(Reading time: 70 - 139 minutes)

அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட பார்த்தான். ஆனால் தன்னை சுற்றி நிற்பவர்கள் யாரென தெரியாமல் ஓட முடியாது. ஆகையால் “யார் சார் நீங்க? என்னை எதுக்கு துரத்துறீங்க?”

“நாங்க போலீஸ்! நீ எதுக்கு எங்களை பார்த்து ஓடினாய்?” – மாறன்

“நீங்க போலீஸ்ன்னு எனக்கு எப்படி தெரியும். திடீரென உங்க மூணு பேரை என் பின்னால் பார்த்தவுடன் திருடர்களோன்னு நினைத்து பயந்து நான் ஓடினேன்” கொஞ்சம் கூட அசரவில்லை அவன்.

“இங்க என்ன பண்ணற?” – மாறன்

“நான் ஜங்கள் ட்ரக்கிங்க்கு வந்தேன். எதுக்கு என்னை இப்படி மறைத்து நிற்கறிங்க?”

“ஓ.. உன்னை பார்த்த ஜங்கள் ட்ரக்கிங்க்கு போறவன் மாதிரி தெரியலை. எங்களுக்கு உன்னிடம் கொஞ்சம் பேசணும்! பேசலாமா? – தீபன்

“யார் நீங்க? உங்களை யாரையும் எனக்கு தெரியாது. என்னிடம் பேச என்ன இருக்கு?”

“நாங்க யார்ன்னு உன்னிடம் சொல்லிவிட்டோம். சரி உனக்கு எங்களை தெரியாது. ஆனா ஆதியை தெரியும் அப்படிதானே” – தீபன்

அர்விந்த்துக்கு ஆதியின் பெயரை கேட்டவுடன் தான் மாட்டிக் கொண்டோம் என புரிந்தது. தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை! ஆகையால் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்தவன்.

அதற்கு மாறாக “எனக்கு ஆதியை தெரியும்! ஆனா நீங்க அவனுக்கு யாருன்னு தான் தெரியலை” என்றான். அவனின் குரலில் கொஞ்சம் கூட பயம் இல்லை. ஆதாரத்தை அழித்து விட்டதால் வந்த தைரியமோ அவனிடம்.

“நல்லா நடிக்குற! நாங்க எதை உன்னிடம் கேட்கப் போறோம்ன்னு தெரிந்து தெரியாத மாதிரி இருக்க. ஆனா உன் நடிப்பை நாங்க நம்பறதா இல்லை! இங்கே என்ன பண்ண வந்து இருக்க? எதுக்கு ஆதியை அடித்து போட்டிங்க?” - தீபன்

அர்விந்த் எப்படி காருக்கு திரும்ப செல்லுவது என மூளையை கசக்கி யோசித்தான். தன்னை சுற்றி வளைத்து இருப்பவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது தெரியாமல் தவித்தான் அர்விந்த். எந்த திசையும் நோக்கி ஓட முடியாமல், ஒரு அடி நகர முடியாமல் நின்றிருந்தான் அவன். “வெல், நீ சொல்லுவதை எதையும் நாங்க நம்பவில்லை. எதை மறைக்க இப்படி ஓடி ஒளியுற?” – தீபன்

“நான் எதை மறைக்க பார்க்குறேன். நீங்க தப்பான ஆளை பிடித்து விசாரிக்கறீங்க” தைரியமா தீபனை பார்த்து சொன்னான்.

“டேய்! ரொம்ப நேரமா நாங்க உன்னை தான் ஃபாலொ பண்ணறோம். நீ பண்ணது அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்திருக்கோம். ஒழுங்கா உண்மையை சொல்லிடு. எதுக்கு குழந்தையை கடத்தனிங்க?”

கயவன் 1

ந்த குழந்தையை என்னடா பண்ணிங்க” கேட்க மகேனின் கண்கள் கோபத்தில் ஜொலித்தது.

எச்சிலை முழுங்கியவன் “அது.. அது..” என இழுக்க.

“டேய் எங்களிடம் மேலும் அடியை வாங்காமல் என்ன பண்ணிங்கன்னு ஒழுங்கா சொல்லு”

“அமாவாசை ராத்திரி அன்னைக்கு சுடுகாட்டுலே எரியும் நெருப்பில் போட்டு காலையிலே அந்த குழந்தை உயிருடன் வந்தால், இப்போ இருக்குற சொத்து இன்னும் பெருகும்ன்னு” அவன் சொல்லி முடிக்கவில்லை மகேன் கலைவாணனை கன்னத்தில் பலமாய் அறைந்தான். விழுந்த அறையில் தடுமாறி கீழே விழுந்தான். விழுந்தவனை காலால் எட்டி உதைதான் மகேன்.

மகேன் கோபத்தில் அவனை தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க, கலைவாணன் வலி தாங்க முடியாமல் அலறினான். “ஏன்டா இப்படி மிருகத்தனமா இருக்கீங்க? எவன்டா உங்களுக்கு சொன்னது தங்கம் வரும் சொத்து குவியும்ன்னு?” என கேட்டபடியே அவனை அடித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு கோபம் தனியவில்லை.

ரூபன் அவனை மேலும் அடிக்காமல் தடுத்து நிறுத்தினான். “டேய் இதுக்கு மேல நீ அடிச்ச அவன் செத்து போயிருவான்..” என சொன்னான்.

“சாகட்டும்!” என சொல்லி மீண்டும் அவனை அடிக்க சீறினான். “மகேன், இப்போ நமக்கு கோபத்தைவிட விவேகம்தான் முக்கியம். தீபனிடம் இவனை ஒப்படைத்து விடலாம்” என சொல்லி ரூபன் தீபனுக்கு அழைத்தான். ஆனால் தீபன் இவனின் அழைப்பை ஏற்கவில்லை.

மகேன் கலைவாணனை பார்த்தான். அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது. அவனின் கண்முன்னே சின்னகுழந்தை ஒன்று தாயையும் தந்தையும் பிரிந்து இவர்களின் சித்ரவதையை அனுபவித்து இறந்தது மட்டும் தெரிந்தது. வேகமாக கலைவாணனின் கழுத்தை மிதிக்க காலை ஓங்குகையில் சுவற்றில் வெளிச்சம் தோன்றி மறைந்தது. மகேன் அந்த கயவனை விட்டுவிட்டு அந்த சுவரை நோக்கி சென்றான்.

ரூபன் காருக்கு சென்று கலைவாணனுக்கு தண்ணீர் எடுத்து வருகையில் மகேன் சுற்றை தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் முதுகிற்கு பின்னாலிருந்த சுவரைப் ஒட்டினாற்போல் வினிதா நின்றுக்கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் “வினிதா நீ எப்படி இங்க வந்த?” என அதிர்ச்சியில் கேட்க மகேன் திரும்பி பார்த்தான்.

வினிதாவின் பார்வை கலைவாணனை விட்டு அகலவில்லை. அதில் தெரிந்த கோபம் மகேனுக்கு அங்கிருப்பது வினிதாவே இல்லை என புரிந்தது. அவன் உடனே அந்த கலைவாணனின் அருகில் சென்று நின்றான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.