(Reading time: 17 - 34 minutes)

‘போடா. நாளைக்கு வருவே இல்ல. அப்போ உன்னை கவனிச்சுக்கறேன்’ சிறு பிள்ளையாய் முறைத்த அந்த மனிதரை கடைசி முறையாய் திரும்பி பார்த்து சிரித்தான் ஹரிஷ்.

‘நாம விளையாடுவோம் சார் வாங்க’ அழைத்தான் அங்கிருந்த இன்னொருவன். இவன் சுவாரஸ்யமாய் தனது பொருட்களை பைக்குள் திணித்துக்கொண்டிருக்க

‘ஆ...’வென கேட்டது அவரது அலறல். இவன் சரேலென திரும்ப கீழே விழுந்து கிடந்தார் அவர். கையில் இருந்தவற்றை கீழே போட்டுவிட்டு அவரை நோக்கி ஓடினான் ஹரிஷ். அவரிடத்திலும் பேச்சுமில்லை. மூச்சுமில்லை.

‘அய்யோ! அப்படியா பலிக்க வேண்டும் அவன் வார்த்தைகள். வீச்சப்ட்ட பந்து நேரே அவர் தலையை பதம் பார்த்திருந்தது. பதற்றத்தின் உச்சிக்கு சென்றிருந்தான் ஹரிஷ்.

‘அப்பா..’ மொத்தமாய் அதிர்ந்து அலறினாள் ஸ்வேதா. அவள் அவர்களை நோக்கி ஓடிவர,

‘மூச்சு இல்லை போலிருக்கேடா’ இவன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்க அது காதில் விழுந்த மாத்திரத்தில் உச்சகட்ட அதிர்ச்சியில் அப்படியே மயங்கி சரிந்த ஸ்வேதாவை அந்த பரபரப்பில் யாரும் கவனிக்கவில்லை.

முதலிலிருந்தே ஸ்வேதாவுக்கு பயம். இதயநோயினால் அப்பாவுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று ஒரு பயம். இன்று கண்முன்னே அந்த பந்து அவர் தலையில் பட்ட அவர் மயங்கி விழுந்த அந்த காட்சியை பார்த்ததில் பேரதிர்ச்சியில் விழுந்திருந்தாள் அவள்

அவரை தூக்கிக்கொண்டு பறந்தான் காரில். மருத்துவமனைக்கு போவதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.

சில மணி நேரங்கள் கடந்த பின்பும் நடந்ததை நம்பவே முடியாதவனாக, உயிர் வரை உடைந்து போனவனாக, நின்று போக மறுக்கும் கண்ணீருடன் அவர்கள் வீட்டில் அவர் அருகே நின்றிருந்தான் ஹரிஷ்.

அவர் உயிர் போனது போனதுதான் என்ற நிலையிலும்  பந்தை எறிந்தவன் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதாலும் அந்த நேரத்தில் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென யாருக்குமே தோன்றவில்லை.

குடும்பமே உடைந்து போயிருக்க ஸ்வேதா அங்கே மருத்துவமனையில் நினைவன்றி இருக்க துக்கத்தின் பிடியில் அழுந்திக்கொண்டிருந்த இருந்த கீதாவுக்கு ஹரிஷே ஆறுதலாய் நின்றிருந்தான் அங்கே. இவனது தோளில் தனது குமுறல்களை கொட்டிக்கொண்டிருந்தாள் அவள். பொதுவாகவே பெண்களிடம் அதிகம் பழகாத ஹரிஷை அவளது கண்ணீர் கரைந்திருந்தது.

அப்போது அங்கே வந்தனர் ஷங்கரும் அவனது அம்மாவும். கீதாவின் அம்மாவும், ஷங்கரின் அம்மாவும் ஒரே வங்கியில் பணி புரியும் நெருங்கிய தோழிகள். ஷங்கருக்கு கீதா என பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருந்த நேரமது.

வீட்டுக்குள் வந்தான் அவன். அது ஏனோ வந்தவுடனே அவள் தன்னிடம் ஆறுதல் தேடி ஓடி வருவாள் என ஒரு எண்ணம் ஷங்கருக்கு இருக்க அவள் அவன் பக்கமே திரும்பாதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு. இருப்பினும் அந்த இடத்தில் பெரிதாக எதையும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை அவன்.

நடக்க வேண்டியவைகள் தன்னாலே நடந்து முடிய ஒவ்வொரு நிமிடமும் கீதாவுக்கு பக்க பலமாய் நின்றிருந்தான் ஹரிஷ்.

மருத்துவமனையில் பல நாட்கள் நினைவற்று கிடந்தாள் ஸ்வேதா. கிட்டதட்ட மூன்று மாதங்கள். அந்த நேரத்தில் அவளது அம்மாவும் மனதால் நொறுங்கிபோய் கிடக்க மனதில் இருந்த எந்த வலியையும் வீட்டில் வெளிக்காட்டாமல் வளைய வந்த கீதாவுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது ஹரிஷ் மட்டுமே.

கல்லூரிக்கு வந்ததும் ஆறுதலான வார்த்தைகளுக்காகவே அவனை தேடி ஓடி வருவாள் அவள் வாழ்க்கை தந்த கடுமையான தாக்கத்தில் மொத்தமாய் தளர்ந்து போய் கிடந்தவளை தாங்கிக்கொண்டான் தோள்களில். அந்த காலங்களில்தான்  இருவருக்கும் இடையில் அழகாய் மலர்ந்தது ஒரு நட்பு.

‘அவளை லவ் பண்றியாடா?’ கேட்டவர்களும் உண்டுதான்.

அது ஏனோ அப்படி ஒரு எண்ணம் அவளிடம் தோன்றவே இல்லை அவனுக்கு. அவளுக்குமே அப்படி ஒரு எண்ணம் இருந்ததில்லை அவனிடத்தில். எதையும் எதிர்ப்பார்க்காத கள்ளம் கபடம் இல்லாத ஒரு பாசத்தை அவள் மீது வைத்திருந்தான் ஹரிஷ்.

‘என்ன கீத்ஸ் நீ?. இன்னைக்கும் சாப்பிடாம வந்தாச்சா? நினைச்சேன் அவள் கல்லூரிக்குள் வந்தவுடன் கேட்பான் ஹரிஷ்.

‘வீட்டிலே சமைக்கலை ஹரிஷ். யாருக்கும் மூட் இல்லை.’ ஓய்ந்து போன குரலில் சொல்வாள் அவள்.

‘சரி. சரி வா உனக்கும் சேர்த்துதான் சாப்பாடு எடுத்திட்டு வந்தேன். சாப்பிடு வா’ என அவளை கட்டாயப்படுத்தி அவன் சாப்பிட வைத்த தருணங்களில் அவனுக்கு ஒரு பக்கம் அனுராதாவின் நினைவுகளும் வந்து போக தவறவில்லை  .

முக ஜாடையிலும், நடையிலும் பேச்சிலும் நிறையவே ரகுநந்தனை ஞாபகப்படுத்துவாள் கீதா. சென்ற நிமிடம் வரை சிரிப்பும், சந்தோஷமுமாக விளையாடிக்கொண்டிருந்தவர் அடுத்த நிமிடத்தில் திடீரென்று இல்லை என்று ஆன பேரதிர்ச்சியை விட்டு வெளியே வர அவனே போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அவளது மனநிலையை சரியாக புரிந்துக்கொள்ள அவனால் மட்டுமே முடிந்திருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.