(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 39 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் மலர் இருவரும் தங்கள் நேசத்தை வெளிப்படுத்தாத விதத்தில் நடந்து கொண்டாலும், அவர்கள் அறியாமல் அவர்களின் விழிகள் கதை பேசியது. அந்த விழிகளின் மொழிகளை யார் பார்த்தார்களோ இல்லையோ வடிவு ஆச்சியின் கண்கள் கண்டு கொண்டன.

இத்தனை நாட்கள் சந்தேகமாக இருந்த விஷயம், உண்மைதான் என்று தெரியவும், ஆச்சியின் மனம் கலங்கியது. மனதுக்குள் “குமரா.. இந்த புள்ளைகளின் மனசு நோவரதுக்கு என்னைய காரணமாக்கி விட்டாயே.. நான் என்ன செய்யபோறேன்னு தெரியலையே..” என்று எண்ணிக் கொண்டார்.

ஆறு கால பூஜையும் முடிந்து காலையில் மீண்டும் ஒருமுறை உடையவரை தரிசித்து விட்டு இவர்கள் வெளியே வரவும், மலரின் அப்பா அவள் போனுக்கு கூப்பிட்டார்.

“மலர்.. நான் இப்போவும் மந்திரி கூடத்தான் இருக்கேன்.. என்னாலே எப்போ வர முடியும்னு தெரியல.. நீ, அம்மா , ஆச்சி மூணு பேரும் பஸ்ஸ புடிச்சு போறீங்களா?”

“சரிப்பா.. நீங்க உங்க வேலைய முடிச்சுட்டு வாங்க.. நாங்க கிளம்பறோம்”

“பாத்து பத்திரமா போங்கம்மா.. வீட்டுக்கு போயிட்டு எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிடு கண்ணு” என

“சரிப்பா” என்று போனை வைத்தாள்.

அவள் போனில் பேசும்போது பார்த்துக் கொண்டு இருந்த நால்வரும் , என்னவென்று கேட்க,

“ அப்பா இப்போதைக்கு வர முடியாதாம்.. நம்மள வீட்டுக்கு போக சொல்லிடாங்க..” என,

வடிவோ “அடக் கடவுளே.. இப்போ என்ன செய்யுறது.. ? ஆத்தா.. மலரு.. இங்கேருந்து பஸ் ஸ்டாண்ட் நடக்குற தொலைவு தானான்னு கேளு.. பஸ்லே ஊருக்கு போயி அங்கிருந்து வண்டி புடிச்சு போயிக்கலாம்”

அதற்குள் செழியனின் அம்மா பார்வதி

“ஏன் பெரியம்மா.. எங்ககூட வாறது .. நானும் எம்மவனும் காரில் தான் வந்துருக்கோம்.. சேர்ந்து போயிடலாம்..”

“இருக்கட்டும் தாயி.. நீ ஒரு பக்கம் போறவ. நாங்க ஒரு பக்கம் போவோம்.. எங்களுக்காக உனக்கும், தம்பிக்கும் ஏன் தொந்தரவு .. ?”

“இதிலே என்ன இருக்கும்மா.. ? காரில் தானே போறோம்.. உங்கள இறக்கி விட்டுட்டு போனா கூட ஒரு பத்து இருபது நிமிஷம் ஆகப்போகுது.. வேறென்ன ?”

“அதில்லம்மா.. உனக்கும் வீட்டுலே வேலைங்க இருக்கும்.. ஆம்பளைங்க வெளியிலே தெருவிலே போயிட்டு வந்தா அக்கடான்னு காலாட்டி உக்காரலாம்.. பொம்பளைங்க அங்கன பண்ண முடியுமா..? உள்ளார போகும்போதே நூறு வேலை வரிசை கட்டி நிக்கும்.. நீ சுருக்க போனா தானே , உன் வேலைய முடிச்சிட்டு.. சித்த உக்காரலாம்..”

“இருக்கட்டும் பெரியம்மா.. ஒரு நாளு கொஞ்சம் பைய தான் பாப்போமே.... என்னைக்கும் உள்ளது..  உங்க வயசுக்கு பஸ்ஸிலே எல்லாம் போயி ஏன் கஷ்டபடுறீங்க?” என்றவர்

“செழியா .. நீ சொல்லப்பா.. “ என

“பாட்டி .. அம்மா சொல்றது சரிதான்.. ராத்திரி பூரா முழிச்சு இருக்கீங்க.. உக்காந்தே வேற இருந்துருக்கீங்க.. இன்னும் பஸ்சுக்கு நடந்து, பஸ் பிடிச்சு, வீட்டுக்கு போறதுக்குள்ளே உடம்பு அலண்டு போயிடும்.. நான் போயி காரை எடுத்துட்டு வரேன்.. மலர் நீங்க எல்லோரையும் பொறுமையா முன்பக்கம் கூட்டிகிட்டு வந்துடுங்க..” என்று மறுப்பதற்கு இடமே கொடுக்காமல் சென்று விட, வடிவு தன் மருமகள், பேத்தி சகிதம்  பார்வதியோடு சென்றார்.

இவர்கள் எல்லோரும் முன் வாசல் வரவும், செழியன் காரோடு வந்து விட்டான். பாட்டி பின்னால் ஏறிக்கொள்ள முயல அவரை தடுத்த செழியன்

“பாட்டி.. முன்பக்கம் வந்து உக்காருங்க.. அந்த சீட் கொஞ்சம் சாச்சி விட்டா நீங்க காலை கொஞ்சம் நீட்டிக்கலாம்.. “ என்று அவரை வசதியாக உட்கார வைத்தான்.

மற்ற மூன்று பெண்களும் பின் பக்கம் ஏற, பாட்டி சீட்டுக்கு பின்னால் செழியன் அம்மா உட்கார போக,

“அத்தை .. நீங்க அந்த கதவு பக்கம் உட்காருங்க.. இங்கே சீட் சாய்ச்சி போட்டுருக்காங்களே.. “ என்று ஆச்சிக்கு நேர் பின்புறம் மலர் அமர்ந்து கொண்டாள்.

காரில் ஏறிய பின் எல்லோரும் பேசிக் கொண்டு வந்தனர். நடுவில் பார்வதியின் செல் இசைக்க, எடுத்தவர்

“சொல்லுங்க.. “ அந்த பக்கம் செழியன் அப்பா பேசினார்.

“பார்வதி.. புறப்படீங்களா ? இன்னும் அங்கன என்ன செய்யுதீங்க?”

“பொறபட்டோம்ங்க.. பாதி தூரம் கடந்துட்டோம்.. இன்னும் சித்த நேரம் பொருத்தீங்கன்னா, வீட்டுக்கு வந்துடுவோம்”

“சரி. .சரி.. சீக்கிரம் வந்து சேருங்க.. “ என்றவர் மீண்டும் “இந்தா.. அதுக்காவ உம்மவன விரசா வண்டி ஓட்ட சொல்லாத.. நான் சித்த நேரம் வேணும்னாலும் காத்துக் கெடக்கேன்.. அவன பையவ ஓட்ட சொல்லு” என்று பேசிவிட்டு வைத்து விட்டார்.

செழியன் தன் அம்மாவிடம் “அப்பவாம்மா.. பேசினாங்க ?” என்று வினவ,

“ஆமாம்பா “ என்றார்.

வள்ளி “எங்களால உங்களுக்கு நேரமாகிட்டோ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.