(Reading time: 14 - 28 minutes)

செய்து முடித்த பிறகே தான் என்ன செய்தோம் என்பதை அவனே உணர்ந்தான். காவலர்கள் சட்டென அவனை சூழ்ந்த பிறகே நடந்த தவறின் வீரியம் அவனுக்கு புரிந்தது. பொறாமை எனும் பேய் அவனை எத்தனை தூரம் தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தான் அவன்.

‘அய்யோ...’ இங்கே உச்சகட்ட பதற்றத்தில் அலறினாள் அனுராதா. அவன் மயங்கிவிட்டான் போலத்தான் தெரிந்தது டி.வியில். அவனை எல்லா ஆட்டக்காரர்களும் சூழ்ந்துக்கொண்டனர். அவனை உள்ளே தூக்கி சென்றனர்.

‘என்னவாயிற்று? என் ஹரிஷுக்கு என்னவாயிற்று? கன்னம் தாண்டி வழிந்து ஓடிக்கொண்டிருந்தது அனுராதாவின் கண்ணீர். மெல்ல மெல்ல கண்ணீர் சேர்ந்தது கீதாவின் கண்களிலும்.

‘கீத்ஸ்..கீத்ஸ்..’என்பானே வார்த்தைக்கு வார்த்தை. ‘என்னவாயிற்று என் தோழனுக்கு?’

அதற்கு மேல் எதுவம் காண்பிக்க படவில்லை டி,வியில். செய்தி சேனல்களில் அவன் அடிக்கப்பட்ட காட்சியை மறுபடி மறுபடி காண்பித்து அதை வியாபாரம் ஆக்கிக்கொண்டிருந்தனர்.

‘என்னவாயிற்று என்னவனுக்கு? என்ன செய்ய இப்போது யாரை அழைத்து கேட்க?’ அவனது கைப்பேசியை கூட  தொடர்பு கொள்ள முடியாதே இப்போது?

திடீரென்று ஒரு எண்ணம் கீதாவை பிடித்து அப்படியே உலுக்கினாள் அனுராதா

‘அண்ணி... அண்ணி..... உங்ககிட்டே ரகு நம்பர் இருந்தா கொடுங்க ப்ளீஸ். அவரை விட்டு யாரையாது கேட்க சொல்வோம். ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணி’ உடைந்து குலுங்க ஆரம்பித்தாள் அனு.

ரகுவுமே விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்ததால் அவனுமே பதற்றத்தில்தான் இருந்தான். சில நிமிடங்களில் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டிருந்தான் அவன்.

‘ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க அனு. சரியாகிடும். நான் உனக்கு சீக்கிரம் அப்டேட் பண்றேன்மா. நீ தைரியமா இரு’ என்றான் ரகு. ஆறவில்லை. அனுவின் மனம் ஆறவில்லை

‘இதற்குதான் தென் ஆப்ரிக்கா போக மாட்டேன் என்றானா அவன். நான்தான் கட்டாய படுத்தி போக சொன்னேன். இறைவா என் ஹரிஷை காப்பாற்று.’ அனு கண்ணீருடன்  பூஜை அறையில் சென்று அமர கீதாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது.

‘ஆம் அன்று நீ அவனுக்கு எதிராக சாட்சி சொல்லிய போது, உன் கணவன் அவனை அடித்த போது எங்கு போனதாம் இந்த கண்ணீர்?’ தன்னாலே குறுக்கு விசாரணை செய்தது அவள் மனசாட்சி.

மனசாட்சியின் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லைதான். ஆனாலும் கண்ணீரும் கூட நிற்கவில்லைதான்

கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து அழைத்தது அனுராதாவின் கைப்பேசி. விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தாள் அவள்.

ஏதோ ஒரு தெரியாத எண். ‘எங்கிருந்து? தென் ஆப்ரிக்காவிலிருந்தா? இறைவா. என் ஹரிஷை காப்பாற்று’.

‘ஹலோ..’ இவள் பயத்துடனே சொல்ல

எதிர்முனையில் மெதுவான குரலில் ‘லவ் யூ அனும்மா..’ என்றானே பார்க்கவேண்டும் மொத்தமாய் கரைந்து உடைந்திருந்தாள் இவள்.

‘ஹரிஷ்... ஹரிஷ்... உனக்கு ஒண்ணுமில்லல ஹரிஷ். நீ நல்லா இருக்கே இல்ல ஹரிஷ்... எங்கே அடி பட்டிருக்கு... ஹரிஷ்...’ படபடபடபடவென அவள் படபடக்க அவளை பார்த்திருந்த கீதாவின் கண்களிலும் இன்னமும் அதிகமாக கண்ணீர்.

‘.நல்லா இருக்கேன் பயப்படாதே’ என்றான் சற்றே சோர்ந்த குரலில். ‘தெரியும். நீ மேட்ச் பார்த்திட்டு இருப்பேன்னு. துடிச்சு போயிருப்பேன்னு அதான். கண் திறந்ததும் உன்னை கூப்பிட்டேன்

‘எங்கே பா அடி பட்டிருக்கு. ரொம்ப வலிக்குதா?’ என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டபடியே

‘இல்ல வலிக்கவே இல்ல’ என்று மெல்ல சிரித்தான் ஹரிஷ். .நெத்தியிலேயும் கன்னத்திலேயும். அடி பட்டிருக்குடா. சரியாகிடும்’

‘நீ எதுக்கு அவன் கூட எல்லாம் சண்டைக்கு போறே’ இது இவள் ஆதங்கம்

‘ஹேய்... அவன் உன்னை தப்பா பேசினாண்டி’ என்றான் பட்டென ‘அதெல்லாம் உனக்கு புரியாது. நியாயமா அவன் செஞ்சதை நான் செஞ்சிருக்கணும். சரி விடு. அவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் கண்டிப்பா கிடைக்கும். நான் நாளைக்கு பேசறேன். பேச முடியலை இப்போ. நீ அப்பாகிட்டே மட்டும் சொல்லிடு எனக்கு ஒண்ணுமில்லைன்னு.. பயப்படாதே அனும்மா எனக்கு ஒண்ணுமில்லை சரியா. சீக்கிரம் வந்திடுவேன்’ என அவன் துண்டிக்க போகும் நேரத்தில்

‘நான் ஒரு வார்த்தை பேசிக்கவா?’ என்றாள் கீதா.

மொத்தமாய் திகைத்துப்போனாள் அனுராதா. அவனுக்கு இது பிடிக்காது என அவளுக்கு தெரியுமே. இவள் அவளை பார்த்து வேண்டாமென தலை அசைக்க  அதற்குள் கைப்பேசியை வாங்கி இல்லை சட்டென பிடுங்கி  இருந்தாள் கீதா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.