(Reading time: 20 - 40 minutes)

காபியை குடித்து முடித்த வசந்த் சிறிது நேரம் அமைதியாக சிந்திக்கலானான். தான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவன் எண்ணினான். அமேலியாவுடன் தங்கியிருந்த இந்த இரண்டு நாட்கள் அவன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத சந்தோச தருணங்கள். இந்த தருணத்திலேயே ஓடும் காலங்கள் நின்று விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

படுக்கையில் அமர்ந்திருந்த வசந்த் எழுந்து பாத்ரூமிற்கு சென்று முகத்தை அலம்பினான். இரண்டு நாட்கள் சரியான தூக்கம் இல்லாததால் அவன் கண்கள் சிவந்து காணப்பட்டன. முகத்தை அலம்பிவிட்டு பாத்ரூம் கண்ணாடியில் தன் முகத்தை நோக்கியவன் இரண்டு நாட்கள் சவரம் செய்யாத தனது முகவாய்கட்டையை தேய்த்தபடி பாத்ரூமை விட்டு வெளியே வந்தான்.

"அமேலியா"

சமையலறையில் இருந்த அமேலியா திகைத்தாள்.

"அமேலியா" மீண்டும் அழைத்தான் வசந்த்.

அமேலியா வெளியே வந்து வசந்தை நோக்கினாள்.

"வா, சாப்பிடலாம்" என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு பொட்டலத்தை பிரித்தான் வசந்த்.  

அமேலியா புரியாமல் நின்றாள்.

"வா, உட்காரு" என்று அருகில் இருந்த நாற்காலியை காட்டினான்.

அவன் சுட்டிக்காட்டிய நாற்காலிக்கு அருகில் இருந்த மற்றொரு நாற்காலியில் தயக்கம் கலந்த பயத்தோடு அமர்ந்தாள் அமேலியா. ரொட்டியும் ஜாமும் தனித் தனியாக அவளிடம் கொடுத்தான் வசந்த். அமேலியா ரொட்டியை மட்டும் உண்ண தொடங்கினாள். அதைப் பார்த்த வசந்த் அவளிடமிருந்து ரொட்டியை வாங்கி ஜாமை தடவி அவளிடம் நீட்டினான். வசந்த் கொடுத்ததை வாங்கி அவனைப் பார்த்தபடியே உண்டாள் அமேலியா.

"நான் கிளம்பணும் அமேலியா"

வாயில் ரொட்டியை மென்றுகொண்டே வசந்த் கூறியது புரிந்தது போல் "ம்" என்றாள் அமேலியா. பின்பு, தான் ஏன் அப்படி செய்தோம் என திருதிருவென விழித்தாள்.

"இந்த மாத்திரை சாப்பிடு காய்ச்சல் குறைஞ்சிடும்" என அமேலியாவிடம் மாத்திரையை நீட்டினான் வசந்த். திடீரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை வாயை திறக்குமாறு சைகை காட்டினான். அமேலியாவிற்கு புரியவில்லை, விழித்தாள். "ஆ காட்டு" என்றபடி தன் வாயை திறந்தான் வசந்த். மெல்ல வாயை திறந்தாள் அமேலியா. மாத்திரையை அவள் வாயில் போட்ட வசந்த் தண்ணீரை பருக செய்தான். அவன் செய்த செயல் அமேலியாவிற்கு சிரிப்பையும் வெட்கத்தையும் வரச் செய்தது. அவன் கையிலிருந்த தண்ணீரை வாங்கி தானே குடித்தாள்.

உணவை உண்டபின், வசந்த், தான் அங்கிருந்து செல்லப் போவதாய் பரிவோடு கண்களால் கூறினான். பின்னர், "நான்  போயிட்டு வரேன் அமேலியா" என்று சைகையில் கூறினான். அவன் கூறியதை சில நொடிகளில் புரிந்துகொண்டாள் அமேலியா. அவளது மனம்  அவளையுமறியாமல் வாடியதை முகம் காட்டிக் கொடுத்தது.

"இன்னைக்கு சாயந்திரம் ஜெஸிகா வந்து உன்னை பாத்துக்குவா" என்று சைகையில் விளக்கினான் வசந்த். அமேலியா அமைதியாக நின்றாள். அவளால் என்ன பதில் கூற முடியும்? சிறிது நேரம் அவர்களுக்குள் மௌனம் நிலவியது. அமேலியா தலையைத் தாழ்த்தியபடி நின்றாள்.

"சரி, நான் கிளம்புறேன் மறக்காம சாப்பிடு" என்று அங்கிருந்து புறப்பட்டான் வசந்த். கடைசியாக கதவை மூடும்போது அவளது தாழ்ந்த முகத்தை பார்த்தபடியே மூடினான். தன் உயிரை அமேலியாவிடம் விட்டுவிட்டு உடலை மட்டும் சுமந்தபடி படியில் இறங்கிச் சென்றான் வசந்த். தன்னிடமிருக்கும் விலைமதிக்க முடியாத பொருளை தொலைத்துவிட்டதை போல் உணர்ந்தான்.

வசந்த் சென்ற பிறகும் சிலையாகிவிட்டதை போலவே நின்றாள் அமேலியா. இது போன்ற சம்பவம் அமேலியாவிற்கு புதியதல்ல. தன் தந்தை எங்கேனும் வெளியூருக்கு சென்றால் அவளை அழைத்து போக முடியாது என்பதற்காக பொய்யான ஆறுதலை கூறிவிட்டு செல்வார். இன்றும் அதே போல் தான் நடந்தது. சூழலும் ஆட்களும் மட்டும் வேறு. பல நாட்கள் புது ஆடை உடுத்தி பேருந்தில் செல்லும் ஆவலோடு கனவு காண்பவளுக்கு கவலை தான் மிஞ்சும்.  

ஒரு நாள் பழைய ரக கார் ஒன்று அமேலியாவின் வீட்டின் முன் வந்து நின்றது. சொந்தகாரர் திருமணத்தை காண அமேலியாவின் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். முதன் முதலாய் காரில் தான் செல்லப்போவதாய் எண்ணி அகமிழ்ந்தாள் அந்த சிறுவயது அமேலியா, நின்றிருந்த காரில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்து தனக்கு தான் அந்த இடம் சொந்தம் என்று நினைத்தாள். ஆனால், அமேலியாவை வீட்டிலேயே விட்டுவிட்டு அவள் தந்தை சொந்தக்காரர்களோடு காரில் ஏறி சென்றதை எண்ணிப் பார்த்தபோதே அமேலியாவின் கண்களில் நீர் சுரந்தது.  

வசந்த் காரை ஸ்டார்ட் செய்தான். இன்ஜினை உசுப்பி விட்டான். சிறிது நேரம் காரை செலுத்தாமல் அமைதி காத்தவன் பின்னர் காரை மெதுவாக செலுத்தினான். வசந்தின் கார் செல்வதை ஜன்னல் வழியாக அமேலியா வேதனையோடு நோக்கினாள். சிறிது தூரம் சென்ற கார் திடீரென பழுது ஏற்பட்டு நின்றது. வசந்த் காரை விட்டு இறங்கினான். அவன் கண்கள் ஜெஸிகாவின் வீட்டு ஜன்னலை நோக்கின. அமேலியா.அங்கு நின்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது வசந்திற்கு தெரியவில்லை. கார் இன்ஜின் கதவை திறந்து பழுது பார்த்தான் வசந்த். கலங்கிய கண்களோடு அமேலியா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ரிப்பேரை முடித்த வசந்த் அங்கிருந்து கிளம்பினான். 

வீடு முழுவதும் வசந்த் விட்டு சென்ற நினைவலைகளை அசைபோட்டபடி ஜன்னலில் சாய்ந்துகொண்டாள் அமேலியா. வசந்தின் குரல் காற்றில் மிதந்து அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. பசி, தூக்கம், உலகம் என அனைத்தையும் மறந்த அமேலியா நீண்ட நேரம் அங்யேகே தவம் கிடந்தாள்.

சிறுவயதில் ஜன்னலின் வழியே தந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தன்னை விட்டு சென்ற தருணங்களில், பலகாரங்களோடு வந்து அவளது தந்தை அவளை சமாதானம் செய்வார். இன்று யார் அவளை சாமாதானப்படுத்துவது? நடப்பது தான் நடக்கும் என தனக்குத்தானே கூறி மனதை தேற்றிக்கொண்டாள்.

தனிமையில் போராடியவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனது நிம்மதி பெற காகிதங்களைத் தேடி ஓவியம் வரையத் தொடங்கினாள்.

பெரிய கதவை முதலில் வரைந்தாள். அந்த கதவின் பின்னால் அவள் விரும்பும் இயற்கையும் வாழ்க்கையும் ஒளிந்திருக்கிறது. ஓவியத்தில் கதவைத் திறக்க என்ன செய்வதென்று யோசித்தாள்.

ஆனால், நிஜத்தில் அவளிருந்த வீட்டின் கதவு திறந்தது.

தொடரும்...

Episode # 36

Episode # 38

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.