(Reading time: 70 - 139 minutes)

அதை பார்த்த மகேன் "ஹேய் பயப்படாத! நாங்க உன்னுடன் கொஞ்சம் பேசணும்" என்று அச்சிறுவனை பார்த்து சிரித்தபடியே சொன்னான்.

“யார் நீங்க? என்னிடம் நீங்க என்ன பேசணும்?” எச்சரிக்கை உணர்வுடன் அவன் பேசினாலும் அவனின் கண்கள் அவர்களின் சிறு அசைவையும் உன்னிப்பாக கவனித்தது.

“சின்ன பையான இருந்தாலும் விவரமாக தான் இருக்க!” சொல்லிக்கொண்டு ஒரு அடி முன்னால் வர அச்சிறுவனோ பயத்தில் இரு அடி பின்னால் சென்றான். சாலை ஓரத்திலிருந்த இரும்பு தெரிய, உடனே அதை கையில் எடுத்துக்கொண்டான்! அது அவன் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியாக இருந்தது.

இதை பார்த்த மகேன் “பயப்படாத உன்னை நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம்! நீ எங்களை  நம்பலாம்!” என சொன்னவன் அவ்விடத்திலேயே நின்று விட்டான். அதன் பின் அச்சிறுவன் பக்கத்தில் செல்ல முயசிக்கவில்லை.

"நீங்க ஏன் காருக்கு பக்கத்துலேயே நிற்கறீங்க" பயத்தில் அவன் அடுத்த கேள்விவை அவர்களிடம் கேட்டான்.

"சரி" என்றவன் காரை விட்டு தள்ளி நிற்க, ரூபனோ காரின் என்ஜினை ஆஃப் செய்தான்.

சில நிமிடங்களுக்கு அச்சிறுவனை பற்றி கேட்டுக் தெரிந்துக்கொண்டவர்கள். அவனுக்கு இவர்களில் மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்தாலும் கையில் அந்த இரும்பை இறுக பற்றிருந்தான்.

"கண்ணுக்கு எட்டும் தூரத்தில் எந்த வீடும் இல்ல. நீ இங்கே தனியா என்ன பண்ணுற?"

"அதோ தெரியுதே அது என் மாமாவின் வீடு அண்ணா. அவருக்கு சாப்பாடு கொடுக்கதான் நான் வந்தேன்" என்றான் அவன்.

"அந்த வீட்டை பார்த்தால் யாரும் இருக்குற மாதிரி தெரியலையே?" சந்தேகத்துடன் அவனை பார்த்தபடியே மகேன் சொன்னான்.

"நான் பொய் சொல்லல அண்ணா. என் மாமாவுக்கு உடம்புக்கு முடியல, நான் தான் தினமும் அவருக்கு சாப்பாடு கொண்டு வந்து குடுப்பேன்". அவர்கள் தன்னை நம்பவேண்டுமே என்ற பயத்தில் அவன் சற்று வேகமாகவே சொன்னான்.

"அந்த வீடு பூட்டி இருக்கே! நீ எப்படி உள்ள போவ?". அவனிடம் சாவி இருப்பது தெரியும். இருந்தாலும் தெரியாத மாதிரியே கேட்டான் மகேன்.

உடனே அவனிடம் இருந்து பதில் வந்தது "அம்மா என்னிடம் சாவி கொடுத்து இருக்காங்க. வீட்டுக்கு போனதும் நான் அம்மாகிட்ட கொடுத்திடுவேன். இதோ சாவி”. பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்துக்காட்டினான்.

“சரிப்பா நீ சொல்வதை நாங்க நம்பறோம். ஆனா இனி இப்படி இங்க தனியா வராதே!”என அவனை எச்சரித்து அனுப்பினான். எதற்கும் தேவைப்படும் என அச்சிறுவனின் வீட்டின் முகவரியும் போன் நம்பரையும் வாங்கிக் கொண்டான் மகேன். தீபனுக்கு வாட்ஸ் அப்பில் விபரத்தை அனுப்பிவிட்டு, அவர்கள் அந்த வீட்டை நோக்கி சென்றனர்.

சத்தம் வராமல் வெளி கேட்டை திறந்து, மெல்ல அடியெடுத்து அந்த வீட்டின் வாசலின் நின்றனர். அவர்களின் கண்கள் அந்த சுற்றுப்புறத்தை மீண்டும் ஒரு முறை அலசியது. செவிகளும் அங்கு கேட்கும் சிறு சத்தத்தை கூட மிக கவனமாக கூர்ந்து கேட்டன.

மகேனின் கண்ணில் பூட்டப்படாத அந்த கதவு சற்று திறந்திருப்பது தெரிய ரூபனுக்கு சைகையால் தெரிவித்து முன்னால் சென்றான். கதவின் வழியே எட்டிப்பார்க்கையில் சாய்வு நாற்காலி ஒன்றில் ஒருவன் கண் மூடி அமர்ந்திருப்பது தெரிய அவர்கள் சத்தமில்லாமல் உள்ளே செல்லுகையில் ரூபனின் கைதொலைபேசி சத்தமிட்டது.

திடீரென அங்கு கேட்ட இசையின் சத்தத்தில் திகைத்து எழுந்தவன், சத்தம் வந்த திசையை நோக்கி பயத்துடனே பார்த்தான். அவர்களை அங்கு எதிர்பார்க்காததால் அவனின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. நா குழறிய படி “யா... யார்டா நீங்க? இங்... இங்க எப். எப்... எப்படி வந்திங்க?” கேட்டான். அவன் பேசும் தோரணையிலே அவன் மது அருந்திருப்பது தெரிந்தது.

“நாங்க யாராக இருந்தால் உனக்கு என்ன? நாங்க கேட்கும் கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல்லு அது போதும்.” மகேன் சொல்ல, ரூபனின் கண்கள் அங்கு அமர்ந்திருந்தவனை அளவெடுத்து வெட்ட படாத முடியும், சவரம் செய்யாத தாடியும் புதரை போல மண்டிக்கிடந்தது. அது அவனின் பாதி முகத்தையே மறைத்திருந்தது. குளித்தே பல நாள் ஆனது போல் இருந்தது அவனின் தோற்றம். பழைய நைந்த சட்டை, அதை தொட்டால் கிழிந்து விடும் நிலையில் இருந்தது.

ஏனோ அவனை பார்த்த அந்த முதல் பார்வையிலே அவர்களுக்கு அவனை பிடிக்காமல் போனது. காரணம் மின்றி ஒருவரை பிடிக்காமல் போகுமா? தெரியவில்லை அவர்களுக்கு. காரணம் இல்லாமலே அந்த புதியவனை தூக்கி போட்டு அடிக்க வேண்டும் என தோன்றியது. முதல் முறை ஒருவரை காணும் போதும் தோன்றிய இந்த விநோதமான எண்ணதில் இருவருமே அமைதியாக இருந்தனர்.

அவர்களின் திடீர் அமைதி அந்த புதியவனை மேலும் பயத்தில் ஆழ்தியது. அவனே “என்ன கேட்க போற நீ? நீ யாருன்னு சொல்லவே இல்லயே. போங்கடா வெளியே. எனக்கு யாருடனும் பேச பிடிக்கல” கிட்ட தட்ட அவன் அவர்களுடன் கத்தினான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.