(Reading time: 17 - 34 minutes)

அப்போதெல்லாம் அவள் முகத்தில் சிரிப்பை கொண்டு வருவதே அவனது மிகப்பெரிய லட்சியம். திடீரென மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல் தோன்றும். இரவு பதினோரு மணிக்கு அழைப்பான் அவளை.

‘என்னமா? இன்னும் தூங்கலையா? மனசு டிஸ்டர்ப்டா இருக்கா? என்பான்.

‘அது எப்படி ஹரிஷ். என் கண்ணிலே தண்ணி வந்தா உனக்கு எப்படி தெரியுது. கரெக்டா கால் பண்றே?’ நெகிழ்வாள் கீதா. அதன் பிறகு மறுமுனையில் சிரிப்பு சத்தம் கேட்கும் வரை பேசிக்கொண்டே இருப்பான் அவளுடன்.

அவனது அம்மாவும் உயிருடன் இருந்த காலம் அது. அப்பா, அம்மா இருவருக்கும் தெரியும் அவர்களது நட்பு.

‘எதுவுமே படிக்கலை ஹரிஷ். ரொம்ப பயமா இருக்கு.’ பரீட்சைக்கு முதல் நாள் அவன் வீட்டுக்குத்தான் ஓடி வருவாள்.

அம்மா டீ போட்டு கொடுக்க விடிய விடிய அவளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த நாட்கள் பல உண்டு.  உடல் நலமில்லாமல் போகும் காலங்களில் கல்லூரி பெஞ்சில் முடங்கிக்கொள்வாள். அவள் நெற்றி சூடு பார்த்து பார்த்து மருந்து வாங்கி வந்த தருணங்கள் பல.

அவள் வீட்டுக்கு அவன் அதிகம் சென்றதில்லைதான். அதனால் அவள் அம்மாவுடன் இவனுக்கு அத்தனை பழக்கம் இருந்ததில்லை

‘அப்பா அடிக்கடி சொல்வார் தெரியுமா உன்னை பத்தி. ஒரு நாள் நீ இண்டியன் டீமுக்கு விளையாடுவேன்னு. சீக்கிரமே பெரிய ஆள் ஆகிடுவே பார் நீ. அப்போ என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுப்பியா? இங்கே பார் நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் சரி உன் கல்யாணத்திலே நான்தான் உன் பொண்டாட்டிக்கு தாலி முடிவேன். சொல்லிட்டேன். ஞாபகம் வெச்சுக்கோ’ பல முறை சொல்லி இருக்கிறாள் கீதா.

அவள் சொல்லும் போதெல்லாம் அழகாய் சிரிப்பான் இவன்.

‘முதல்லே நான் வாழ்க்கையிலே செட்டில் ஆகணும் கீத்ஸ். அதுக்கு அப்புறம்தான் இதெல்லாம் யோசிக்க முடியும்.’

‘அதெல்லாம் சீக்கிரமே ஆகிடுவே. நான் சொன்னதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. அந்த உரிமை எனக்குதான்’ அவள் ஆள்காட்டி விரலை அவன் முன்னே ஆட்டியபடியே சொல்வாள் அவள்.

சிரித்தபடியே கட்டை விரல் உயர்த்தி ‘டன் கீத்ஸ் ’ என்பான் இவன்.

‘ஆமாம் என்ன சொல்றான் உனக்கு பார்த்து வெச்சிருக்கிற அந்த போலீஸ்காரன்.’ இவன் பதிலுக்கு கேட்டால் அவள் முகம் அப்படியே மாறிப்போகும்.

‘என்னமோ மனசு ஓட்ட மாட்டேங்குது ஹரிஷ் அங்கே. அம்மா புள்ள ரெண்டு பேருக்கும் எப்பவும் அவங்க நினைச்சதுதான் நடக்கணும். ரொம்ப பிடிவாதம். அவர் என்கிட்டே பேச, நெருங்கி வரத்தான் ட்ரை பண்றார் எனக்கு பிடிக்கலை’

‘பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு அம்மாகிட்டே சொல்ல வேண்டியதுதானே?’

‘சொன்னா கூட நல்லாத்தான் இருக்கும். ஆனா எப்படின்னுதான் தெரியலை. பார்க்கலாம்’ என்பாள் தளர்ந்த குரலில்.

அவள் அடிக்கடி இதையே சொல்லிக்கொண்டிருக்க அவளுக்கு ஷங்கரை பிடிக்கவில்லை என்பதே அவன் மனதில் பதிந்து போனது.

நாட்கள் இப்படியே ஓடிக்கொண்டிருக்க அன்று கல்லூரி முடிந்து வெளியே ஒன்றாக வந்தனர் ஹரிஷும் கீதாவும். அவர்களுடனே இன்னும் இரண்டு மூன்று நண்பர்களும்.

‘மழை வரா மாதிரி இருக்கு. நான் உன்னை டிராப் பண்றேன் வா அவளையும், மற்றவர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு அவள் வீடு நோக்கி நகர்ந்தான் ஹரிஷ். அங்கே அடுத்து காத்திருப்பது என்னவென்று அறியாமல்.

இவர்கள் அவள் வீட்டு வாசலை அடைய அங்கே வெளியிலே நின்றிருந்தனர் ஷங்கரும் அவன் அம்மாவும். வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்ப தயாரக வெளியில் வந்தார்கள் போலும்.

காரை விட்டு கீழே இறங்கியவள், அவர்களை பார்த்ததும் சட்டென மறுபடியும் காருக்குள் வந்து அமர்ந்துக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் ஹரிஷ் கீழே இருந்தவர்களையும், கீதாவையும் மாறி மாறி பார்க்க

‘நாம எங்கேயாவது போகலாம் ஹரிஷ். இப்போ வீட்டுக்கு வேண்டாம்’ என்றாள் அவள்.

‘ஏன்மா?’ அவன் கேட்க

இப்போ நான் கீழே போனா அவன் ‘ஹாய்...’ன்னு பல்லைக்காட்டுவான் தோள் மேலே கை போடுவான். எனக்கு என்னமோ எரிச்சலா இருக்கு’ முகத்தை சுருக்கிக்கொண்டு சொன்னாள் கீதா.

அதற்குள் காருக்கு அருகில் வந்த ஷங்கர் ஹரிஷின் ஜன்னலை தட்டினான். கீழே இறங்கு என்பது போல் சைகை செய்தான். ஒரு முறை கீதாவை திரும்பி பார்த்துவிட்டு கீழே இறங்கினான் ஹரிஷ்.

‘சார் யாரு? ஹீரோ சாரா? மேடமை என்கிட்டே இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போக போறீங்களா?’’ என்றான் சூடாக. அவர்கள் இருவரையும் பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தார் அவன் அம்மா லோசனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.