(Reading time: 15 - 29 minutes)

வயதான பெண்மணிகள், சிறிய குழந்தைகள் என நிரம்பியிருந்த அந்த கூட்டத்தில் கடைசியாக இருந்த பஹீராவை சென்று பார்த்தான் ஹகீம்.

பஹீரா உறங்காமல் அழுதுகொண்டிருந்தாள். தன் அண்ணனைக் கண்டதும் அவன் முகத்தில் சந்தோசம். ஹகீம் அவளை அணைத்துக் கொண்டான். இருவருக்குள்ளும் சந்தோசம். ஆனால், கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

ஜானின் வீடு பழையபடி புத்துயிர் பெற்று ஷூட்டிங் அலங்காரத்தோடு கோலாகலமாக காட்சி தந்தது. ஷூட்டிங் ஆட்கள், மேக்கப் போடும் பெண்கள், ஆடை வடிவமைப்பாளர் என எல்லோரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.  

முதலில் இரவு நேர ஷூட்டிங் தொடங்கப்பட்டது. பௌர்ணமி நிலவு தனது பால் கதிர்களால் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது. மென்மையான குளிர் தென்றல் அங்கே உலவ, யாரும் களைப்பில்லாமல்

வேலைசெய்துகொண்டிருந்தனர்.

ஜானின் முகம் மட்டும் சோக கீதம் வாசித்துக்கொண்டிருந்தது. அருகில் இரு பயில்வான்கள் அவனை எங்கும் செல்ல விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஜெஸிகா அழகான ஆடை அணிந்துகொண்டு வலம் வந்தது ஜானிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"இத்தனை நாளா பரதேசி மாதிரி டிரஸ் போட்டுட்டு இருந்தா. இப்போ மட்டும் தேவதை மாதிரி சுத்திட்டு இருக்கா"

வசந்த், மாடல் பெண்ணிற்கு காட்சியை விளக்கிக்கொண்டிருந்தான். அவன் முகம் வாட்டமாக இருந்தது.

"இங்கேயும் சொல்லி கொடுக்குற வேலை தானா? ஏற்கனவே ஒருத்திக்கு இங்கிலிஷ் கத்து கொடுக்குறேன்னு காமெடி பண்ணிட்டு இருந்தான்" என்றபடி கார் ஷெட்டை நோக்கினான் ஜான்.

"அங்க என்ன பாக்குற?" என்றான் பயில்வான்.

"பாக்குறதுக்கு கூட உங்க கிட்ட பர்மிசன் வாங்கணுமா?"

"எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்"

"அப்படியா? இப்போ என் கால் அரிக்குது. சொறிஞ்சிக்க போறேன். இப்போ எனக்கு கொட்டாவி வருது. விடட்டுமா வேண்டாமா?"

"கடவுளே!" என நொந்துகொண்டான் பயில்வான்.

ஷூட்டிங் ரிகர்சல் வீட்டினுள்ளும் சில காட்சிகள் வெளியிலும் நடைபெற்றன. வசந்தின் முகம் மட்டும் வாட்டத்துடன் இருந்ததை ஜான் கவனித்துக்கொண்டே இருந்தான்.

'இவனுக்கு என்ன ஆச்சு? பச்சை மிளகாயை மென்ன மாதிரி முகத்தை வச்சிருக்கான்'

"வசந்த்!" என்று கத்தினான் ஜான்.

என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தான் வசந்த்.

இங்கே வா என்பது போல் சைகையில் அழைத்தான் ஜான்.

கொஞ்சம் பொறு என்று சைகை காட்டிவிட்டு வீட்டினுள் சென்றான் வசந்த்.

இரவு பத்து மணி வரை வேலை நடைபெற்றது. பின்னர் ஷூட்டிங் ஆட்கள் வேனில் அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர். மீதமிருக்கும் சிலர் கேரவனிலும் வீட்டிலும் ஆங்காங்கே தங்கிக்கொண்டனர்.

பயில்வான்களுக்கும் உறக்கம் வரவே ஜானை விட்டு வீட்டிற்குள் சென்றனர். அவர்கள் சென்ற பின்னும் அவர்கள் இருப்பது போலவே உணர்ந்த ஜான் எழும்பாமல் அங்கேயே அமர்ந்துகொண்டிருந்தான்.

அமேலியாவிற்கு உணவினை எடுத்துக்கொண்டு கார் ஷெட்டிற்குள் நுழைந்தான் வசந்த். அமேலியா உறங்கிக்கொண்டிருந்தாள். அருகில் சில காகிதங்கள். அதில் ஆங்கில எழுத்துக்களை கிறுக்கியிருந்தாள். அவள் வரையும் ஓவியம் அளவிற்கு கையெழுத்து ஒன்றும் மெச்சும்படி இல்லை. இருந்தும், அவள் எழுதிப் பழகியதே வசந்திற்கு புத்துணர்ச்சியை தந்தது.

அமேலியாவை எழுப்பினான். அவள் எழவில்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் மேலும் அவளை தொந்தரவு செய்ய விரும்பாத வசந்த், கார் ஷெட்டை விட்டு வெளியே வந்து ஜானை நோக்கி சென்றான்.

"ஜான் என்ன இங்கேயே உக்காந்துட்டு இருக்க?"

"இவனுங்க எங்க என்னை போக விடுறானுங்க?"

"யாரு?"

"இதோ இவனுங்க தான்" என்று இரு பக்கமும் பார்த்து, "அட! ச்சே!" என்று தலையில் கை வைத்துக்கொண்டான். "தடிமாட்டு பசங்க" என்று பயில்வான்களை திட்டிய ஜான் வசந்தை நோக்கினான்.

"உனக்கென்ன ஆச்சு? திருடன் மாதிரி முழிச்சிட்டு இருக்க?"

நீண்ட மூச்சினை வெளியேற்றிய வசந்த், ஜான் அருகில் அமர்ந்தான். "எல்லாம் இந்த டைரக்டர் காதலி தான்"

"அவ என்ன பண்ணா? அந்த சொட்டையை கழட்டி விட்டுட்டாளா?"

"இல்லை, ஓவியரை பாக்கணுமாம்"

"இன்னுமா அவ ஓவியரை ஞாபகத்துல வச்சிட்டு இருக்கா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.