மாறிடுச்சு"

"வாழ்க்கையும் அப்படி தான் ஜான். எப்போ என்ன வரும்னு நம்மளால கணிக்கவே முடியாது"

"குப்பைகளை அகற்ற எனக்கு உதவி செய்யுறியா ஜெஸ்ஸி?"

"கண்டிப்பா ஜான்" என்ற ஜெஸிகா குப்பைகளை அள்ள தொடங்கினாள்.

உண்மையில் அவள் ஜானை எண்ணி வருத்தப்பட்டாள். தன்னால் தான் இந்த வீடு சேதமடைந்து விட்டதாய் அவளுக்குள் ஒரு மாய எண்ணம் உருவானது. ஜானை இனி சந்திக்க மாட்டோம் என்று நிம்மதி அடைந்தவளுக்கு இந்த ஷூட்டிங் விவகாரம் விதியின் வடிவில் வந்து சிக்க வைத்ததை ஜெஸிகா துளியும் விரும்பவில்லை. ஜானை விட்டு அவள் தள்ளி சென்றாலும் ஏதோ மாய மந்திரம் நடந்து அவனை சுற்றியே தன் நாட்கள் ஓடுவது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

சிறிது நேரம் ஆளுக்கொரு புறமாய் குப்பையை சுத்தப்படுத்தியவர்கள் களைப்படைந்தார்கள். ஜெஸிகாவின் இடுப்பு பகுதி பலமாய் வலித்தது.

"என்ன, அதுக்குள்ள கிழவி போல இடுப்பு பிடிச்சிக்கிட்டு?" ஜான் கிண்டலாய் கேட்டான்.

"காமெடியா?. கொஞ்சம் தான் வேலை செஞ்சேன். அதுக்குள்ள களைப்பா இருக்கு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.