(Reading time: 17 - 34 minutes)

அதற்குள் மற்ற நண்பர்களும் காரை விட்டு இறங்க, கீதவுமே இறங்கி ஓடி வந்து ஹரிஷின் பின்னால் நின்றுக்கொண்டாள். அது இன்னமும் வெறுப்பேற்றியது ஷங்கரை. எந்த ஆணுக்கும் வரும் சராசரி கோபம்.

அங்கே நின்றவர்களின் மீது ஒரு முறை பார்வையை சுழற்றி விட்டு சட்டென அவள் கையை பிடித்து முன்னால் இழுத்தான்.

‘நான் என்ன செஞ்சேன் உன்னை? இப்போ எதுக்கு என்னை பார்த்து பயந்தா மாதிரி போஸ் கொடுத்திட்டு அவன் பின்னாலே போய் நிக்கறே?’

‘ப்ச் கையை விடுங்க முதல்லே. இவள் சிடுசிடுக்க

‘ஏன் என்ன பிரச்சனை உனக்கு?’ ஷங்கர் உறும

‘’எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.’ என்றாள் கீதா பட்டென.

‘பிடிக்கலையா? என்ன பிடிக்கலை. என்னை பிடிக்கலையா?’ அவன் சீற

‘அவதான் பிடிக்கலைன்னு சொல்றா இல்ல. நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க’ தன்மையான தொனியில் சொல்லியபடியே இடை புகுந்தான் ஹரிஷ்.

சுள்ளென பொங்கிய கோபத்துடன் அவள் கையை விடுவித்தவன் ஹரிஷ் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவனை பிடித்து ஒரே தள்ளாக தள்ளிவிட்டான் ஷங்கர்.

‘உன் ஹீரோத்தனத்தை எல்லாம் வேறே எங்கேயாவது காட்டு’

சற்றே தடுமாறியவன் காரை பிடித்து சமாளித்துக்கொண்டான். அவன் நண்பர்கள் அவன் அருகில் வர .

‘ஷங்கர் இப்போ ஹரிஷை ஏன் அடிக்கறீங்க?’ கீதா இடையில் வர

‘அடிச்சேனா எங்கே அடிச்சேன்? வேணும்னா ஒரு தடவை அடிச்சு காட்டட்டுமா? போலிஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு காட்டட்டுமா? என மறுபடியும் ஹரிஷின் சட்டை மீது ஷங்கர் கை வைத்த நேரத்தில் சட்டென அவனை ஹரிஷ் தள்ளிய வேகத்தில் அப்படியே கீழே விழுந்திருந்தான் ஷங்கர்.

‘தொட்டாலே கீழே விழறீங்களே? அய்யோ பாவம். முதல்லே உடம்பை தேத்துங்க மிஸ்டர் போலீஸ்கார். அதுக்கு அப்புறம் என்னை அடிக்கலாம்’ சுறுசுறுவென ஏறிய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தபடியே நக்கலாக ஹரிஷ் சொல்ல நண்பர்கள் மத்தியில் பலமான சிரிப்பலை.

அவமானத்தில் கொதித்து போனான் ஷங்கர் என்றால் எரிமலையாக நின்றிருந்தார் அவன் அம்மா லோசனா.

‘அய்யோ. மாப்பிள்ளை என்னாச்சு?’’ அவன் எழுவதற்குள் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தார் கீதாவின் அம்மா. அவர் ஹரிஷுடன் அதிகமாக பேசியது பழகியது இல்லையே! இந்த நிகழ்வினால் அவரது மனதில் மொத்தமாக சரிந்திருந்தது ஹரிஷின் மீதான மதிப்பு.

‘யாருக்கெல்லாம் இடம் கொடுத்து வெச்சிருக்கா பாரு உன் பொண்ணு. வீட்டுக்கு வரப்போற மாப்பிளையை இப்படிதான் கை நீட்டி அடிப்பீங்களா. போதும் இதோட முடிச்சுக்கலாம் இந்த கல்யாண பேச்சை’ லோசனா அவள் அம்மாவை பார்த்து சீற

அய்யோ.. ஏன் அவசரபடறே லோசனா. உள்ளே வா நாம பேசலாம்’ அவள் அம்மா பதற பிரச்சனை சற்றே பெரிதாவதை புரிந்துக்கொண்டவளாக

‘கிளம்பு ஹரிஷ். கிளம்புங்க எல்லாரும்’ அவசரப்படுத்தினாள் கீதா.

‘இல்ல கீத்ஸ் பிரச்சனை..’ அவன் ஏதோ சொல்ல வர

‘நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு. நாளைக்கு காலேஜ்லே பேசிக்கலாம். ப்ளீஸ் கிளம்பு’ அவனை அவசரப்படுத்தினாள் கீதா. அரை மனதுடன்தான் கிளம்பினான் ஹரிஷ்.

அதன் பிறகு இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை கீதா. இவனது அழைப்புகளுக்கும் பதில் இல்லை. இவன் இரண்டு நாட்கள் நிம்மதியே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்க மூன்றாம் நாள் வந்து சேர்ந்தாள் கல்லூரிக்கு. இதில் ஹரிஷுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அவள் முகம் மலர்ந்து போய் கிடந்தது.

‘எனக்கு கல்யாணம் நிச்சியம் ஆகி இருக்கு ஹரிஷ். சீக்கிரமே கல்யாணம் இருக்கும்’ அவள் புன்னகையுடன் சொல்ல நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.

‘ஹேய்.. மாப்பிள்ளை யாரு?’

‘வேறே யாரு ஷங்கர்தான்’ என்றாள் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல்.

‘என்ன விளையாடுறியா நீ? ரெண்டு நாள் முன்னாடி வரை அவனை பிடிக்கவே இல்லைன்னு சொன்னேதானே நீ?’

‘அப்படி ஒண்ணும் தப்பானவங்க இல்லை ஹரிஷ் அவங்க. எங்க குடும்பம் இப்போ இருக்கிற சூழ்நிலையிலே நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுத்தான் ஆகணும்’

‘இங்கே பாரு கீத்ஸ். என்ன பெரிய சூழ்நிலை. வேறே மாப்பிள்ளை உனக்கு கிடைக்கவே கிடைக்காதா. நான் அம்மாகிட்டே பேசவா?’ அவன் கேட்க

‘அதெல்லாம் வேண்டாம்’ பதறினாள் அவள் ‘அவங்க அப்படி ஒண்ணும் மோசமானவங்க இல்லை.’ என்றாள் முகத்தில் இருந்த மலர்ச்சி மாறாமல்.

இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று சத்தியமாய் புரியவில்லை ஹரிஷுக்கு. அதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவன். சரி அவள் வாழ்க்கை அவள் இஷ்டம் என சற்றே மனதை தேற்றிக்கொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.