(Reading time: 20 - 40 minutes)

"எல்லாம் கொழுப்பு"

"என்ன?"

"ஜாகிங் ஓடுனா சரியா போயிடும்"

"எங்க நேரமிருக்கு? என்னுடைய வேலை அப்படி"

"இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு என்ன சாதிக்க போற ஜெஸ்ஸி"

அந்த கேள்விக்கு ஜெஸிகாவிற்கு பதில் தெரியவில்லை. உண்மையில் ஜான் கேட்ட கேள்வி அவள் மனதில் லேசான தாக்கத்தை ஏற்பட செய்தது. ஜெஸிகா தன்னையறியாமல் ஜான் கூறியதை சிந்திக்கத் தொடங்கினாள்.

"நான் ஏதாச்சும் தவறா சொல்லிட்டேனா?"

"இல்லை ஜான்" என்ற ஜெஸிகா அங்கே விட்டு சென்ற ஷூட்டிங் நாற்காலியில் அமர்ந்தாள்.

"வெறும் பணம் சம்பாதிச்சு தேவையான வசதிகளோடு வாழுறது மட்டுமே வாழ்க்கை இல்லை ஜெஸ்ஸி. ஒரு கட்டத்துல முடியாம உட்காரும்போது ஆறுதலா ஒரு துணை நெஞ்சுல சாயுற நேரம் தான் வாழ்க்கை"

ஜெஸிகா அமைதியாக இருந்தாள்.

"இதெல்லாம் என்னைக்காச்சும் நினைச்சிருக்கியா ஜெஸ்ஸி?"

"மத்தவங்க சொல்லுற இந்த வாழ்க்கை தத்துவங்கள்ல எனக்கு நம்பிக்கை இல்லை ஜான். துணையில்லாம வாழ்ந்தாலும் என் வாழ்க்கையை பிடிச்சு தான் வாழ்ந்துட்டு இருக்கேன்" என்றபடி நாற்காலியில் இருந்து எழுந்து வீட்டினுள் சென்றாள் ஜெஸிகா.

அவள் செல்வதை சிறிது நேரம் பார்த்த ஜான் வானை நோக்கினான். "இப்போ ஒரு புயல் உருவாகி இவளை தூக்கிட்டு போயிட்டா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்" என்று முணுமுணுத்தான்.

ரவு முழுவதும் கனவுலகில் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் அமேலியா. எது கனவு எது நிஜம் என்ற புரிதல் கூட இல்லாமல் தன்னையே காதல் போதையில் மறந்திருந்தாள். காதலர்களின் உருவங்களை வரையத் தொடக்கி அது வசந்தும் தானுமாக மாறியது அமேலியாவிற்கு பயம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஓவியத்தில் எந்த தவறும் செய்யாதவள் முதன் முதலாய் தவறு செய்து விட்டதாய் உணர்ந்தாள்.

உறக்கத்தில் இருந்து மீள முடியாதவள் மெதுவாக புரண்டு படுத்தாள். அவள் காய்ச்சல் குறைந்திருந்தாலும் இன்னமும் முழுதாக குணமடையவில்லை. தொண்டை அடைக்கவே லேசாக இருமினாள். சில நாட்களாக ஒரே அறையில் அடைந்திருந்ததால் அமேலியா சோர்வாக உணர்ந்தாள்.

சிறுவயதில் அக்கம் பக்கத்தினர் சிறைச்சாலையை பற்றி பேசியது அவள் நினைவில் தோன்றியது. ஒருவர் சிறைக்கு சென்றால் மீண்டு வருவது கடினம். எது நடந்தாலும் சிறையை விட்டு வெளியே வர முடியாது. காலம் முழுதும் சிறு அறையில் அடைந்து கிடக்கவேண்டும். கைதிகளுக்கு உணவை தவிர வேறு எந்த சலுகையும் கிடையாது என அவர்கள் பேச பேச சிறு வயதிலேயே சிறைச்சாலையை எண்ணி பயந்திருக்கிறாள்.

கடந்த சில நாட்களாக சிறை வாழ்வை தான் தானும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என அவள் புரிந்துகொண்டாள். இந்த உலகில் உண்மையில் யார் தான் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தில் மகிழ்ச்சி வருகிறதோ அதன் முடிவில் தான் துன்பமும் வருகிறது. உண்மையில் துன்பத்தின் முகமூடி தான் மகிழ்ச்சி. முகமூடி அழகால் மனிதர்களை ஏமாற்றி பின் தன் சுயரூபத்தை காட்டி கலங்கடிக்கிறது.  

ஒரு வேளை அந்த துன்பம் தன்னை ஏமாற்ற வசந்தின் முகமூடியை அணிந்து வந்திருக்கிறதா? அந்த அதிர்ச்சியான வாக்கியத்தை எண்ணியபோதே பதறியபடி உறக்கத்திலிருந்து விழித்தாள் அமேலியா. அவளுக்கு மூச்சு வாங்கி நெஞ்சம் விம்மி விம்மி எழுந்தது. மலங்க மலங்க விழித்தாள்.

இதுவரை தான் அடைந்த இன்பமெல்லாம் பொய்யானது என்ற மாய எண்ணம் கொண்டவள் படுக்கையின் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீர் பருகினாள். அவள் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் தேவைப்பட்டது. தான் இருந்த இடத்தை சுற்றி மெதுவாக நோட்டமிட்டாள்.  

சூரிய ஒளி ஜன்னலின் வழியாய் அவள் முகத்தில் அடித்து கண்களை கூசச் செய்தது. குளிரிலேயே பழக்கப்பட்ட உடல் சூரிய ஒளியால் புத்துணர்ச்சி பெற்றது. படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து .ஜன்னலை நோக்கி சென்றாள் அமேலியா. கால் மூட்டு வலிக்க தொடங்கியதால் அவளால் சாதாரணமாக நடக்க முடியவில்லை.

ஜன்னலின் வழியே சாலையை நோக்கினாள் அமேலியா. மக்கள் கூட்டம் சாலையெங்கும் நிரம்பியிருந்தது. சாலையில் விழுந்திருந்த மரங்களை கருவியை கொண்டு அகற்றிக் கொண்டிருந்தார்கள் ஊழியர்கள்.

எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கும் சாலை அது. கனரக வாகனங்கள், கார்கள், மோட்டார் பைக்குகள் என எல்லா வகையான வாகனங்களும் இடைவிடாது சென்று கொண்டிருக்கும். பொழுது போகாமல் அவற்றையெல்லாம் அமேலியா வேடிக்கை பார்த்திருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.