(Reading time: 15 - 30 minutes)

“இந்தா பார்வதி... நம்ம செழியனுக்குதான் நமசிவாயம் ஐயாவோட பேத்தின்னு ஏற்கனவே பேசி வச்சுருக்குதானே. பொறவு ஏன் அவம் முன்னாடி அங்கன பேசுற..? அவனுக்கு அந்த புள்ள மேலே ஒரு கண்ணு இருக்குதுன்னு ரொம்ப நாள் முன்னாலே எனக்கு தெரியும்.. நானே அவன கண்டிச்சு நம்ம பக்கம் இழுக்க உன்னையத்தான் தோதான ஆளுன்னு நினைச்சு இருக்கேன். நீயே இப்படி மாறி பேசுதீயே?”

“நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான்.. அந்த ஐயா இப்போ எங்க இருக்காங்கன்னே தெரியல.. அதோட அவர் பேத்தி என்ன செய்யுது? என்ன படிச்சிருக்கு ? இப்படி எதுவுமே தெரியாது.. அவ்ளோ ஏன்.. அதுக்கு கல்யாணம் ஆகலியான்னு கூட தெரியாது. இந்த நிலைமையிலே  அந்த பொண்ணுக்காக, கண்ணு முன்னாடி நிக்கிற இந்த பொண்ண விடலாமா..?”

நீ சொல்லுறது சரிதான்.. எனக்கு அவங்கள பத்தின உறுதியான தகவல் தெரியுமட்டும், நான் இந்த விஷயத்துக்கு சம்மதிக்க மாட்டேன்..

“சரி. எத்தனை நாளு நாம காத்துகிட்டு இருக்கணும்”

“அத எப்படி உறுதியா சொல்ல முடியும்?”

“எப்படிங்க.. கால வரையறை இல்லாம காத்துகிட்டு இருக்கிறது.. நமக்கும் வயசாயிட்டு போகுது.. நமக்கு இருக்கிறது ஒத்த பய.. அவனுக்கு கல்யாணம் பண்ணி நாமளும் பேரன் பேத்தி பாக்கணும்நு உங்களுக்கு இல்லியா?

“இருக்குதான்.. அதான் நானும் நமசிவாயம் ஐயா குடும்பம் பத்தி விசாரிச்சிட்டு இருக்கேன்.. ஒன்னும் தகவல் தெரியலையே.. நம்ம வடிவேலு தான் அங்க பக்கத்துலே விசாரிச்சு சொல்லுதேன்னு சொல்லிருக்கான்.. அவனையும் வர பங்குனிகுள்ளே விவரம் கண்டுபிடிக்க சொல்லி முடுக்கி விட்டுருக்கேன்.. வேற என்ன செய்ய சொல்லுத?”

“இங்க பாருங்க.. நான் ஒன்னு சொல்லுதேன்.. இந்த பங்குனி வரை பார்ப்போம்.. வடிவேலு அண்ணாச்சி எதுவும் விவரம் சொல்லுதாங்களான்னு.. அப்படி விவரம் கிடைச்சா, நாம ஐயா குடும்பத்தை நேர்லே பார்த்து மத்த விவரங்கள் பேசுவோம்.. அப்படி எதுவும் கிடைக்கலன்னா, இந்த சித்திரை , வைகாசிலே அந்த மலர் புள்ள வீட்டுக்கு போயி சம்பந்தம் பேசுவோம்.. இதுக்கு சம்மதிச்சா, இந்த விஷயத்துலே நான் உங்க பக்கம் நிக்கேன்.. இல்லைன்னா நான் என் மவன் பக்கம்தான் இருப்பேன்.. சொல்லிட்டேன்”

என்று உறுதியாக சொல்ல, சிவஞானத்திற்கு தான் என்ன சொல்லவென்று தெரியவில்லை. சற்று நேரம் யோசித்தவர், வடிவேலு மேல் உள்ள நம்பிக்கையில்

“சரி ..பார்வதி.. நீ சொல்றமாதிரி இந்த பங்குனிக்கு ஊருக்கு போய் வர முட்டும்.. எத பத்தியும் செழியன் கிட்டே பேச வேணாம்.. அதுக்கு பொறவு என்ன சொல்லணுமோ சொல்லிக்கலாம்.. சரியா ?” என்று வினவ, பார்வதியும் வேகமாக மண்டையை ஆட்டினார்.

“சரி சரி.. நான் கடைக்கு கிளம்புதேன்.. செழியன பொறவு அந்த பக்கம் வர சொல்லு”

“அவனும் எங்கூட ராத்திரி முழிச்சு இருக்கான்.. அதோட அவன் வேலையும் அவன் நிறைய வச்சுருக்கான்.. அவன் இது எல்லாம் விரசா முடிச்சு வச்சாதான்.. கல்யாணம் பத்தி யோசிப்பான்.. கொஞ்ச நாளைக்கு அவன கடை பக்கம் கூப்பிடாதீங்க..”

“சரி சரி.. ஏதோ பண்ணு.. நான் போயிட்டு வரேன்..” என்று அவர் கிளம்பினார்.

அவர் கிளம்பும் வரை உள்ளே சமையல் கட்டில் வேலை செய்து கொண்டு இருந்தவர்,  கிளம்பி கொஞ்ச நேரம் கழித்து, செழியனை அழைத்தார்.

அவனுக்கு தூக்கம் வரத்தான் செய்தது.. ஆனால் சிவராத்திரி என்று முழித்து விட்டு, உடனே படுத்தால் அதன் பலன் இருக்காது.. என்ற தாயின் கட்டளைக்கு இணங்கி, குளித்து விட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் அம்மா அழைக்கவும் , கீழே இறங்கி வர, அவர் அவனை டிபன் சாப்பிட சொன்னார்.

அவன் அமர்ந்து கொண்டே

“அம்மா .. நீங்களும் உக்காருங்க..” என்று அவரையும் அமர சொன்னான்.. காலை பலகாரமாக இட்லி வார்த்து தொட்டுக் கொள்ள சட்னி சாம்பார் செய்து இருந்தார். எல்லாவற்றையும் பார்த்தவன்

“ஏம்மா.. எதவும் ஒன்னு செஞ்சா போதாதா? நீங்களே அசதியா இருப்பீங்க? ஏன் இழுத்து விட்டுட்டு இருக்கீங்க?”

“அது சரி.. இந்த அக்கறை எல்லாம்.. அம்மாக்கு மட்டும் தானே.. பொஞ்சாதி வந்தாலும் சார் இப்படிதான் இருப்பீங்களா?”

“ஏன்.. என்னைய பார்த்தா அந்த மாதிரியா தெரியுது? நான் உங்க வளர்ப்பு .. “

“அதானே.. சரி .. சரி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணுமே.. “

“கேளுங்கம்மா..”

‘உனக்கு அந்த மலர ரொம்ப புடிச்சி இருக்கோ?” என்று கேட்க, ஒரு கணம் செய்வது அறியாது முழித்தவன், பின் லேசாக வெட்க பட்டவாறே

“ஆமாம்.. “ என்றவன், “உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது ?”

“குழம்பு கொதிக்கிறத வச்சே, அதிலே உப்பு போதுமா, போதாதான்னு சொல்றவங்க நாங்க..உன் மூஞ்சிய பார்த்தாலே கண்டுபிடிச்சிட மாட்டேனா?”

“நீங்க கில்லாடிங்க தான் ஒத்துக்கறேன்..” என்றவன், “அது என்ன காலையில் அப்பாகிட்டே பொசுக்குன்னு கேட்டுடீங்க..? அவர்தான் ஏற்கனவே ஒரு முடிவிலே இருக்கார் போலேயே?”

“ஏன் நான் கேக்கலைன்னா, நீ கேட்ருப்பியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.