(Reading time: 20 - 40 minutes)

ஆனால், இன்று சில வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்று கொண்டிருந்தன. தேங்கிய தண்ணீர் கூட முழுவதுமாக அகற்றப்படவில்லை. சில நிமிடங்கள் அக்காட்சிகளை கண்ட அமேலியாவின் ஞாபகங்கள் வசந்தை நோக்கி திரும்பின. தான் எழுந்ததில் இருந்து வசந்தை காணாதது அமேலியாவிற்கு பயத்தைக் கொடுத்தது. சமையலறை மற்றும் இன்னும் பிற அறைகளிலும் அவனைக் காணவில்லை.  

வசந்த் எங்கே சென்றிருப்பான்? ஒருவேளை, இதுவரை தான் கண்டதெல்லாம் கனவா? என தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அமேலியா அவன் படுத்திருந்த படுக்கையை நோக்கினாள். அதில், அவன் போர்த்தியிருந்த போர்வையும் தலையணையும் அவன் இருந்தது நிஜம் என கூறின. படுக்கையின் ஓரமிருந்த புத்தகமும் வசந்தின் இருப்பை உறுதிப்படுத்தியது. அந்த புத்தகத்தை எடுத்த அமேலியா அட்டைப் படத்திலிருந்த காதலர்களை நோக்கினாள். அவளது  இதழ்கள் அவளையறியாமல் புன்னகை புரிந்தன.

துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் உயிர் பெற்று விளக்குகளை எரிய வைத்து மின்விசிறியை சுழலச் செய்தது. இருளையே பார்த்துக் கொண்டிருந்த அமேலியா சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். காற்றில் அவள் வரைந்த ஓவியங்கள் அசைந்து அவள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பின.  .

ஓவியங்களை தான் வைத்த இடத்திற்கும் இப்பொழுதிருக்கும் இடத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என தெரிந்துகொண்ட அமேலியா, நிச்சயம் வசந்த் இந்த ஓவியங்களை எடுத்து பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம் என எண்ணினாள்.  

அவள் மனதில் மெல்லியதாய் பயம் ஊடுருவி உடலை நடுங்கச் செய்தது. தன்னையும் அறியாமல் வசந்தின் உருவத்தை வரைந்ததை அவன் தெரிந்து கொண்டானா? அதனால் தான் கோபத்தில் இங்கிருந்து சென்று விட்டானா என்று நினைத்த அமேலியா தான் தவறு செய்துவிட்டதாக வருந்தினாள்.

அவள் இதயம் படபடத்தது. மேற்கொண்டு என்ன செய்வதென்ற கேள்விக்கு அவளால் விடை கூற முடியவில்லை.

நடுக்கத்துடன் தான் வரைந்த ஓவியங்களை எடுத்து கடைசி சில தாள்களை புரட்டினாள். அந்த ஓவியங்களில் வசந்தின் சாயல் இருக்கும்.ஓவியங்களை பார்த்தவள் நெற்றியை தேய்த்தபடி கண்களை மூடிக் கொண்டாள். திடீரென, கதவு திறக்கும் சப்தம் அவள் சிந்தையைக் கலைத்தது.  

உணவு பொருட்களோடு வசந்த் உள்ளே நுழைந்தான். லிப்ட் வேலை செய்யாததால் படியில் ஏறி வந்தவனுக்கு மூச்சு வாங்கியது. தன்னிடமிருக்கும் பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு ஜாடை காட்டினான் வசந்த். அமேலியாவிற்கு தயக்கம் உண்டானது. சீக்கிரம் வாங்கிக்க என்பது போல் வசந்த் மீண்டும் ஜாடை காட்டியதால் வேறு வழியில்லாமல் அவனிடமிருந்த பொருட்களை வாங்கி கீழே வைத்தாள் அமேலியா.

மூச்சு வாங்குவது நிற்காததால் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள படுக்கையில் அமர்ந்த வசந்திற்கு தண்ணீர் கொடுத்தாள் அமேலியா. தண்ணீர் பருகிய பின்பு தான் வசந்திற்கு சற்று நிம்மதி பிறந்தது.

"லிப்ட்டிலயே போயி பழக்கபட்டுட்டேனா, அதனால படி ஏறி வர சிரமமா இருக்கு. விஞ்ஞானம் நம்மளை சோம்பேறிகளா தான் மாத்தி வச்சிருக்கு"

வசந்த் பேசியதை எதுவும் காதில் வாங்காத அமேலியா பால் பாக்கெட்டை எடுத்து கிச்சனுக்குள் சென்றாள். வசந்த் ஜன்னலருகே சென்று சிறிது நோட்டமிட்டு விட்டு சமையலறையில் இருக்கும் அமேலியாவைப் பார்த்தான். அமேலியாவும் வசந்தை நோக்கினாள். அவளைப் பார்த்து புன்னகை செய்தான் வசந்த். அமேலியாவின் மனதில் பயம் படர்ந்தது. தன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.  

நீண்ட மூச்சை வெளியேற்றிய வசந்த் மீண்டும் படுக்கையில் சென்று அமர்ந்தான். அவன் கண்களில் ஓவியத்தாள்கள் தென்பட அதை எடுத்து மீண்டுமொரு முறை நோட்டமிட்டான். காபியோடு வெளியே வந்த அமேலியா வசந்தின் செயலைக் கண்டு திடுக்கிட்டாள். தயங்கியபடி வசந்தின் முன்னால் வந்து காபி கப்பை நீட்டினாள்.

ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே காபி கப்பை வாங்க முயன்றான் வசந்த். அதே நேரத்தில் அமேலியாவின் கை நடுங்கவே சிறிது காபி அவன் மேல் சிந்தியது. சூடு பொறுக்கமுடியாமல் துடித்தான் வசந்த். அதைக் கண்டு பயந்த அமேலியா அரேபிய மொழியில் தன் மன்னிப்பை தெரிவித்தாள்.

"என் மேல உனக்கு ஏதாச்சும் கோபமா? அன்னைக்கு வாந்தி எடுக்குற,  இன்னைக்கு காபி கொட்டுற. .ஏன் இப்படி இருக்க?" என சற்று கோபத்தோடு சொன்னான் வசந்த்.

அமேலியாவின் கண்கள் அவளையும்றியாமல் கலங்கியது. உடனே, சினம் தணிந்த வசந்த், "சரி சரி பரவாயில்லை விடு" என்று சாந்தமாக கூறினான். சமையலறைக்குச் சென்று தன்னை மறைத்துக்கொண்டாள் அமேலியா. அவள் கலங்கியதை நினைத்து தன் கோபத்தை எண்ணி நொந்துகொண்டான் வசந்த்.

"நான் ஏன் இப்படி இருக்கேன்? இதுக்கு எல்லாமா  கோபப்படுவாங்க?" என தனக்குத்தானே பேசினான். பிறகு, காபியை சுவைக்கத் தொடங்கினான். "ம் பரவாயில்லை வர வர நல்லாவே காபி போட கத்துக்கிட்டா"

தான் கொடுத்த காபியை வசந்த் ரசித்து குடிப்பதை சமையலறையில் இருந்த அமேலியா மறைமுகமாக பார்த்து ரசித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.