(Reading time: 15 - 29 minutes)

அமேலியா - 44 - சிவாஜிதாசன்

Ameliya

றந்த பின் செல்லப்போகும் உலகம் எப்படியிருக்கும்? புராணங்கள் கூறும் உலகை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு விதமான உலகம். அதைத் தாண்டி நீங்கள் என்ன சிந்தித்து வைத்துள்ளீர்கள்? எப்போதாவது ஓய்வு நேரங்களில் அல்லது வாழ்க்கையை வெறுத்த வேளையில் மரணத்தைப் பற்றியும் அதன் பின் செல்லப்போகும் இடத்தையும் நீங்கள் சிந்தித்து வைத்திருப்பீர்கள். அது அவரவர் கற்பனைத் திறனைப் பொறுத்து மாறுபடும்.

நம் பூமியைப் போன்று இரண்டு லட்சம் கிரகங்கள் வான் மண்டலத்தில் மறைந்திருக்கின்றன. அவற்றில் பாதியிலாவது உயிரனங்கள் வாழலாம். மனிதனைப் போல் அல்லது மனிதனைத் தாண்டி வளர்ச்சி பெற்றிருக்கும் உயிரனங்கள் அங்கிருக்கலாம். அவர்கள் எப்படியிருப்பார்கள்? அவர்களுக்கும் மரணம் உண்டா அல்லது புராணங்களில் கூறப்படுவது போல சொர்க்கமும் ஒரு கிரகமா?

நாம் உண்மையில் மகிழ்ச்சியுடன் தான் வாழ்கிறோமா? உண்மையில் நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தமென்ன? பெற்றோர், மனைவி, பிள்ளை, சொந்தங்களை தவிர்த்து எதற்காக நாம் வாழ்கிறோம் என்று யோசனை செய்து பார்த்தால், தெரியாது என்ற பதில் தான் மனதில் தோன்றும்.

வேறு உலகில் வாழும் ஆத்மாக்களை திருடிக்கொண்டு வந்து மனிதப் போர்வையில் பூமியில் உலாவவிட்டு சோதனைக்கூட எலியைப் போல் நம்மை சோதித்துக்கொண்டிருக்கிறார்களா? புராணங்கள், அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகளாக இருந்தால், நினைத்துப் பாருங்கள்! இதுவரை நீங்கள் நம்பிக்கொண்டிருந்த விஷயங்கள் பொய் என்று வைத்துக்கொண்டால் அதன் பின் உங்கள் முடிவு என்ன?

நீங்கள் திருடப்பட்ட ஆத்மாக்களாக இருந்தால் உங்களுக்கு மரணம் ஒன்றே கிடையாது. அவர்களை தாண்டி உங்கள் ஆத்மா தப்பிக்க முடியாது. மீண்டும் மனித உடலெடுத்து ஆத்மாக்கள் பிறக்கும், மரணிக்கும். அவர்களுக்கான தீர்வு கிடைக்காத வரை நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் யார்? கடவுளா? அல்லது கடவுளையே படைத்தவர்களா?

இது போன்ற பல கேள்விகளை.இறந்தபின் சிந்தித்துக்கொண்டிருந்தான் ஹகீம். சிறு வலி கூட இல்லாமல் இறந்து போனதை அவனால் நம்ப முடியவில்லை. இறப்பு இவ்வளவு சுலபமா? அப்படியென்றால் துப்பாக்கிக் குண்டுகள் வலியை ஏற்படுத்தாதா?

இந்த உலகம் எதற்காக இவ்வளவு இருட்டாக காட்சியளிக்கிறது? வெளிச்சமிருந்தால் இந்த உலகை சிறிது நேரம் சுற்றிப் பார்க்கலாம். இந்த உலகில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா? அப்படியென்றால் நாம் தான் இவ்வுலகின் அரசன். இந்த உலகிற்கு என்ன பெயர் சூட்டுவது?

"ஹகீம்". உலகில் ஏதோ ஒரு மூலையில் குரல் ஒலித்தது. 'ஆம். இந்த உலகின் பெயர் ஹகீம் என்றே வைத்துக்கொள்வோம்'.

முகத்தில் விட்டு விட்டு மழை பெய்ய கண்களைத் திறந்தான் ஹகீம். அவனைச் சுற்றி ஏராளமான முகங்கள் அவனையே

பார்த்துக்கொண்டிருந்தன. இந்த முகங்களையெல்லாம் பூமியில் பார்த்தது போலவே இருக்கின்றனவே!  

ஹகீமின் உடலை மடி மீது வைத்து அழுதுகொண்டிருந்தான் ஒருவன். தன் பார்வையை அவன் மேல் திருப்பிய ஹகீம் அதிர்ந்தான். அவனை வேவு பார்த்துக்கொண்டிருந்த தீவிரவாதி கையில் தண்ணீர் குடுவையை வைத்தபடி அழுதுகொண்டிருந்தான்.

"கண்களை திறந்துட்டான். தண்ணீர் கொடுங்க". கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கூற ஹகீமிற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. அவன் பயத்தில் விழுங்க சிரமப்பட்டான். ஓரளவிற்கு சுயநினைவு வந்த பின் தான் இன்னும் சாகவில்லை என்ற உண்மையே அவனுக்கு புரிந்தது.

கூட்டம் அதிகமாக இருக்க, அங்கு வந்த ராணுவத்தினர் கூட்டத்தை விலக்கி என்னவென்று விசாரித்தனர்.

"தங்கச்சி மகன் சார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க வந்தோம். திடீர்னு மயங்கி விழுந்துட்டான்"

"எங்கிருந்து வரீங்க?"

தீவிரவாதி திடுக்கிட்டான். சுதாரித்துக்கொண்டு போலியான முகவரியை சொன்னான். ஹகீமின் முகத்தை ஒருமுறை நோக்கிய ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்றனர். கூட்டமும் மெல்ல கலைந்தது. தீவிரவாதி, ஹகீமை அழைத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு சென்றான்.

"என்ன செஞ்சு தொலைச்ச?"

"நீங்க சொன்னது போல தான் நடந்துக்கிட்டேன். இந்த ரிமோட்டை அழுத்தியும் பாம் வெடிக்கல. இதுல என் தப்பு எங்க இருக்கு?"

தீவிரவாதி ரிமோட்டை வாங்கி பரிசோதித்தான். ஹகீம் சொன்னது நிஜமென புரிந்தது.  

"சே! எல்லாமே வீணா போச்சு"

மரணம் தன்னை இன்னும் நெருங்காததை எண்ணி நிம்மதியடைந்தான் ஹகீம்.

"இது எப்படி வேலை செய்யாம போச்சு" என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டான் தீவிரவாதி.

"இப்போ நான் என்ன செய்யுறது?"

"நீ உன் இடத்துக்கு போ. நான் தேவைப்படும்போது கூப்பிடுறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.