(Reading time: 16 - 31 minutes)

‘முடியாதுடி அனும்மா.’ என்றான் ஹரிஷ் ‘அப்படி உன்னை விட்டு போக முடியாதுடி பொண்டாட்டி. சீக்கிரம் என்கிட்டே வந்திடு ப்ளீஸ்...’

அவன் சொன்ன விதத்தில் அதற்கு மேல் எதுவுமே பேச தோன்றவில்லை அவளுக்கு.

மறுநாள் காலை.. வெள்ளிக்கிழமை.

கையில் காபி கோப்பையுடன் ஏதோ யோசனையுடனே உலவிக்கொண்டிருந்த  பெரியப்பாவிடம் வந்தாள் அனுராதா

’ஹரிஷ் பேசினானா பெரியப்பா?’

‘ம்? ம். பேசினான்மா..’ சொன்னவரின் குரலில் ஏனோ ஜீவனே இல்லை.

‘நாம நாளைக்கு போலாமா பெரியப்பா.?

‘கண்டிப்பா போலாம்மா. ஆனா பெரியம்மாவுக்கும், ஷங்கருக்கும் இப்போதைக்கு எதுவும் தெரிய வேண்டாம். போயிட்டு வந்து சொல்லிக்கலாம்’

‘பெரியப்பா... அது...’

‘என் பொண்ணு நான் சொல்றதை கேட்பாளா? மாட்டாளா?’ கொஞ்சம் உறுதியில் ஊறிய தொனியில் அவர் கேட்க அதற்கு மேல் அவரை எதிர்த்து பேச விரும்பவில்லை அனு.

‘சரி பெரியப்பா..’ நகர்ந்தாள் அவள்.

வாழ்கையில் யாரையும், எந்த ஒரு விஷயத்தையும் சந்திக்க இத்தனை தயக்கமோ பயமோ இருந்ததில்லை பெரியப்பாவுக்கு. இப்போது சுவாமிநாதனை சந்திப்பதை நினைத்தாலே உயிர் வரை ஏதோ ஒரு பயம் பரவியது.

அவருக்கும், ஏன் ஹரிஷுக்கும் கூட உண்மைகள் தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனை உற்சாகமாய் ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருக்கிறான் அவன். அவன் தந்தை முன்னால் நான் சென்று நின்ற கணம் எல்லாம் உடைந்து போகுமோ?

‘சில வருடங்கள் முன்னால் ஹரீஷின் தந்தை இவர் முன்னால் கண்ணீருடன் வந்து நின்று கைகூப்பிய காட்சியே இவர் கண் முன்னால் வந்து வந்து போனது

ஒரு வேளை இருவரையும் அவமானப்படுத்தி அனுப்பிவிடுவாரோ? இப்போது சந்தோஷமாய் வந்துக்கொண்டிருக்கும்  என் மகள் வரும்போது கண்ணீருடன் திரும்புவாளோ?

இந்த உண்மைகள் பல நாட்கள் மறைத்து வைக்கும் விஷயமும் இல்லையே. என்றாவது ஒரு நாள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். நம்புவோம். எல்லாமே சரியாக நடக்குமெனவே நம்புவோம்.

சனிக்கிழமை மாலையில் கோவையில் டாக்ஸி ஹரிஷின் வீடு நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்க இத்தனை யோசனைகளுடனே அதில் பயணித்துக்கொண்டிருந்தார் பெரியப்பா. தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தாள் அனுராதா.

அவன் வீடிருக்கும் தெரு முழுவதும் பெரிய பெரிய கார்கள் நின்றிருந்தன. சற்று தூரத்திலேயே இறங்கிக்கொண்டனர் அப்பாவும் மகளும். அவனது உயரமும் அந்தஸ்தும் அவளை கொஞ்சம் பயத்தை நோக்கி நகர்த்த நடை தளர்ந்தது. எப்போதும் பெரியப்பாவிடம் இருக்கும் அந்த துள்ளல் இன்று இல்லாதது அவளை இன்னும் கொஞ்சம் சங்கடப்படுத்தியது. அவருமே மெதுவாக நடந்து வந்துக்கொண்டிருந்தார்.

வீட்டை நெருங்கினர் இருவரும். அவள் சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்திருந்த பெரிய பங்களாக்களுக்கு ஒப்பாக ஒன்று அவள் கண் முன்னால் நின்றிருந்தது. பிரமிப்பு மேலிட நின்றே விட்டாள் அனுராதா. அவளுடைய வீடும் கண் முன்னே வந்து போனது. அவளுடைய பெரியப்பா வீடு கட்ட  பணம் செலவழித்து இருக்கிறார் என்றால் இவன் தந்தை பணத்தை வீட்டின் மீது அள்ளி பொழிந்திருக்கிறார் என்று புரிந்தது.

வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் ஒரு காவலாளி.

‘இவனிடம் என்ன சொல்ல? இல்லை கைப்பேசியில் ஹரிஷை அழைப்பதுதான் சரியா? அவளை தயக்க மேகங்கள் சூழ.

‘வாங்க வாங்க மேடம். வாங்க சார்’ நீங்க வருவீங்கன்னு சார் சொன்னங்க’ அவசரமாக வந்து பவ்யமாக வரவேற்றான் அந்த செக்கியூரிட்டி.

அடுத்த நொடி ஹரிஷை போனில் அழைத்து ஏதோ சொல்லிவிட்டு இவர்களுக்கு அவன் வழிக்காட்ட அந்த பிரம்மாண்ட தோட்டத்தை பரமிப்புடன் ரசித்தபடியே மெல்ல இருவரும் நான்கடிகள் எடுத்து வைப்பதற்குள் அவர்கள் முன்னால் வந்து நின்றிருந்தான் ஹரிஷ்.

‘வெல்கம்! வெல்கம்! வெல்கம்! வாங்க அங்கிள்... வாங்க மேடம்....’ உற்சாகமாக கூவினான் ஹரிஷ்.

அது எப்படியோ? அது எப்படிதானோ அவனை பார்த்ததும் அவளுக்கு இருந்த அழுத்தமெல்லாம், தயக்கமெல்லாம் எங்கேயோ பறந்து போயிருந்தது. அவன் கையில் சிரித்துகொண்டிருந்தாள் அவனது அண்ணன் மகள் அனுராதா. செல்லமாக குழந்தையின் கன்னம் தட்டினாள் அனுராதா .

‘இவங்க நம்ம வீட்டு அனுப்பாப்பா தெரியுமா?’ குழந்தையை சுட்டினான் ஹரிஷ்.

‘அப்படியா ...ஹாய்... அனுப்பாப்பா..’ இவள் குழந்தையுடன் கைகுலுக்க ‘இனிமே நம்ம வீட்டிலே ரெண்டு அனு’ என்றான் இவன் திருப்தியான புன்னகையுடன்.

‘நடக்குமா? அப்படி ஒன்று நடக்குமா? பெரியப்பாவுக்கு பயம் இரண்டு மடங்கனாது.

‘உள்ளே வாங்க அங்கிள்’ பெரியப்பாவிடம் சொல்லிவிட்டு அவனும் நடக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.