(Reading time: 15 - 29 minutes)

"ஆமா, நாளைக்கு ஓவியரை பாத்தே ஆகணுமாம்"

"நான் அன்றைக்கு சொன்னது போல டிராமா பண்ணு"

"புரியல"

ஜான் வசந்தின் காதில் ரகசியத்தை கூற, "அட ஆமால்ல, இதை போய் மறந்துட்டனே" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

காலைப் பொழுது. சூரிய வெளிச்சம் குளிருக்கு சற்று இதம் கொடுத்தது. வசந்தின் கார் அந்த சிறிய வீட்டின் முன்னால் நின்றது. அந்த வீதியில் உள்ள வீடுகள் அனைத்தும் சிறியதாகவே இருந்தது. நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழ்மையானவர்கள் மட்டும் தங்கும் வீடுகள் அவை. அந்த வீதியின் நடுவே நான்கைந்து சிறுவர்கள் கால்பந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

"நல்லா தெரியுமா? இந்த வீடு தானே?" ஜான் கேட்டான்.

மரத்திலான கேட்டை திறந்தபடி உள்ளே சென்றான் வசந்த். காலிங் பெல் அழுத்தப்பட்டு கதவும் திறக்கப்பட்டது. திறந்தவள், வசந்தை அடையாளம் தெரிந்துகொண்டு கைகளை குலுக்கினாள். இருவரையும் உள்ளே அழைத்து பருகுவதற்கு சிறிது நேரத்தில் காபியையும் கொடுத்தாள்.

"சொல்லு லூஸி, உன் வேலை எப்படி போகுது?"

"நான் போட்ட இந்த சுவையில்லாத காபியை போல தான். எந்த முன்னேற்றமும் இல்லை. நான் நல்லா நடிப்பேன்னு என்னை தவிர யாரும் நம்பல. அப்படியே வாய்ப்பு கிடைச்சாலும் கூட்டத்தோட கூட்டமா நிக்குறேன். அந்த சீனை கூட எடிட்டிங்ல வெட்டி வீசிடுறாங்க. இந்த நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டு ஹோட்டல்ல வேலை பாக்கலாம்னு நினைக்குறேன்"

"என்னை விட உங்க வாழ்க்கை கடினமானதா இருக்கும்னு நினைக்குறேன்" என்றான் ஜான்.

லூஸி சிரித்தாள். "என்னை தேடி வந்ததுக்கான காரணம்?" என்று வசந்திடம் விசாரித்தாள்.

"எனக்காக நடிக்கணும்"

"படமா? விளம்பரமா?"

"கேமரா இல்லாம தனிப்பட்ட முறையில"

"புரியல"

வசந்த் லூசியிடம் ஓவியராய் நடிக்க வேண்டியதற்கான காரணத்தை, அமேலியாவை தவிர்த்து, திரைக்கதையை ஜோடித்து கூறினான்.

"அந்த ஓவியர் ஊருக்கு போய்ட்டாங்க. அவங்களுக்கு பதிலா நான் நடிக்கணும்"

"ஆமா"

"இதுல, வேற எதுவும் பிரச்சனை வந்துடாதே"

"எதுவும் வராது. உன் பேரு அமேலியான்னு மட்டும் சொல்லு போதும்"

"எனக்கு பயமா இருக்கு"

"நீ எதிர்பாக்குறதை விட பணம் அதிகமா தரேன்"

"எப்போ வரணும்?"

"இன்னைக்கு இரவு"

ரவு ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வழக்கம் போல பரபரப்பு, பேச்சுக்கள், பொருட்களை நகர்த்தி வைக்கும் சப்தங்கள், "மேக்கப் போட்டாச்சா" "ஹீரோ என்ன செஞ்சிட்டு இருக்காரு" "டைம் ஆகுது பாரு" என்று டைரக்டர் கத்திக்கொண்டிருந்தார்.

"வசந்த்! ஓவியர் வந்துட்டாங்களா"

"ஆன் தி வே"

"இன்னைக்கு கண்டிப்பா அவரை சந்திப்பேன்ல"

"நிச்சயமா"

காட்சிகள் படமாக்கப்பட்டன. முதல் காட்சியில் டைரக்டருக்கு திருப்தியில்லை. அடுத்த டேக்கிலும் முக பாவனைகள் எதோ மிஸ்ஸிங். அதனால் டைரக்டர் அநேக டென்ஷனாக இருந்தார்.

"இந்த டைரக்டருங்க மாரடைப்பால தான் சாவாங்கனு நினைக்குறேன்" என்றான் ஜான் வசந்திடம்.

"ஏன் அப்படி சொல்லுற?"

"இப்படி கோவப்பட்டா ரத்தம் கொதிக்காது?". திடீரென ஜான் எதையோ எண்ணி சிரித்தான்.

"ஏன் சிரிக்குற?"

"இந்த ஆளுக்கு பர்ஸ்ட் நைட் நடந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்"

"நீ சொல்லுறது புரியல"

"அந்த ஆளை பாரு புரியும்"

"சொன்ன வேலையை ஒழுங்கா செய்யுறீங்களா. எல்லாத்தையும் நானேவா கத்து கொடுக்குறது. உங்களுக்குன்னு சுய அறிவே இல்லையா. உங்களுக்குள்ள சில பீலிங்ஸ் இருக்கு. அதை வெளிப்படுத்தனும். எனக்குன்னு வந்து வாய்க்குது பாரு மரமண்டைங்க" என டைரக்டர் கத்திக்கொண்டிருந்தார்.

'உண்மையில் இதே வார்த்தைகளை பர்ஸ்ட் நைட்டில் கூறினால் எப்படியிருக்கும்' என வசந்த் எண்ணி சிரிக்க .ஜானும் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.